நிர்பயா நிதியை பயன்படுத்த அக்கறை காட்டாத தமிழக அரசு!

நிர்பயா நிதியை பயன்படுத்த அக்கறை காட்டாத தமிழக அரசு!

டெல்லியில் கடந்த 2012 டிசம்பரில் மருத்துவ மாணவி ஒருவர் ஓடும் பேருந்தில் ஆறு பேர் கொண்ட கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டு இறந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, 2013 – 14ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த, அப்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்த ‘நிர்பயா நிதி’ என்ற பெயரில்,1,000 கோடி ரூபாய் ஒதுக்கப்படுவதாக அறிவித்தது. ஆனால், அந்நிதியிலிருந்து எந்த பணிகளும் மேற்கொள்ளப்பட வில்லை.

இதன் பின் நரேந்திர மோடி தலைமையிலான, தேசிய ஜனநாயக கூட்டணி 2014ல் நடந்த லோக்சபா தேர்தலில் வென்று ஆட்சியை பிடித்தது. இந்த அரசு 2014 – 15, 2015 – 16 ஆண்டுகளில் தாக்கல் செய்த பட்ஜெட்களிலும் மேற்படி நிர்பயா நிதிக்கு 1,000 கோடி ஒதுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை அந்த நிதியிலிருந்து ஒரு பைசா கூட செலவழிக்கப் படவில்லை. பார்லிமென்டில் மத்திய அரசு தாக்கல் செய்த, 2015 – 16ம் ஆண்டுக்கான நிதியில், இரண்டு திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.

மேலும் ரயில், பேருந்து போன்ற பொது போக்குவரத்தில், பெண்களின் பாதுகாப்பை வலுப்படுத்த மத்திய தரை வழி போக்குவரத்துதுறை அமைச்சகத்தின் கீழ் 653 கோடி ரூபாய் மதிப்பில் ஒரு திட்டமும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ், 79.6 கோடி ரூபாயில் நிர்பயா திட்டமும் செயல் படுத்தப்படும் என, அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்த திட்டங்கள் இன்னும் அறிவிக்கப்பட்ட நிலையில் தான் உள்ளன. அதனால், மூன்று நிதி ஆண்டுகளாக நிர்பயா நிதிக்கு ஒதுக்கப்பட்ட தொகை, எந்த செலவும் செய்யப்படாமல் அப்படியே உள்ளது என்று முன்னரே தகவல் வெளியாகி இருந்தது..

இதனிடையே கடந்த 2015ஆம் ஆண்டில் நம் தமிழகத்தில் மட்டுமே 421 பாலியல் பலாத்கார வழக்குகள் பதிவாகியுள்ளன. 1,361 பாலியல் துன்புறுத்தல் வழக்குகளும், 909 பின்தொடரல் வழக்குகளும், 65 வரதட்சணை மரணங்கள் தொடர்பான வழக்குகளும் பதிவாகியுள்ளன. ஆனால் இதுவரை தமிழக அரசு, மத்திய அரசிடம் நிர்பயா திட்டத்தில் இருந்து நிதியை ஒதுக்கும்படி கேட்கவேயில்லை. இந்த நிதியை எவ்வாறு செலவிடுவது என்பது தொடர்பாக தனது கருத்துகளைக்கூட தமிழக அரசு தெரிவிக்கவில்லை என்பதுதான் கொடுமை.

இத்தனைக்கும்இந்திய தணிக்கை மற்றும் கணக்குத்துறையின் அறிக்கைப்படி 2013ஆம் ஆண்டு ஆகஸ்ட்டில் பல மாநிலங்களைச் சேர்ந்த பிரதான செயலர்கள் மற்றும் போக்குவரத்து ஆணையர்கள் நிர்பயா நிதியை எப்படிப் பயன்படுத்தலாம் என்பது குறித்து கருத்து தெரிவிக்கும்படி மண்டல அதிகாரிகளிடம் கூறியிருந்தனர். ஆனால், ஒருசில மண்டலங்கள் மட்டுமே பதிலளித்திருந்தன. கண்காணிப்பு அறைகள் அமைப்பது தொடர்பாக தமிழக அரசு எந்தக் கருத்தையும் அனுப்பவில்லை. இது தொடர்பாக காவல்துறையினர் கூறும்போது, “வழக்குகள் அடிப்படையில் பெண்களின் பாதுகாப்பைப் பார்க்கக் கூடாது. ஒருசில மாநிலங்களில் பெண்கள் வழக்குப் பதிவு செய்யவே தயங்கு கின்றனர். ஆனால், தமிழ்நாட்டில் பெண்கள் துணிச்சலுடன் உள்ளனர். மேலும், கடத்தல், பாலியல் துன்புறுத்தல்க ளில் சில வழக்குகள் பெற்றோர்கள் மூலமே பதிவு செய்யப்படுகின்றனர். சாதி மாற்றி செய்யப்படும் திருமணங்க ளைத் தடுக்கும் நோக்கில் அவர்கள் வழக்குத் தொடுக்கின்றனர்” என்று தெரிவித்தனர்.

அதிலும் 10 லட்சத்துக்கு மேல் மக்கள்தொகை உள்ள நகரங்களை உடைய மாநிலங்கள் இந்தத் திட்டத்தின்கீழ் பொது போக்குவரத்தை கண்காணிப்பதற்கான கண்காணிப்பு அறைகளை அமைத்துக் கொள்ளலாம். தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி போன்ற நகரங்கள் இந்தப் பட்டியலில் வருகின்றன. மேலும் தமிழகத்தில் சமீப நாள்களாக பெண்களைப் பின்தொடர்ந்து வந்து குற்றச்செயல்களில் ஈடுபடுவது என்பது அதிகரித்து வருகிறது. சுவாதி விவகாரம் இதற்கு சமீபத்திய உதாரணம். தற்போது சுவாதி கொல்லப்பட்ட நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் ஒருவழியாகக் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. ஆனால், மற்ற ரயில் நிலையங்களில் நோ காமிரா.

ஆனாலும் தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறை என்பது கடந்த பத்து ஆண்டுகளில் இரண்டு மடங்கு அதிகரித்துள்ளன என்று ரெட் எலிஃபேண்ட் அறக்கட்டளையைச் சேர்ந்த கீர்த்தி ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், “தேசிய குற்ற ஆவணப் பணியகத்தின் அறிக்கைபடி இதுபோன்ற சம்பவங்களில் 94 சதவிகிதம் உறவினர்கள், அண்டை வீட்டினர், பெற்றோர்கள் என்று தெரிந்தவர்கள் மூலமே பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக 14 முதல் 30 வயதான பெண்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்” என்று தெரிவித்தார்.

Related Posts