பூக்கி – சினிமா விமர்சனம்: ரீல்ஸ் சுருட்டிய ‘ஜென் ஸீ’ அவஸ்தை!
இன்னைக்கு இருக்கிற ஜென் ஸீ (Gen Z) பசங்க தங்களுக்குப் பிடிச்சவங்களைச் செல்லமா கூப்பிடுற பேருதான் ‘பூக்கி’ (Pookieman/Pookie). காதலை ‘லவ்’னு சொன்ன காலமெல்லாம் போயி, இப்போ பூக்கி-ன்னு போயிட்டு இருக்கு. ஆனா, அந்தப் பேரைத் தலைப்பா வச்சுக்கிட்டு, படம் முழுக்க பழைய பூமர் காலத்துச் சிந்தனையைப் புகுத்தி, நம்மளை ‘உதட்டைப் பிதுக்க’ வச்சு அனுப்பியிருக்காங்க. இதோ ஒரு விரிவான ‘பூக்கி’ போஸ்ட் மார்ட்டம்!
கதைங்கிற பேர்ல ஒரு ஷோ ரீல்!
அஜய் திஷான் – தனுஷா ரெண்டு பேரும் ஒரு ஜென் ஸீ ஜோடி. இவங்களுக்குள்ள வர்ற சின்னச் சின்ன ஈகோ, சண்டையெல்லாம் சேர்ந்து ஒரு கட்டத்துல பெரிய ரணகளமாகுது. பொது இடத்துல அடிதடி, அதை யாரோ வீடியோ எடுத்து சோஷியல் மீடியால போட, வைரல் அவமானத்துல ரெண்டு பேரும் பிரிஞ்சுடுறாங்க.
பிரேக்கப்புக்கு அப்புறம் ரெண்டு பேரும் படுற கஷ்டம் இருக்கே… அதுதான் கொடுமை! ஹீரோ காதலை மறக்க ஜிம்முக்கு போறான், அப்புறம் கொசு மட்டையை வச்சுக்கிட்டு வீடு வீடா கொசு அடிக்கிறான் (நிஜமாவே தான்!). ஹீரோயின் சாப்பாடு, ஷாப்பிங், ஆன்மிகம்னு கிளம்புறாங்க. அப்புறம் பழைய காதலை மறக்கத் புதுசா டேட்டிங் ஆப், மேட்ரிமோனின்னு தேடித் தேடி அலைஞ்சுட்டு கடைசியில என்ன ஆனாங்கங்கிறது தான் ‘பூக்கி’யோட கதை (இல்லை, கவிதை!).
நடிப்பு: இங்கேயும் அதே ‘ரீல்ஸ்’ தான்!
ஹீரோ அஜய் திஷன், சமகாலத்து ஆண்களோட ஈகோ சிக்கலை நல்லாவே காட்டியிருக்காரு. ஆனா, அந்த நடிப்பை இன்னும் கொஞ்சம் ‘அழுத்தமா’ கொடுத்திருக்கலாம். ஹீரோயின் தனுஷா, அந்தப் பதின்ம வயசுப் பொண்ணுக்கான அலப்பறைகளை அப்படியே பண்ணியிருக்காங்க. ஆனா, ஆடியன்ஸை ஈர்க்கிற மாதிரி ரெண்டு பேர் கிட்டயும் ஒரு ‘ஸ்பார்க்’ இல்லை.
பாண்டியராஜன், விவேக் பிரசன்னா, லட்சுமி மஞ்சு, சுனில்னு ஒரு பெரிய பட்டாளமே இருக்கு. ஆனா, ஒருத்தர் கூட மனசுல நிக்கல. எல்லாரும் வந்துட்டுப் போறாங்க, அவ்வளவுதான்!
மியூசிக் டைரக்டர் விஜய் ஆண்டனியின் விஸ்வரூபம்!
விஜய் ஆண்டனி இந்தப் படத்துல மியூசிக், எடிட்டிங், புரொடக்ஷன் எல்லாத்தையும் கவனிச்சிருக்காரு. ஆனா, மனுஷன் படத்துல எப்போ பார்த்தாலும் ஒரு பாட்டைப் போட்டு நம்மைக் கொட்டாவி விட வைக்கிறாரு. நின்னாலும் பாட்டு, படுத்தாலும் பாட்டு… ஒரு கட்டத்துல இது சினிமாவா இல்ல ‘விஜய் ஆண்டனி மியூசிக் ஆல்பமா’னு சந்தேகம் வருது.
திரைக்கதை: ஒரு குழப்பமான கலவை!
ஸ்கூல், காலேஜ் ஆன்மிகம், சாதி வெறி, ரீல்ஸ்ல வர்ற கடி ஜோக் நபர், நாய் பேசும் வீடியோ, ஏன் சிம்புவோட பேட்டி வரைக்கும் எதைப் பார்த்தாலும் படத்துல கொண்டு வந்து கொட்டியிருக்காங்க. ஒன்றுக்கொன்று சம்பந்தமே இல்லாத விஷயங்களை வச்சு ஒரு சினிமா எடுக்கலாம்னு இவங்க எப்படி முடிவெடுத்தாங்கன்னு தெரியல.
எந்த திருப்பமும் இல்லாத தட்டையான திரைக்கதை, எல்லாரும் ஈஸியா கெஸ் பண்ற மாதிரி ஒரு கிளைமாக்ஸ்னு படம் நம்மளை ரொம்பவே சோதிக்குது. ஜென் ஸீ காதலைப் பேசறேன்னு சொல்லிட்டு, வெறும் இன்ஸ்டாகிராம் ட்ரெண்டிங் விஷயங்களை மட்டும் வச்சு ஒரு படத்தை ஒப்பேத்தியிருக்காங்க.
மொத்தத்துல இந்த ‘பூக்கி’ – டைம் பாஸுக்காகப் போய் டைம் வேஸ்ட் பண்ண வைக்கும் ஒரு ரீல்ஸ் வீடியோ!
மார்க்: 1.75 / 5


