தலைவன் தலைவி – விமர்சனம்!
முன் எச்சரிக்கை
நமது அன்றாட வாழ்வில் சத்தமான ஒலிகளை எதிர்கொள்வது சாதாரணமாகிவிட்டது. ஆனால், யாரோ ஒருவர் தொடர்ந்து சத்தமாகப் பேசுவதைக் கேட்பது, வெறும் எரிச்சலைத் தாண்டி, நமது உடல்நலத்திலும் மனநலத்திலும் தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். இத்தகைய தொடர்ச்சியான ஒலி மாசுபாடு உங்கள் மனநிலையைப் பாதித்து, செவித்திறன் குறைபாடு, படபடப்பு, உயர் இரத்த அழுத்தம் (ஹைபிபி) போன்ற பல உடல்நலக் கோளாறுகளை வரவழைக்கும் அபாயம் உள்ளது. மென்மையான பேச்சு என்பது வெறும் புறச்சூழல் காரணி மட்டுமல்ல, அது நமது ஆரோக்கியமான இருப்புக்கும் அவசியமான ஒரு உள்நிலை தேவை. இந்த முன் குறிப்பு ஏனென்றால் இப்படத்தில் நாயகன் நாயகி தொடங்கி அனைவரும் கத்தி கத்தி பேசி நம் காதுகளை பதம் பார்ப்பத்தில் ஜெயித்து விடுகிறார்கள் என்பதை சுட்டக் காட்டவே.
சத்யஜோதி பிலிம்ஸ் டிஜி தியாகராஜன் வழங்க, செந்தில் மற்றும் அர்ஜுன் தயாரிப்பில், இயக்குனர் பாண்டிராஜ் தனது “ஃபேமில் மூவி ஸ்பெஷலிஸ்ட்” முத்திரையை வாங்க களமிறங்கியிருக்கும் “தலைவன் தலைவி”, கணவன்-மனைவி சண்டையை மையமாகக் கொண்டு ஒரு காமெடி கலவரத்தை அரங்கில் அரங்கேற்றியிருக்கிறது. விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடிப்பில், சந்தோஷ் நாராயணனின் இசையில், சுகுமாரின் கேமராவில் வெளியான இந்த பரோட்டா போர், எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்த ஒரு ஃபேன்டஸி ஃபேமிலி ட்ராமாவாக விரிகிறது.
கதைக்களம்: பரோட்டா சுடும் வாழ்க்கையும், சூடான சண்டையும்
தூங்காநகரத்துக்கு பக்கத்து ஊரைச் சேர்ந்த பேரரசி (நித்யா மேனன்), பரோட்டா கடை வைத்திருக்கும் ஆகாசவீரனை (விஜய் சேதுபதி) காதலிக்கத் தொடங்குகிறார். சில பல குழப்பங்களையும், எதிர்ப்புகளையும் மீறி இவர்களது திருமணம் நிச்சயிக்கப்பட்ட பிறகு, இருவரும் மனதளவில் ஈர்க்கப்படுகின்றனர். ஆனால், ஒரு சூழலில் ஆகாசவீரனின் பின்னணியை அறிந்த பேரரசியின் குடும்பத்தினர் இந்த வரனை வேண்டாம் என மறுக்கின்றனர். அதேசமயம், பேரரசியைத் திருமணம் செய்தால் எதிர்காலத்தில் தனது பெற்றோர் மருமகளால் ஒதுக்கப்படுவார்கள் என ஜோசியக்காரர் சொன்னதைக் கேட்டு ஆகாசவீரனின் குடும்பமும் இந்தத் திருமணத்தை நிறுத்த நினைக்கின்றது. அப்படி இரு குடும்பத்தினரின் எதிர்ப்பையும் மீறி, ஆகாசவீரன் பேரரசியைத் தன் வீட்டுக்கு அழைத்து வந்து திருமணம் செய்துகொள்கிறார். ஆரம்பத்தில் நன்றாகச் செல்லும் இவர்களின் குடும்ப வாழ்க்கையில், மாமியார் – மருமகள் பிரச்சினை, நாத்தனார் பிரச்சினை என விரிசல்கள் மெல்ல எழ ஆரம்பிக்கின்றன. இந்த விரிசல்கள் போகப்போக பெரிதாகி, ஒரு கட்டத்தில் இது வெறும் கணவன்-மனைவி சண்டையாக இல்லாமல், இரண்டு குடும்பங்களின் மோதலாக மாறி, அடிதடி, கொலை முயற்சி, விவாகரத்து என உச்சகட்ட பரபரப்பை எட்டுகிறது. இந்த “பரோட்டா போர்” என்னவாகிறது என்பதே படத்தின் கிளைமாக்ஸ்.
விஜய் சேதுபதி Vs நித்யா மேனன்: ஒரு அதிரடி ஜோடி
விஜய் சேதுபதியின் “பரோட்டா பெயர்களைச் சொல்லி நித்யா மேனனை வளைத்துப் போடும்” பெண்பார்க்கும் காட்சி, படத்திற்கே ஒரு தனி ரசனையை கூட்டுகிறது. இந்த ஜோடி இணைந்த பிறகு வாழ்வில் இணைபிரியாதவர்களாக இருப்பார்கள் என்று எதிர்பார்த்தால், சண்டை மட்டுமே இணைபிரியாமல் தொடர்கிறது. விஜய் சேதுபதியின் கோபக் கூச்சல் சில இடங்களில் காது ஜவ்வை கிழிப்பதாகத் தோன்றுகிறது. அதேசமயம், நித்யா மேனனின் கீச்சுக் குரல், எவ்வளவுதான் கத்தினாலும், பெண்மையின் மென்மையுடன் காற்றில் ஊர்கிறது. இருவரும் மாறி மாறி கத்திக் கொண்டே இருக்கும் காட்சிகள் ஓரளவுக்கு மேல் சலிப்பை ஏற்படுத்துகின்றன.
குடும்பச் சண்டை: ஒரு ஓவர் டோஸ் காமெடி
“தினம் தினம் கணவன் மனைவிக்குள் மற்றும் கூட்டு குடும்பத்துக்குள் நடக்கும் சண்டை சச்சரவுதான்” படத்தின் மையக்கரு. குலதெய்வ கோயில் வாசலில் இரண்டு குடும்பங்களும் அடித்துக் கொண்டு நாறும்போது, “இதற்கு ஒரு தீர்வு ஏற்படாதா கடவுளே?” என்று படம் பார்ப்பவர்களே வேண்டிக் கொள்ளத் தோன்றுகிறது. இயக்குனர் பாண்டிராஜ், மாமியார்-மருமகள் சண்டையை மிகவும் யதார்த்தமாகப் படமாக்கியுள்ளார். இவர்களுக்குள் நடக்கும் மோதலுக்கு “ஈகோ” தான் காரணம் என்று போட்டு உடைப்பது மறுக்க முடியாத உண்மை.
காமெடியும் குழப்பமும்
யோகி பாபு ஒரு செயின் திருடனாக வந்து அவ்வப்போது பஞ்ச் டயலாக் பேசி காமெடி அலைகளைப் படரவிடுகிறார். விஜய் சேதுபதிக்கும் மச்சான் ஆர் கே சுரேஷுக்கும் இடையே நடக்கும் மோதலுக்கு என்ன காரணம் என்பதை இயக்குனர் கடைசி வரை சொல்லாமல் விடுவது, பார்வையாளர்களுக்குக் கொஞ்சம் ஏமாற்றத்தையே தருகிறது. சில சீரியசான தருணங்களைக் கூட கலகலப்பாகக் காட்ட முயற்சிப்பது ஒரு கட்டத்தில் “ஓவர்டோஸ்” ஆகிவிடுகிறது.
சந்தோஷ் நாராயணன் & சுகுமார்
சந்தோஷ் நாராயணன் இசையில் பாடல்கள் இனிமையாக ஒலித்தாலும், விஜய் சேதுபதி – நித்யா மேனன் போடும் காட்டுத்தனமான சண்டைக்கு மத்தியில் இசை காதை துளைத்தெடுக்கிறது. கேமராமேன் சுகுமாரின் ஓளிப்பதிவில் கிராமத்தில் உள்ள கருப்பசாமி கோயில், ஹோட்டல், மலை, வீடு என சகல ஏரியாவிலும் தன் முத்திரையை பதித்து பலே சொல்ல வைத்து விடுகிறார்
பாண்டிராஜின் முயற்சி: கலவையான விமர்சனம்
“கடைக்குட்டி சிங்கம்”, “நம்ம வீட்டு பிள்ளை” படங்களுக்குப் பிறகு பாண்டிராஜ் “தலைவன் தலைவி” படத்தை ஒரு குடும்பப் படமாக வழங்க முயற்சி செய்திருக்கிறார். ஆனால், இதில் குடும்பச் சண்டை ஒரே கலவரமாகி, அரங்கை அல்லோகலப்படுத்துகிறது. இரண்டாம் பாதியில் MLA-வின் ஆட்கள் பஞ்சாயத்து செய்வதாக வரும் காட்சிகள், திரும்பத் திரும்ப இரு குடும்பங்களும் சண்டையிடும் காட்சிகள் சலிப்பை ஏற்படுத்துகின்றன. மைனா நந்தினி ஒரு காட்சியில், “இவங்க இன்னும் முடிக்கலையா?” என்று கேட்பது, பார்ப்பவர்களுக்குத் தோன்றும் அதே எண்ணத்தை வெளிப்படுத்துகிறது.
கிளைமாக்ஸ் மற்றும் அட்வைஸ் அலர்ட்!
படம் முடிந்தும் கூட சண்டை முடியவில்லை என்பது ஒரு விசித்திரமான கிளைமாக்ஸ். விவாகரத்து குறித்த காட்சிகளை நகைச்சுவையாகக் காட்சிப்படுத்தியிருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், ஒட்டுமொத்தமாக விவாகரத்து செய்பவர்களை நோக்கி விஜய் சேதுபதி செய்யும் அட்வைஸ் தேவையற்றது. ஏனெனில், எல்லா சூழலும், காரணமும் ஒன்றுபோல இருப்பதில்லை. சண்டை போடும் சில ஜோடிகள் படத்தைப் பார்த்து திருந்த வாய்ப்புள்ளது. அதேசமயம், மாமியார் மருமகளோடு வந்தால் மீண்டும் போர் வெடிக்கவும் வாய்ப்பு உள்ளது. ஆகையால், “தலைவன் தலைவி” ஒரு எச்சரிக்கை மணியையும் அடிக்கிறது.
ஒரு வரி விமர்சனம்: கணவன்-மனைவி சண்டையை ஒரு கலகலப்பான அதிரடிப் படமாக மாற்றி, பார்வையாளர்களுக்கு ஒரு “ஓவர் டோஸ்” காமெடி விருந்தை படைத்திருக்கிறது. “தலைவன் தலைவி”. அந்த ஐய்யய்யோ.. அய்யய்யோ குரல் சண்டையை குறைத்திருந்தால், தியேட்டரில் கொஞ்சம் பதற்றம் தணிந்திருக்கும்!
மார்க் 3/5


