டாஸ்மாக் ‘பத்து ரூபாய்’ கொள்ளை: ருசி கண்ட பூனைகளும் ஏமாந்த குடிகளும்
தமிழகத்தில் ஆட்சி மாற்றங்கள் நிகழும்போது, ஏழை எளிய மக்களின் தேவைகள் நிறைவேறு கிறதோ இல்லையோ, ‘குடி’மகன்களின் எதிர்பார்ப்புகள் எப்போதும் எகிறியே கிடக்கின்றன. திமுக, அதிமுக ஆகிய இருபெரும் திராவிடக் கட்சிகளின் ஆட்சிக்காலங்களிலும் தங்களை உறிஞ்சிய அந்த “எக்ஸ்ட்ரா 10 ரூபாய் கொள்ளை”, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்றதும் ஒழிந்துவிடும் என்று குடிகாரப் பெருமக்கள் எதை வைத்துத்தான் கற்பனை செய்தார்களோ, தெரியவில்லை!
ஆனால், யதார்த்தம் இன்று தலைகீழாக மாறியிருக்கிறது. தமிழகத்தின் மூலைமுடுக்கெல்லாம் உள்ள டாஸ்மாக் கடைகளில் இன்று அரங்கேறும் காட்சிகள், ஏதோ ஒரு புரட்சி வெடிப்பதைப் போன்ற தோற்றத்தைத் தருகின்றன. ஒவ்வொரு கடையிலும் வாடிக்கையாளர்கள் தங்கள் செல்போன் கேமராக்களை ஆன் செய்து கொண்டு, ஊழியர்களின் முகத்திற்கு நேரே நீட்டி, ’’உனக்கேன் கொடுக்க வேண்டும் 10 ரூபாய்? யாருக்குப் போகிறது இந்தத் பணம்?’’ என்று வீரபாண்டிய கட்டபொம்மன் பாணி வசனம் பேசி, சமூக ஊடகங்களில் பதிவிடும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகின்றன.
‘டாஸ்மாக்’ அதிரடியும் பக்கத்து ஏரியா லந்தும்!
விஜய் அரசு பொறுப்பேற்ற நாள் முதல், அன்றாடம் ஒரு டாஸ்மாக் அப்டேட் வந்துகொண்டே இருக்கிறது. “டாஸ்மாக் மூடல், டாஸ்மாக்கில் கெடுபிடி, பார் உரிமங்கள் ரத்து, லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடி” என தினசரிச் செய்திகள் வெளியாகி, இந்த அரசே டாஸ்மாக்கை சுத்தம் பண்ண மட்டும்தான் வந்ததோ என்கிற பிம்பத்தை உருவாக்கத் தொடங்கியதுதான், இந்த குடிமக்களின் திடீர் தைரியத்திற்குக் காரணம்!
முன்னாள் முதல்வர்கள் கலைஞர், ஜெயலலிதா மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோர் கூட தங்கள் ஆட்சிக் காலத்தின் தொடக்கத்தில் “500 டாஸ்மாக் கடைகள் மூடல்” என்ற கோப்பில் கையெழுத்திட்டனர். ஆனால், இம்முறை விஜய் ஆட்சியில், “இதையெல்லாம் மூடவே முடியாது” என்று பொதுமக்களால் நினைக்கப்பட்ட, பல சர்ச்சைக்குரிய இடங்களிலிருந்த கடைகள் நிஜமாலுமே மூடப்பட்டிருப்பது ஓரளவுக்கு உண்மைதான் என்பதை மறுப்பதற்கில்லை.
ஆனால், இந்த அதிரடியால் ஒரு விசித்திரமான சமூகப் பிரச்னையும் வெடித்திருக்கிறது. கடைகள் மூடப்பட்ட ஏரியா ஜனங்கள், மதுபானம் வாங்குவதற்காகப் பக்கத்து ஏரியா கடைகளுக்குப் படையெடுக்கத் தொடங்கியுள்ளனர். அங்கே, அந்தந்த உள்ளூர் குடிகாரர்கள், சினிமா பாணியில், “ஏய்… எங்க ஏரியாவுக்குள்ளே வந்து சரக்கடிக்கிறீயா?” என்று ‘டெரிட்டோரியல் கிங்’காக மாறி லந்து பண்ணும் கலாச்சாரமும், அதனால் சட்டம்-ஒழுங்குப் பிரச்னைகளும் ஆங்காங்கே முளைக்கத் தொடங்கியுள்ளன.
இரண்டு ரூபாயில் தொடங்கிய ‘சாபக்கேடு’
இந்தச் சூழலில்தான், மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் எழுப்பும் அந்த ஒற்றைக் கேள்வி நம் காதுகளைத் துளைக்கிறது: “பத்து ரூபாய் மேட்டர்… ருசி கண்ட பூனைகள் விடுமா?”
இதன் பின்னணியில் இருக்கும் 20 ஆண்டுகால வரலாற்றை நாம் உற்று நோக்க வேண்டும். ஆரம்பத்தில், உடைந்துபோகும் பாட்டில்களின் (Damage Pieces) நஷ்டத்தைச் சரிசெய்யவும், பீர் பாட்டில்களைக் குளிர்ச்சியாக (Cooling) வைப்பதற்கான பிரிட்ஜ் கரண்ட் பில் செலவிற்காகவும் டாஸ்மாக் கடை ஊழியர்கள் ‘இரண்டு ரூபாய்’ எக்ஸ்ட்ரா வாங்க ஆரம்பித்தார்கள். வாடிக்கையாளர்கள் கேள்வி கேட்டபோது, “ஐயா, எங்களுக்கு ரொம்ப ரொம்ப குறைவான சம்பளம், வேறு வழி தெரியாமல் வாங்குகிறோம்” என்று தயங்கித் தயங்கி, கூச்சத்தோடுதான் வாங்கினார்கள். “உங்களுக்கு இஷ்டமிருந்தால் மட்டும் கொடுங்கள்” என்ற நிலையும் இருந்தது. குடிமக்களும் பரிதாபப்பட்டு அதைக் கொடுத்தனர்.

ஆனால், இந்த இரண்டு ரூபாய் வசூலிலேயே ஊழியர்களுக்கு தினசரி எக்கச்சக்கமான ‘கலெக்ஷன்’ சேர்ந்தது. இந்த உபரிப் பணம், டாஸ்மாக் மண்டல அலுவலக அதிகாரிகளின் கண்களை உறுத்தத் தொடங்கியது. “கீழ் மட்டத்திலேயே இவ்வளவு தேறுகிறதே, எங்களுக்கும் பங்கு கொடுங்கள்” என்ற கோரிக்கை, நாளாக நாளாகக் கட்டளையாக மாறியது.
அமைச்சர் லெவல் ‘டார்கெட்’
அடுத்த கட்டமாக, மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு, உள்ளூர் போலீஸ், அந்தந்த ஏரியாவின் ஆளுங்கட்சிப் பிரமுகர்கள் என அனைவரும், “நாங்கள் மட்டும் என்ன வேடிக்கை பார்க்கவா இருக்கிறோம்?” என்று பங்கு கேட்க, கடைசியில் இந்த விவகாரம் துறை அமைச்சரின் வீடு வரை போய் முடிந்தது. அதன் பிறகுதான், “ஒரு கடைக்கு இவ்வளவு கொடுத்தாக வேண்டும்” என்று அதிகாரப்பூர்வமற்ற ‘மாதாந்திர டார்கெட்’ நிர்ணயிக்கப்பட்டது.
கேள்வி கேட்க வேண்டிய அத்தனை அதிகார அமைப்புகளும், தங்களின் பங்கைச் சரியாகப் பெற்றுக்கொண்டதால், டாஸ்மாக் ஊழியர்கள் அசைக்க முடியாத ஒரு பாதுகாப்பான இடத்திற்குப் போய் உட்கார்ந்து கொண்டனர்.
ஒரு கணக்கு: தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான விற்பனையின் ஓராண்டு வருமானம் தோராயமாக ₹40,000 கோடி என்று வைத்துக்கொண்டால், அதில் சராசரியாக 5% கூடுதல் கட்டணமாக (எம்.ஆர்.பி-க்கு மேல்) வசூலிக்கப்பட்டாலும், ஆண்டுக்குக் குறையாமல் ₹2,000 கோடி ரூபாய் கறுப்புப் பணமாகத் தேறும்!
ஏமாந்த குடிமக்கள்; நடிக்கும் அரசு!
இத்தனை துறைகளும், அதிகாரிகளும் கூட்டாகச் சேர்ந்து, பல ஆண்டுகளாக இம்புட்டுப் பெரிய தொகையை ருசி கண்ட பிறகு, அதை அவ்வளவு எளிதாக விட்டுவிடுவார்களா? விஜய் தலைமையில் ‘தவெக’ ஆட்சி அமைந்த பிறகும், இன்று தமிழகம் முழுக்க அதே எக்ஸ்ட்ரா 10 ரூபாய் கலெக்ஷனை டாஸ்மாக் ஊழியர்கள் நிறுத்தவில்லை; நிறுத்தவும் முடியாது.
ஆனால், “ஆட்சி மாறிவிட்டது, இனி அநியாயப் பத்து ரூபாய் ஒழிந்துவிடும்” என்று தப்புக் கணக்குப் போட்டு, கனவு கண்டிருந்த மதுப்பிரியர்கள்தான் கடும் அதிர்ச்சிக்கு ஆளாகி, ஆங்காங்கே டாஸ்மாக் ஊழியர்களுடன் சட்டையைப் பிடித்துக் கட்டிப் புரண்டு சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
இங்கு மாறியிருப்பது ஆட்சிக் கட்டிலும், முதலமைச்சர் நாற்காலியும்தானே தவிர, சிஸ்டம் மாறவில்லை. இதில் வேடிக்கை என்னவென்றால், இந்த ‘டென் ருபி’ மாஃபியாவின் பின்னணியும், அதன் நெட்வொர்க்கும் புதிய அரசின் கீழ் மட்ட அதிகாரியிலிருந்து மேல் மட்ட வி.ஐ.பி-க்கள் வரை அத்தனை பேருக்கும் அக்குவேராக ஆணிவேராகத் தெரியும். தெரிந்தும், தங்களுக்கு எதுவுமே தெரியாதது போல், அத்தனை பேரும் கள்ள மௌனம் காத்து நடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் இந்த ‘புதிய’ ஆட்சியின் நிசப்தமான உண்மை!
சென்னை நிருபர்


