நேரு கட்டிய அடித்தளம்: 3,398 நாள்களும்,முக்கால் நூற்றாண்டு கால வளர்ச்சியும்!
“சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் நேருவின் ஆட்சி காலத்தை வெறும் நாள்களின் எண்ணிக்கையால் அளவிட முடியாது; அது ஒரு தேசத்தின் ஆன்மாவைச் செதுக்கிய, நவீன இந்தியாவின் கட்டமைப்பை உருவாக்கிய கால இயந்திரம்.”
சமீபகாலமாக அரசியல் களத்தில் ஒரு விவாதம் அனல் பறக்கிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமராக நேருஜி இருந்த 3,398 நாள்களைத் தற்போதைய பிரதமர் மோடிஜி முறியடித்துவிட்டார் என்பதுதான் அது. 1947 முதல் 1952 வரை நேரு இடைக்காலப் பிரதமராக இருந்து தேசத்தை வழிநடத்திய காலத்தை இந்தக் கணக்கீடுகள் வசதியாகத் தவிர்த்துவிடுகின்றன. எண்கள் எப்போதுமே அரசியலில் தந்திரமானவை. ஆனால், எண்களைத் தாண்டி, ஒரு பிரதமர் தன் பதவிக்காலத்தில் இந்தத் தேசத்தின் மண்ணிலும் மக்களின் வாழ்விலும் எத்தகைய தடயங்களை விட்டுச் சென்றார் என்பதே வரலாற்றின் உண்மையான உரைகல். மோடிஜியை விடக் குறைந்த நாள்களே தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமராக இருந்த நேரு, இந்தத் தேசத்திற்குச் செய்தவை என்ன? அவை இன்றைய இந்தியாவின் வளர்ச்சிக்கு எப்படியெல்லாம் உயிர் கொடுத்திருக்கின்றன என்பதை விரிவாகப் பார்ப்போம்.

1. அறிவுசார் இந்தியாவின் கருவறைகள்: உயர்கல்வி நிறுவனங்கள்
ஆங்கிலேயர்கள் இந்தியாவை விட்டு வெளியேறியபோது, இந்தத் தேசம் கல்வியறிவில் மிக மோசமான நிலையில் இருந்தது. வெறும் எழுத்தறிவை மட்டும் வழங்காமல், உலக நாடுகளுடன் போட்டி போடும் அளவுக்கு நிபுணர்களை உருவாக்க நேரு திட்டமிட்டார்.
-
கல்வித் தூண்கள்: இந்திய தொழில்நுட்பக் கழகம் (IIT), அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகம் (AIIMS) மற்றும் இந்திய மேலாண்மை நிறுவனம் (IIM) போன்ற உலகத்தரம் வாய்ந்த நிறுவனங்கள் நேருவின் கனவால் உதித்தவை.
-
பலன்: இன்று கூகுள் முதல் மைக்ரோசாஃப்ட் வரை உலகளாவிய நிறுவனங்களின் தலைமைப் பொறுப்புகளில் இந்தியர்கள் அமர்ந்திருக்கிறார்கள் என்றால், அதற்கு 70 ஆண்டுகளுக்கு முன்பு நேரு போட்ட விதைதான் காரணம்.
2. அறிவியல் மற்றும் விண்வெளியில் விஸ்வரூபம்
ஒரு தேசம் தற்சார்பு அடைய வேண்டுமானால் அறிவியல் வளர்ச்சி அவசியம் என்பதை நேரு உணர்ந்திருந்தார். வறுமையில் வாடிய காலத்திலேயே அவர் விண்வெளிக்கும் அணுசக்திக்கும் முக்கியத்துவம் அளித்தார்.
-
அணுசக்தி மற்றும் இஸ்ரோ: இந்திய அணுசக்தி ஆணையம் (AEC) மற்றும் விண்வெளி ஆராய்ச்சித் திட்டங்களை அவர் முன்னெடுத்தார். இன்று நிலவின் தென்துருவத்தில் இந்தியா கால் தடம் பதித்திருக்கிறது என்றால், அதன் தொடக்கப் புள்ளி நேரு உருவாக்கிய விண்வெளி ஆய்வுக்கான தேசியக் குழுவே (INCOSPAR – இதுவே பின்னாளில் ISRO ஆனது).
3. ‘நவீன இந்தியாவின் கோவில்கள்’: அணைகளும் தொழிற்சாலைகளும்
ஆங்கிலேயர்கள் இந்தியாவை விட்டுச் சென்றபோது தேசம் ஒரு ‘திருவோட்டுடன்’ தான் இருந்தது. விவசாயமும் தொழிற்துறையும் முற்றிலுமாக நலிவடைந்திருந்தன.
-
ஐந்தாண்டுத் திட்டங்கள்: திட்டக் குழுவை உருவாக்கி, முறையான பொருளாதார வளர்ச்சியைத் தொடங்கினார். பிலாய், ரூர்கேலா மற்றும் துர்காபூர் போன்ற இடங்களில் பிரம்மாண்டமான இரும்பாலைகளை நிறுவி தொழிற்புரட்சிக்கு வித்திட்டார்.
-
அணைகள்: பாசனத்திற்காகவும் நீர்மின் உற்பத்திக்காகவும் பக்ரா நங்கல், ஹிராகுண்ட் போன்ற அணைகளைக் கட்டினார். இவற்றை வெறும் கட்டுமானங்களாகப் பார்க்காமல், ‘நவீன இந்தியாவின் கோவில்கள்’ என்று அவர் போற்றியது, நாட்டின் வாழ்வாதாரத்தின் மீதான அவரது அக்கறையைக் காட்டுகிறது.
4. உலக அரங்கில் இந்தியாவின் தனித்துவக் குரல்
இரண்டாம் உலகப் போருக்குப் பின் உலகம் அமெரிக்கா, ரஷ்யா என இரு வல்லரசு அணிகளாகப் பிரிந்திருந்தது. அந்தச் சூழலில் யாரிடமும் அடிபணியாமல் இந்தியாவுக்குத் தனி கௌரவத்தைத் தந்தார் நேரு.
-
அணிசேரா இயக்கம் (NAM): எந்த அணியிலும் சேராமல், சமாதானத்தையும் அமைதியையும் விரும்பும் நாடுகளை ஒருங்கிணைத்து ‘அணிசேரா இயக்கத்தை’ உருவாக்கினார். இது சர்வதேச அரசியலில் இந்தியாவுக்கு ஒரு தார்மீகத் தலைமையைப் பெற்றுத் தந்தது.
5. பன்முகத்தன்மையும் நாடாளுமன்ற ஜனநாயகமும்
பல்வேறு மொழிகள், மதங்கள் மற்றும் கலாச்சாரங்கள் கொண்ட இந்தியாவை ஒரே நூலில் கோர்ப்பது மிகப்பெரிய சவால். நேரு அதைத் தனது பரந்த மனப்பான்மையால் சாதித்தார்.
-
மதச்சார்பின்மை: இந்தியாவின் மதச்சார்பற்ற கட்டமைப்பை உறுதி செய்தார். சிறுபான்மையினர் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் உறுதியாக இருந்தார்.
-
மொழிப் பிரச்சினை: இந்தி பேசாத மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு, அவர்கள் விரும்பும் வரை ஆங்கிலமே இணைப்பு மொழியாக இருக்கும் என்று உறுதி அளித்து, தென்னக மக்களின் நம்பிக்கையைப் பெற்றார்.
6. ஜனநாயகத்தின் காவலர்: அவையின் மாண்பு
இன்று நாடாளுமன்றத்தில் பிரதமர்களைக் காண்பதே அரிதாகிவிட்ட சூழலில், நேருவின் நாடாளுமன்ற ஒழுக்கம் வியக்கத்தக்கது.
-
விவாதங்களில் ஈடுபாடு: நாடாளுமன்றம் நடந்த அனைத்து நாள்களிலும் நேரு அவைக்குச் சென்றார். எதிர்க்கட்சிகளின் கடுமையான விமர்சனங்களைக் கூட நேருக்கு நேராக எதிர்கொண்டார். விவாதங்களில் ஆக்கப்பூர்வமாகப் பங்கேற்று நாடாளுமன்ற ஜனநாயகத்தை வலுப்படுத்தினார். நேரு அவைக்குச் செல்லாத நாள்களை விரல்விட்டு எண்ணிவிடலாம் என்பார்கள்.
காலத்தின் கேள்வி
இந்தியாவின் முதல் பிரதமரான நேருவின் நாள்களை முறியடித்த இன்றைய லோககுரு மோடிஜி, பல சாதனைகளைச் செய்திருக்கலாம். பிரம்மாண்டமான புதிய நாடாளுமன்றக் கட்டடம் கட்டியதும், இதிகாச நாயகன் இராமபிரானுக்குக் கோவில் எழுப்பியதும் அவரது ஆதரவாளர்களால் மிகப்பெரிய சாதனைகளாகப் பார்க்கப்படுகின்றன. பண்பாட்டு ரீதியாக இவை முக்கியமானவை என்றாலும், ஒரு சராசரி குடிமகனின் அன்றாட வாழ்வாதாரம் செழிக்கவும், நாட்டின் அறிவியல் மற்றும் தொழில் துறை கட்டமைப்பை அடுத்த தளத்திற்குக் கொண்டு செல்லவும் நேருவைப்போல என்ன அடித்தளம் அமைக்கப்பட்டிருக்கிறது?
புதிய கட்டடங்களை விட, அந்தப் பழைய கட்டடத்திற்குள் நேரு காப்பாற்றிய ஜனநாயக மாண்புகளும், அவர் உருவாக்கிய உயர்கல்வி மற்றும் அறிவியல் அமைப்புகளுமே இன்றும் இந்தத் தேசத்தைத் தாங்கிப் பிடிக்கின்றன. நாள்களின் எண்ணிக்கை சாதனையாகாது; அந்த நாள்களில் உருவான திட்டங்களும் தொலைநோக்குப் பார்வையுமே ஒரு தலைவரை வரலாற்றில் நிலைக்கச் செய்யும்!
வாத்தீ அகஸ்தீஸ்வரன்


