32°C
விளம்பரம்
Advertisement

ஐ…ரோப்பா – கண்டம் தாண்டிய கனவு 4- By வேணுஜி

admin சேலம் Published: November 16, 2026 7 நிமிட வாசிப்பு Exclusive
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க
தமிழ் குரல் / AI Voice



உன் நண்பர்களைக் காட்டு… உன்னைப் பற்றிச் சொல்கிறேன்… என்பார்கள் இல்லையா…? ஆனால் எனக்கு என் மகனைப் பற்றி நன்றாகத் தெரியும் என்பதால் ஆதி பகவானின் நண்பர்களைப் பற்றி எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. அதில் பின்லாந்தில் வசிப்பவர்கள் தனி ரகம். அவர்களில் மோகன் விஸ்வா முக்கியமானவர். பின்லாந்து சென்ற ஆதியின் ஆதி நண்பர். ஆதி அங்கே செட்டில் ஆவதற்கு முன் மோகனின் மனைவி மஞ்சுதான் ஆதிக்கு அவ்வப்போது உணவளித்த அன்னபூரணி. எங்களை பின்லாந்து வரச் சொல்லி வற்புறுத்தியதில் மோகனுடைய பங்கு அதிகம்.

ஹெல்சினி சென்று சேர்ந்ததுமே அவரிடமிருந்து எங்களுக்கு அழைப்பு வந்து விட்டது, அந்த வீக்கெண்ட் சனிக்கிழமை மதிய விருந்துக்கு… உமாவும் ஆதியும் சுத்த சைவம்; நான் அசுத்த அசைவம்… ஆனால் வாரத்தில் மூன்று நாட்கள் அசைவம் தொட மாட்டேன் என்ற போங்கு ஆட்டம் என்னிடம் இருந்ததால் அதைத் தெரிந்து கொண்ட மோகன் வெள்ளிக்கிழமை இரவு எனக்காக unofficial ஆக அசைவ விருந்துக்கு ஏற்பாடு செய்தார்.

அதற்கு முன்னதாக அங்கு இரண்டு கோயில்கள் இருப்பதைக் கேள்விப்பட்டு அதில் ஒன்றுக்கு சென்றுவரத் திட்டமிட்டோம். பாபநாசம் சிவன் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால், பைப்பினன் சிவன் கேள்விப்பட்டிருக்கிறீர்களா..? பைப்பினன் என்ற இடத்தில் குடிகொண்டிருந்த சிவன்தான் அவர். அந்தக் கோவிலுக்கு முதல் விசிட் அடித்தோம். தென்னாடுடைய சிவன் என்றாலும் எந்நாட்டவர்க்கும் இறைவன் அல்லவா..? அதனால் ஐரோப்பாவிலும் அருள் பாலித்துக் கொண்டிருந்தார் அந்த பைப்பினன் சிவன்.

ஐரோப்பிய சுற்றுச்சூழலுக்கு அந்த சிவன் கோவில் கொஞ்சம் அந்நியமாக இருந்தாலும் அங்கே அள்ளி அள்ளித் தந்த பிரசாதங்கள் எங்களை அந்நியோன்னியம் ஆக்கிவிட்டது. அதிலேயே வயிறு நிறைந்த ஆதியும் உமாவும் எங்களுக்கு டின்னர் முடிந்தது..! என்றார்கள். நான் பிரசாத அளவில்தான் சாப்பிட்டேன். அடுத்து மோகன் வீட்டுக்கு டின்னருக்குச் செல்ல வேண்டுமே..?

லெப்பவாராவில் இருந்த அவர்கள் வீட்டுக்குச் சென்றபோது மஞ்சுஸ் கிச்சனிலிருந்து மணக்க மணக்க எனக்காக மட்டன் உணவு தயாராகி இருந்தது. மோகனும் மஞ்சுவும் சேர்ந்து அந்த வெள்ளிக்கிழமையை மட்டன் ஃபிரைடே வாக மாற்றி இருந்தார்கள். நாம் இருவர் நமக்கு இருவர்… என்ற அளவில் ஆத்விக், யஷ்விக் என்ற குழந்தைகள் அவர்களுக்கு. பெரியவன் ஆத்விக் மகா புத்திசாலி. எந்த சப்ஜெக்ட் ஆனாலும் அவனிடம் விவாதிக்கலாம். சின்னவன் யஷ்விக்கைக் கையில் ஏந்தி அவன் மழலையை ரசித்துக்கொண்டிருந்தால் கால எந்திரத்தில் பயணம் செய்வது போல் நேரம் போவதே தெரியாது. மோகனுடன் பணிபுரியும் இன்னொரு நண்பர் ஹரிஷும் வந்து விட, அரட்டையில் இறங்கி அங்கிருந்து கிளம்பவே இரவு 12 ஆகிவிட்டது. ஆனாலும் வெளி வெளிச்சம் மாலை ஆறு மணி போல் இருந்தது.

மறுநாள் மதியமும் அவர்கள் வீட்டில் Official சைவ விருந்து. அதிலும் நான் கபோங்கு ஆட்டம் ஆடி சைவ பிரியாணியையும் ருசித்தேன். சைவ பிரியாணியே இவ்வளவு நல்லா இருக்கே..! என்று அதைப் பாராட்டப் போய் அடுத்த இரண்டாவது நாளில் மட்டன் பிரியாணி செய்து எங்கள் வீட்டுக்கு பார்சல் அனுப்பி விட்டது வேறு கதை.

சலிக்காமல் பேசி எந்த சூழ்நிலையையும் சகஜமாக்கிவிடும் வித்தை தெரிந்த மோகன் நண்பர் ஹரிஷுடன் ஸ்கைஜம் எல்லாம் செய்த சாகசக்காரரும் கூட. மஞ்சுவின் கை மணத்துக்கு ஒரு உணவகம் ஆரம்பித்தால் ஒரு வருடத்தில் பின்லாந்துக்காரர்களின் நாக்குகளை குத்தகைக்கு எடுத்து விடலாம். அவர்கள் தந்த அசத்தலான Hospitality யில் அவர்கள் வீட்டில் நிரந்தரமாக Admit ஆகிவிடலாம் என்றே தோன்றியது.

அல்ப்ரோஸ்பார்கென் பூங்காவும் எஸ்கூட்டர் பயணமும்

மாலையில், சிங்கிளாக இருக்கும் ஹரிஷ் அவருடைய பிளாட்டுக்கு தேனீருக்கு அழைத்திருந்தார். மோகன் குடும்பத்தினருடன் மொத்தமாக அங்கே போய் கரம் சாயாவையும், கிரோசண்ட் டையும் ஒரு பிடி பிடித்து விட்டு அருகில் இருந்த பூங்காவுக்குச் சென்றோம். அங்கிருந்து மோகன் குடும்பத்தினர் விடை பெற்று விட, ஹரிஷ் மற்றும் ஆத்விக்குடன் நாங்கள் அல்ப்ரோஸ்பார்கென் பூங்காவுக்குச் சென்றோம். அங்கேதான் ஆத்விக் எங்களுக்கு ப்ளூபெர்ரி செடிகளை அடையாளம் காட்டினான். நான் ஏதோ வேறு சில பழங்களைக் காட்டி இது என்ன சொல் பார்க்கலாம்… என்று அவனை வம்பிழுத்தேன். அதற்கும் டக்கென்று இதெல்லாம் லிங்கன்பெரி என்று சரியாகச் சொல்லி என்னை பல்பு ஆக்கினான்.

அங்கிருந்து வெளிவந்தபோது எல்லா இடங்களிலும் சாலைகளில் கிடத்தி வைத்திருந்த எஸ்கூட்டர்களையும், சைக்கிள்களையும் அங்கேயும் காண முடிந்தது. வேண்டியவர்கள் ஆன்லைனில் புக் செய்துவிட்டு அதை எடுத்து ஓட்டியபடி இன்னொரு இடத்துக்குச் சென்று விடலாம். எங்கே முடிக்கிறோமோ அங்கேயே அவற்றை மீண்டும் கிடத்திவிட்டு நாம் நம் வேலையைப் பார்க்கலாம். நானும் எஸ்கூட்டர் ஒன்றை எடுத்து இரண்டு ஓட்டங்களில் தடவித் தடவித் தவ்வி மூன்றாவது ஓட்டத்தில் எக்ஸ்பர்ட் ஆகி ஓட்டிப் பார்த்தேன். இங்கேயும் அப்படி சாலையோர எஸ்கூட்டர் வந்தால் மாதாமாதம் தண்டம் வைக்கும் என் ஸ்கூட்டரை விற்றுவிடலாம்தான்.

கயாக்கிங் மற்றும் பாலாவின் இல்லத்து உபசரிப்பு

அன்றைய பொழுது அவ்வாறாகக் கழிய… அடுத்த நாள் ஆதியின் இன்னொரு நண்பர் பாலாவுடனும் அவர் மனைவி நிவேதாவுடனும் பின்லாந்து வளைகுடாவில் கயாக்கிங் சென்றோம். பேக்வாட்டர் அழகை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க இப்படி கயாக்கிங் படகுகளை நமக்குத் தருகிறார்கள். நாம் சென்று நீரில் இருக்கும் அசுத்தங்களை சுத்தப்படுத்திவிட்டு வரலாம். வழக்கமாகவே சுத்தமாக இருக்கும் அந்த நீரில் நாங்கள் படாத பாடுபட்டு கண்டோம் குப்பையை… என்று இரண்டு Soft drink Can களைக் கண்டுபிடித்து கொண்டு வந்து தந்தோம். எல்லோருமே வெறும் கையோடுதான் வருகிறார்கள். நீங்கள் ஸ்மார்ட்..! என்று அங்கு பணியில் இருந்த வெள்ளை அழகி முத்துக்களை உதிர்த்ததில் உச்சி குளிர்ந்தோம்.

தொடர்ந்து நீட்டுகும்பு விலிருந்த பாலாவின் வீட்டில் ஒரு லஞ்ச். நிவேதா செய்திருந்த பிரியாணியும் டாப் நாட்ச் லெவல். பாலாவுடன் பேசிக் கொண்டிருந்த போது அவர் சென்னை அயனாவரத்தில் வாழ்ந்தவர் என்று தெரிந்ததால் ரொம்பவும் நெருங்கி வந்திருந்தார். (நானும் பிறந்ததில் இருந்து 15 ஆண்டுகள் அயனாவரத்தில் தான் வாழ்ந்திருக்கிறேன்…) ஓடியில் நளதமயந்தி படம் பார்த்த சூட்டோடு போய் அதைவிட சூடாக நிவேதா போட்டுத் தந்த தேநீர், ஒன் மோர் கேட்க வைத்தது.

நிஷா குடும்பத்தினரின் மீன் விருந்து

அடுத்து நாங்கள் படையெடுத்தது ஆதியின் தோழியர் இருவரில் ஒருத்தியான நிஷா வீட்டுக்கு. (இன்னொரு நண்பியான ஸ்வேதா தன் தாயாரை அழைத்து வர இந்தியா சென்றிருந்தார்) எஸ்பூ விலேயே வசிக்கும் நிஷாவின் பெற்றோரும் விடுமுறைக்கு அங்கு வந்திருந்தார்கள். அவர்கள் வீட்டிலும் எனக்காக அசைவத்தில் சால்மன் மீனும், சிக்கன் ஃப்ரையும் செய்து அசத்தினார்கள். மீன் பிரியனான நானே போதும் என்று மன்றாடும் அளவில் பரிமாறிப் பசி தீர்த்தார்கள். அடுத்த நாள் அதிகாலையில் அவர்களுக்கு ஒரு tour plan இருந்ததால் மீதி இருந்த மீனையும் கூச்சநாச்சம் இல்லாமல் டேக்அவே எடுத்துக்கொண்டு கிளம்பினோம்.

பிரதீப் – சினேகா ஏற்பாடு செய்த பார்பிக்யூ கொண்டாட்டம்

அடுத்த தம்பதி பிரதீப் – சினேகாவின் திட்டம் வேற லெவலில் தீ யாக இருந்தது. வழக்கமாக வீட்டுக்கு வரவழைக்காமல் எல்லோரும் கிளம்பி பார்பிக்யூ சென்று சமைத்து சாப்பிடலாம் என்றார்கள். அங்கே சில கேம்பிங்குகளில் இப்படி பார்பிக்யூ அடுப்புகள் அமைக்கப்பட்டு இருக்கின்றன.

அப்படி பிரதீப் – சினேகா, அவர்களின் குட்டிக் குழந்தை கேஷவ் மற்றும் இந்தியாவில் இருந்து வந்திருந்த சினேகாவின் அம்மா மற்றும் எங்கள் குடும்பத்தினருடன் நிஷாவின் பெற்றோரும் கலந்து கொள்ள ஒரு ஜமாவாகக் கிளம்பினோம். எங்கள் பங்குக்கு காய்கறிகளையும், நிஷாவின் பங்குக்கு சிக்கன், சால்மனையும் மேரினேட் செய்து கொண்டு போனோம். சினேகா வீட்டில் இருந்தே சில உணவு வகைகளையும் சமைத்துக் கொண்டு வந்திருந்தார்கள். பிரதீப்பும், ஆதியும் பார்பிக்யூ அடுப்பை தீ மூட்ட போராடிக் கொண்டிருந்ததைப் பார்த்து அனுபவஸ்தரான நிஷாவின் அப்பா கிரண் ஷிர்சாகர் பற்ற வைத்த சாதுர்ய நெருப்பில் நானும் அவருமாக அத்தனை உணவுகளையும் புரட்டிப் புரட்டிப் பதம் பார்த்தோம்.

இந்திய மசாலா அந்த பிராந்தியத்தையே பிராந்து கொள்ள வைக்க, சுற்றி இருந்தவர்கள் ஒரு உணவு திருவிழாவை வேடிக்கை பார்ப்பது போல் பார்த்து விட்டுப் போனார்கள். அதில் உணர்ச்சிவசப்பட்ட ஒரு ஐரோப்பிய மாமா, பேஷ் பேஷ்… ரொம்ப நன்னாயிருக்கு..! என்பது போல் செய்கை காட்டி விட்டுப் போனார். சலசலக்கும் ஏரிக் கரையில் பளபளக்கும் பாறையின் மேல் அமர்ந்து கூடிக்களித்து அருந்திய அந்த உணவு அந்த ஏரி நீர் தீரும் காலத்துக்கும் மறக்காது.

இங்கே சினேகாவின் சமத்துக் குழந்தை கேஷவ் பற்றிச் சொல்லியாக வேண்டும். சமைக்கும் வரை அமைதியாகத் தூங்கி, சமைத்து முடித்ததும் பளிச்சென்று விழித்து பார்ப்பவரிடமெல்லாம் பாசாங்கில்லாமல் சிரித்த அவன் அழகுக்கு கோடி யூரோக்கள் கொடுத்தாலும் நேராகாது.

ஹரிஹரன் குடும்பத்தின் தமிழ்ப்பற்று

அடுத்தவர் ஹரிஹரன். நாங்கள் அங்கே போனபோது அவர் குடும்பத்துடன் கிளம்பி இந்தியா வந்திருந்தோம். ஆனால் நாங்கள் கிளம்பவிருந்த ஒரு வாரத்துக்கு முன் வந்து சேர்ந்தவர் அதற்கு மறுநாளே எங்களை அழைத்த விருந்தோம்பலில் நெகிழ்ந்து போனோம். பின்லாந்து தமிழ்ச் சங்கத்தில் பங்கெடுத்திருக்கும் அவரது தமிழ்ப் பற்று வியக்க வைத்தது. அவரது மனைவி ஆதிரை, குழந்தைகள் பிறைசூடன், நப்பின்னை என்ற பெயர்களைக் கேட்டாலே தெரிந்து போகும் அவரது உயரியத் தமிழார்வம்.

அங்கே இரண்டாவது வகுப்பு படிக்கும் பிறைசூடன் எழுதிய தமிழ்க் கட்டுரையைப் படித்தால் அது இங்கே எட்டாவது படிக்கும் மாணவனுடைய தரத்தில் இருக்கிறது. நம் பிடிக்குள் சிக்காமல் நழுவி நழுவிச் சென்று கொண்டிருந்த நப்பின்னையின் செயலை நட்புன்மை என்று தவறாகப் புரிந்து கொள்ள முடியாத அளவில் கிளம்பும் நேரத்தில் ஒட்டிக்கொண்டு விட்டாள்.

Kilo- வில் வசிக்கும் ஹரிஹரன் குடும்பம் தரும் தமிழ்ப் பண்பாட்டின் தரத்தை நிறுக்க நேர்ந்தால் துலாக்கோலின் இன்னொரு தட்டில் கிலோ கணக்கில் பொன் வைக்க நேரிடும்.

(இந்த விருந்தோம்பல்கள் அடுத்தடுத்து நிகழவில்லை எனினும் யாரும் விட்டுப் போய் விடக்கூடாது என்பதால் அனைத்தையும் தொகுத்து ஒரே பாகத்தில் பதிவிட்டுள்ளேன்…)

பந்தி முடிந்தது… பயணம் தொடரும்…

admin
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

உடனடி செய்திகள்