சோனி மியூசிக்கின் “நா வேற லெவல்”:சென்னையில் கோலாகல வெளியீட்டு விழா!
மலேசியத் தமிழ் ஹிப்-ஹாப் இசையுலகின் முன்னணி நட்சத்திரமான ராப்பர், பாடலாசிரியர் மற்றும் இசை தயாரிப்பாளர் கிட் சாந்தே (Kidd Santhe) வின் புதிய சுயாதீன ஆல்பம் பாடலான “நா வேற லெவல்” பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. இப்பாடலை சர்வதேச முன்னணி இசை நிறுவனமான சோனி மியூசிக் (Sony Music) வெளியிட்டுள்ளது.
உலகளாவிய ‘தேசி ஹிப்-ஹாப்’ முகமான கிட் சாந்தே
மலேசியாவில் புதிய தலைமுறை தமிழ் ஹிப்-ஹாப் இசையின் அடையாளமாக விளங்குபவர் கிட் சாந்தே. தமிழ், ஆங்கிலம், மலாய் மற்றும் பஞ்சாபி ஆகிய மொழிகளைக் கலந்து இவர் பாடும் ராப் ஸ்டைல் உலகெங்கும் உள்ள ரசிகர்களைக் கவர்ந்த ஒன்றாகும்.

சிறு வயது முதலே பீட்பாக்சிங் (Beatboxing) மற்றும் இசையில் ஆர்வம் கொண்ட இவர், தனது 16-வது வயதில் பாடல்களைத் தயாரித்து ‘சவுண்ட்கிளவுட்’ (SoundCloud) தளம் வழியாகப் பிரபலமானார். பின்னர் மலேசியாவின் முன்னணி ஹிப்-ஹாப் குழுக்களுடன் இணைந்து பல ஹிட் பாடல்களைக் கொடுத்த சாந்தே, தற்போது உலகளாவிய “Desi Hip-Hop” இயக்கத்தின் முக்கிய இளம் கலைஞராக வளர்ந்து நிற்கிறார்.
ஏற்கனவே இவரது “API”, “SAMPAH”, “Penjenayah” மற்றும் இந்திய கலாச்சாரத்தின் ஆற்றலைப் பிரதிபலித்த “Ambani Money” ஆகிய பாடல்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச தரத்தில் சென்னை ஆல்பம்: இயக்குநர் பார்த்திபன் ரவி நெகிழ்ச்சி
இப்பாடலின் இயக்குநர் பார்த்திபன் ரவி விழாவில் பேசியதாவது:
“இது என்னுடைய முதல் சர்வதேச ஆல்பம் (International Album). ஏற்கனவே சோனி மியூசிக்குடன் இரண்டு மியூசிக் வீடியோக்கள் செய்திருந்தாலும், இந்த புராஜக்ட் எனக்கு மிகவும் ஸ்பெஷல். கிட் சாந்தேவின் அற்புதமான ஐடியாவை காட்சியாக மாற்ற வாய்ப்பளித்த சோனி மியூசிக் மலேசியா மற்றும் சோனி மியூசிக் சவுத் நிறுவனங்களுக்கு நன்றி. திலீபன், குணா மற்றும் ரே ஆகியோரின் உழைப்பும், அனைத்து கலைஞர்களின் பங்களிப்பும் தான் இந்த ஆல்பத்தின் வெற்றிக்குக் காரணம்.”
மலேசியக் கலைஞர்களின் கனவுக்கான தொடக்கம்: சோனி மியூசிக் ரேவதி மாரியப்பன்
சோனி மியூசிக் நிறுவனம் சார்பில் பேசிய ரேவதி மாரியப்பன்:
“இந்த ஆல்பத்தை மலேசியாவில் எடுக்கவே திட்டமிட்டிருந்தோம். ஆனால், இதைச் சென்னையிலேயே எடுக்கலாம் என்று கிட் சாந்தே தான் விருப்பம் தெரிவித்தார். தமிழ்நாட்டின் அன்பும் திறமைகளை அங்கீகரிக்கும் குணமும் எங்களை நெகிழ வைத்துள்ளது. தொழில்நுட்பத்தை மட்டும் நம்பாமல், நூற்றுக்கணக்கான கலைஞர்களின் நேரடி உழைப்பில் இப்பாடல் உருவாகியுள்ளது. கிட் சாந்தேவின் இந்த சர்வதேசத் தமிழ் இசை வெளியீட்டு வெற்றி, மலேசியாவில் இருக்கும் பல தமிழ் கலைஞர்களின் கனவுகளுக்கான தொடக்கமாக அமையும் என்று நம்புகிறோம்” என்றார்.

உண்மையான ஹீரோக்கள் ஆட்டோ ஓட்டுநர்கள் தான்: ராப்பர் கிட் சாந்தே உணர்ச்சிப்பூர்வ பேச்சு
நிகழ்வின் நாயகர் ராப்பர் கிட் சாந்தே பேசுகையில், இப்பாடலின் பின்னணியில் உள்ள சுவாரசியமான கதையைப் பகிர்ந்துகொண்டார்:
“சென்னைக்கு நான் முதன்முதலில் வந்தபோது என் கார் பஞ்சராகி நின்றது. அப்போது ஒரு ஆட்டோ ஓட்டுநர் எனக்கு டயர் மாற்ற உதவினார். அந்தத் தருணமே இப்பாடலின் முழு கருவாக மாறியது. இந்த ஆல்பம் மூலம் என்னை ஒரு நடிகராகவோ, இசையமைப்பாளராகவோ காட்ட நான் விரும்பவில்லை. சென்னையின் உண்மையான ஹீரோக்களான ஆட்டோ ஓட்டுநர்களைக் காட்டவே விரும்பினேன்.
தினமும் மக்களைப் பாதுகாப்பாகக் கொண்டு சேர்க்கும் அவர்கள் தான் நம் அன்றாட வாழ்க்கையின் மறைக்கப்பட்ட ஹீரோக்கள். ‘நா வேற லெவல்’ என்பது என்னை அல்ல, அவர்களைத் தான் குறிக்கிறது. இன்று எரிபொருள் விலை உயர்வு, பராமரிப்புச் செலவு, பைக் டாக்ஸி போட்டி எனப் பல சவால்களை அவர்கள் எதிர்கொள்கிறார்கள். அவர்களுக்கான மரியாதையும் அன்பும் இப்பாடல் மூலம் மக்களைச் சென்றடைய வேண்டும். தமிழ்நாடு எனக்குக் கொடுத்த வரவேற்புக்கு நன்றி” என நெகிழ்ந்து பேசினார்.
மேலும், இன்ஸ்டாகிராமில் தொடங்கி ஒரே ஸ்டுடியோ செஷனில் இந்தப் பாடலை உருவாக்கக் காரணமான தன் சகோதரர் போன்ற ‘ராவண ராம்’ மற்றும் 3 நாட்களிலேயே தனக்கு நடனம் கற்றுக்கொடுத்த நடன இயக்குநர் ஆகாஷ் ஆகியோருக்கும் தன் நன்றியைத் தெரிவித்தார்.
சென்னை ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வியலையும், மாஸான ஹிப்-ஹாப் இசையையும் இணைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த “நா வேற லெவல்” ஆல்பம் பாடல் தற்போது சோனி மியூசிக் சவுத் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ யூடியூப் (YouTube) பக்கத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.


