எக்ஸ் ஜட்ஜ் சந்திரசூட் பங்களாவை காலி செய்ய மத்திய அரசுக்கு கடிதம்!

இந்தியாவில் நீதித்துறை சார்ந்து அதிகம் எதிரொலித்த பெயர்களில் ஒன்று, டி.ஒய்.சந்திரசூட். காரணம், அவர் தன்னுடைய பணிக்காலத்தில் மதிப்புமிக்க பல தீர்ப்புகளை வழங்கியுள்ளார். இன்னும் சொல்லப்போனால் ஆளும் பாஜக அரசுக்கு எதிராகவே ஒருசில தீர்ப்புகளை வழங்கியுள்ளார். தனது 8 ஆண்டுக்கால உச்ச நீதிமன்ற பதவி காலத்தில் சுமார் 600 தீர்ப்புகளை தனியாக எழுதியுள்ளார். இதை தவிர ஆயிரத்து 200க்கும் அதிகமான உச்ச நீதிமன்ற தீர்ப்புகளில் அங்கம் வகித்திருக்கிறார். தற்போது உள்ள உச்ச நீதிமன்ற நீதிபதிகளில் அதிக எண்ணிக்கையில் தீர்ப்புகளை எழுதியது இவர்தான். இவர் எழுதிய தீர்ப்புகளில் சுமார் 68 தீர்ப்புகள் அரசியல் சாசனத்துடன் நேரடியாக தொடர்புகொண்டது. இந்நிலையி முன்னாள் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், தற்போதைய தலைமை நீதிபதிக்கு ஒதுக்கப்பட்ட பங்களாவை காலி செய்யாத நிலையில், அந்த பங்களாவை உடனடியாக காலி செய்து ஒப்படைக்குமாறு மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டுக்கு கடிதம் எழுதியுள்ளது.
அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்:
பங்களா எண் 5, கிருஷ்ணா மேனன் மார்க்: இது இந்தியாவின் தலைமை நீதிபதியின் அதிகாரபூர்வ இல்லமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
காலவரம்பு மீறல்: முன்னாள் தலைமை நீதிபதி சந்திரசூட், தான் பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு ஆறு மாதங்களுக்கு ஒரு அரசு இல்லத்தில் தங்கலாம் என்ற விதியை (Supreme Court Judges (Amendment) Rules, 2022-ன் விதி 3B) மீறி சுமார் எட்டு மாதங்களாக இந்த பங்களாவில் தங்கியுள்ளார். இந்த ஆறு மாத காலம் மே 10, 2025 அன்று முடிவடைந்தது.
நீட்டிக்கப்பட்ட அனுமதி காலாவதி: முன்னர் அவருக்கு மே 31, 2025 வரை பங்களாவில் தங்க சிறப்பு அனுமதி வழங்கப்பட்டது. அந்த காலக்கெடுவும் முடிவடைந்துவிட்டது. மேலும் எந்த நீட்டிப்பும் வழங்கப்படாது என்ற நிபந்தனையுடன் இந்த அனுமதி வழங்கப்பட்டது.
சுப்ரீம்கோர்ட்டின் வலியுறுத்தல்: பங்களாவை உடனடியாக காலி செய்து, சுப்ரீம் கோர்டின் வீட்டுவசதி பிரிவுக்கு திருப்பித் தருமாறு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்திற்கு சுப்ரீம் கோர்ட் நிர்வாகம் ஜூலை 1, 2025 அன்று கடிதம் எழுதியுள்ளது.
முன்னாள் நீதிபதியின் கோரிக்கை: இதற்கு முன்னர், ஓய்வுபெற்ற பிறகு தனக்கு ஒதுக்கப்பட்ட துக்ளக் சாலை பங்களாவில் புதுப்பிக்கும் பணிகள் நடைபெறுவதால், கிருஷ்ணா மேனன் மார்க் பங்களாவிலேயே ஏப்ரல் 30, 2025 வரை தங்க அனுமதி கோரி முன்னாள் தலைமை நீதிபதி சந்திரசூட் அப்போதைய தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியிருந்தார். இது அனுமதிக்கப்பட்டது. பின்னர், மே 31, 2025 வரை தங்க வாய்மொழி கோரிக்கை விடுத்தார், அதுவும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
ஓய்வுபெற்ற தலைமை நீதிபதிக்கு சொந்தமான குடியிருப்பை திரும்பப் பெற உச்ச நீதிமன்றம் முறையாக தலையிடுவது இது அரிதான நிகழ்வாகும்.
இதனிடையே சந்திரசூட் வீட்டைக் காலி செய்வதில் ஏற்பட்ட தாமதத்துக்கு தனது தனிப்பட்ட காரணங்களை சுட்டிக்காட்டி விளக்கம் அளித்துள்ளார். தனது இரண்டு மகள்களுக்கும் சிறப்புப் பராமரிப்புத் தேவைகள் உள்ளதாகவும், அவர்களின் தேவைகளுக்குப் பொருத்தமான ஒரு வீட்டைக் கண்டுபிடிப்பதில் தாமதம் ஏற்பட்டதாகவும் கூறினார். அதாவது “எனது மகள்களுக்கு கடுமையான இணை நோய்கள் மற்றும் மரபணுப் பிரச்சினைகள் உள்ளன – குறிப்பாக ‘நெமலின் மயோபதி‘ (nemaline myopathy) என்ற நோய்க்காக எய்ம்ஸ் மருத்துவமனையில் சிறப்பு மருத்துவர்களால் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது எனது தனிப்பட்ட பிரச்சினை என்பதை நான் முழுமையாகப் புரிந்துகொள்கிறேன். ஆனால், நான் ஒரு வீட்டைக் கண்டுபிடிக்க இவ்வளவு காலம் ஏன் ஆனது என்பதையும் நான் தெளிவுபடுத்த வேண்டும். இது குறித்து நான் ஏற்கனவே நீதிபதிகள் மற்றும் உச்ச நீதிமன்ற அதிகாரிகளுடன் விவாதித்துள்ளேன்,” என்று அவர் தெரிவித்தார்.
இந்த விவகாரம் விரைவில் தீர்க்கப்படும் என்றும், தனது முன்னாள் பதவியுடன் இணைந்த பொறுப்புகளை தான் முழுமையாக உணர்ந்திருப்பதாகவும் உறுதிப்படுத்தினார். “இது ஒரு சில நாட்கள் மட்டுமே, நான் மாறிவிடுவேன்… நான் மிக உயர்ந்த நீதித்துறை பதவியை வகித்தவன், என் பொறுப்புகளைப் பற்றி நான் முழுமையாக அறிந்திருக்கிறேன். நிச்சயமாக, கடந்த காலங்களில் ஓய்வுபெற்ற முன்னாள் தலைமை நீதிபதிகள், பெரும்பாலும் மாற்றம் அல்லது தனிப்பட்ட அவசரத் தேவைகளைச் சமாளிக்க, ஓய்வுக்குப் பிந்தைய அரசு குடியிருப்புகளைத் தக்கவைத்துக்கொள்ள நீட்டிக்கப்பட்ட காலம் அனுமதிக்கப்பட்டுள்ளனர்,” என்று நீதிபதி தெரிவித்தார்.
நிலவளம் ரெங்கராஜன்