32°C

ஸ்வீட்டி நாட்டி கிரேசி – விமர்சனம்!

admin Published: February 13, 2026 2 நிமிட வாசிப்பு Updated: February 14, 2026 Running News
எழுத்து:

பிரம்மாண்ட பட்ஜெட்டில் படம் எடுத்துவிட்டு லாபத்திற்காகப் போராடும் கூட்டத்திற்கு மத்தியில், ‘அடல்ட் காமெடி’ என்ற ஒற்றை ஆயுதத்தை வைத்து இளசுகளைக் குறிவைத்து அடித்திருக்கிறார்கள் ‘ஸ்வீட்டி நாட்டி கிரேசி’ படக்குழுவினர். தியேட்டரில் இளைஞர்களின் சிரிப்புச் சத்தமும், கைதட்டலும் ஒலிப்பதைக் கேட்கும்போது இயக்குனர் ராஜசேகர்.ஜி தனது இலக்கில் தேறிவிட்டார் என்றே சொல்ல வேண்டும்.

கதைச் சுருக்கம்:

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

நாயகன் சிவா (த்ரிகுண்) தனது காதல் கதையை நண்பர்களிடம் சொல்வதாகப் படம் தொடங்குகிறது. அனிதாவுடனான (ஸ்ரீஜீத்தா கோஷ்) காதலில், அவளது வற்புறுத்தலால் நடக்கும் முதல் டேட்டிங்கிலேயே ‘எல்லாம்’ நடக்கிறது. ஆனால், ஒவ்வொரு முறை நெருக்கமாக இருக்கும்போதும் சிவா ஓரமாக உட்கார்ந்து அழுகிறான். காரணம் கேட்டால், “உனக்கு முன்னாடி என் டியூஷன் மிஸ்ஸுடன் தப்பு பண்ணிட்டேன்”, “ஒரு ஆன்ட்டியுடன் தப்பு பண்ணிட்டேன்” எனப் வாக்குமூலம் கொடுக்கிறான்.

அவன் பொய் சொல்லாமல் உண்மையைச் சொல்கிறானே என்று உருகிப்போகும் அனிதா, அவனைத் திருமணம் செய்து திருத்த முடிவு செய்து தனது வீட்டிற்கு (கோத்தகிரி) அழைத்துச் செல்கிறாள். அங்கே போய்ப் பார்த்தால், சிவா தப்பு பண்ணிய அந்த ‘ஆன்ட்டி’ அனிதாவின் அம்மா; ‘டியூஷன் மிஸ்’ அனிதாவின் அக்கா! இந்த மன்மத களேபரத்தில் அடுத்து என்ன நடந்தது என்பதுதான்  கதை.

நடிப்பு:

நாயகன் த்ரிகுண் இப்படி ஒரு கதையில் நடிக்க ஒத்துக்கொண்ட தைரியத்தைப் பாராட்டியே ஆகவேண்டும். அனிதா கதாபாத்திரத்தில் நடித்த ஸ்ரீஜீத்தா கோஷ், “இப்படி ஒரு பொண்ணு காதலியாகக் கிடைத்தால் வரம்” எனப் பசங்களை ஏங்க வைக்கிறார்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு வந்திருக்கும் இனியா, டியூஷன் டீச்சராக வந்து பரங்கிமலை ஜோதி தியேட்டர் காலத்து கவர்ச்சியையே மிஞ்சும் அளவுக்கு அதிரடி காட்டியிருக்கிறார். ‘சுந்தரா டிராவல்ஸ்’ ராதா, இதில் ‘ஆன்ட்டி’ கேரக்டரில் வந்து கிளாமரில் அதிர வைக்கிறார். ரவி மரியா, தம்பி ராமையா, சத்யன் எனப் பெரும் காமெடி பட்டாளமே இருந்தாலும், படத்தின் காம நெடி அவர்களின் காமெடியை ஓவர்-டேக் செய்துவிடுகிறது.

தொழில்நுட்பம்:

சி.விஜய்யின் ஒளிப்பதிவில் மூன்று நாயகிகளும் செம பளிச்! காட்சிகள் எல்லாமே ஒரே வண்ணமயம்தான். அருணகிரியின் இசை கமர்ஷியல் ரகம். பின்னணி இசை காமக் காட்சிகளுக்கு ‘உரம்’ போட்டிருக்கிறது. எடிட்டர் கே.குமார், தியேட்டரில் நாம் பார்ப்பதை விட எக்ஸ்ட்ராவாக நிறையப் பார்த்திருப்பார் போல!

பஞ்சாயத்து தீர்ப்பு:

இயக்குனர் ராஜசேகர்.ஜி, அடல்ட் காமெடி என்ற பெயரில் ஒரு வக்கிரமான சிந்தனையைத் தான் கையில் எடுத்திருக்கிறார். ஆனால், அதை ஆபாசமாகச் சொல்லாமல் 2K கிட்ஸின் காமெடி மொழியில், இலை மறை காய் மறையாகச் சொல்லி இளைஞர்களைக் கவர்ந்துவிட்டார்.

மொத்தத்தில் ஜென்Z களுக்கான ‘கும்மாங்குத்து’ கொண்டாட்டம்!

மார்க்: 2.5 / 5