ஃபேமிலிஸ் கெட் ரெடி! பாண்டிராஜ் ஸ்டைலில் திரில்லர் காமெடி “பரிமளா & கோ”!

ஃபேமிலிஸ் கெட் ரெடி! பாண்டிராஜ் ஸ்டைலில் திரில்லர் காமெடி “பரிமளா & கோ”!

குடும்பங்கள் கொண்டாடும் படங்களை இயக்குவதில் கைதேர்ந்த பாண்டிராஜ், ‘தலைவன் தலைவி’ படத்தின் வெற்றிக்குப் பிறகு தனது 12-வது படைப்பாக இயக்கியுள்ள திரில்லர் காமெடி டிராமா திரைப்படம் தான் “பரிமளா & கோ”. விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு, திரைப் பிரபலங்கள் மற்றும் படக்குழுவினர் முன்னிலையில் சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது.

20 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் ஜெயராம் – ஊர்வசி மேஜிக்!

இவ்விழாவில் படத்தின் நாயகி மற்றும் மூத்த நடிகையான ஊர்வசி பேசியதாவது:

“வாழ்க்கையில் சில சமயங்களில் மட்டுமே ‘இந்த கதைதான் உண்மையான ஹீரோ’ என்று நம்பிக்கை தரும் கதைகள் நடிகர்களுக்கு அமையும். இந்தக் கதையைக் கேட்ட மாத்திரத்திலேயே எனக்கு அந்த நம்பிக்கை வந்துவிட்டது. அதிலும் ஜெயராம் இந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று தெரிந்தவுடன் என் சந்தோஷம் இரட்டிப்பானது. நாங்கள் இருவரும் இருபத்தைந்து படங்களுக்கு மேல் ஒன்றாக நடித்திருந்தாலும், கடந்த 20 ஆண்டுகளாகச் சேர்ந்து படம் செய்யவில்லை. இந்த வித்யாசமான கதை எங்கள் இருவருக்குமே உடனே பிடித்துவிட்டது.

பாண்டிராஜ் உள்ளிருக்கும் எழுத்தாளருக்கு எனக்கு எப்போதுமே மிகுந்த மரியாதை உண்டு. மலையாள சினிமாவில் தான் குறைந்த நாட்களில் தரமான படங்கள் எடுப்பார்கள் என்று சொல்வார்கள். ஆனால் சமீபத்தில் நான் வேலை செய்த படங்களில் மிக வேகமாக, திட்டமிட்டு முடிக்கப்பட்ட படம் இதுதான். மிஷ்கின் சார் ஒரு சிறந்த இயக்குநர் என்பதை எல்லோரும் அறிவார்கள். ஆனால் இந்த படத்தில் அவர் உள்ளிருக்கும் நடிகர், அதிலும் குறிப்பாக அவரது ‘நகைச்சுவை டைமிங்’ என்னை ஆச்சரியப்படுத்தியது” என்று நெகிழ்ந்து பேசினார்.

கதைதான் இந்த படத்தின் அசல் ஹீரோ: நடிகர் ஜெயராம்

நடிகர் ஜெயராம் பேசுகையில்:

“இந்த படத்தின் ஆரம்ப கட்டத்திலேயே லைக்கா போன்ற பெரிய நிறுவனம் இணைந்தது படத்திற்குப் பெரிய பலம். ஊர்வசி மேம், சஞ்சனா, அனந்திகா, யோகி பாபு, மிஷ்கின் சார், சிங்கம்புலி, சாண்டி மாஸ்டர் எனப் பல சிறந்த கலைஞர்கள் இதில் இணைந்துள்ளனர். தொழில்நுட்பக் குழுவின் உழைப்பும் அபாரமானது. ஆனால், எல்லாவற்றையும் தாண்டி இந்த படத்தின் உண்மையான ஹீரோ எங்களுடைய திரைக்கதை தான். பாண்டிராஜ் சார் கதை சொல்ல ஆரம்பித்தபோதே இது ஒரு ஸ்பெஷலான படம் என்று எனக்குத் தோன்றிவிட்டது” என்றார்.

பாண்டிராஜின் மிகப்பெரிய பலமே அவரது மொழிதான்: இயக்குநர் மிஷ்கின் பாராட்டு

இயக்குநர் மற்றும் இப்படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ள மிஷ்கின் பேசியதாவது:

“ஜெயராம் சார் மற்றும் ஊர்வசி அம்மாவுடன் சேர்ந்து நடிப்பது எனக்கு ஒரு பெரிய கனவு. இந்திய சினிமாவில் நடிப்பு என்றால் என்ன என்பதை எனக்குப் புரிய வைத்ததே ‘மைக்கேல் மதன காமராஜன்’ படத்தில் கமல் சாரும் ஊர்வசி அம்மாவும் நடித்த அந்த படிக்கட்டு காட்சி தான். அந்த அளவுக்குப் பெரிய நடிகர்களுடன் வேலை செய்தது எனக்குக் கிடைத்த பரிசு.

பாண்டிராஜ் தமிழ் சினிமாவில் மிகவும் தனித்துவமான இயக்குநர். மணிரத்னம் படங்களில் அழகான காட்சியமைப்புகள், சேரன் படங்களில் மனிதநேயம் இருப்பது போல, பாண்டிராஜின் மிகப்பெரிய பலம் அவரது மொழி. வட்டார மொழி, மனிதர்கள் பேசும் இயல்பான சொற்கள், அந்த மொழியின் நுணுக்கங்கள் என அனைத்தையும் ரசித்து வசனங்களை வடிவமைப்பவர். தயாரிப்பாளருக்கு வெற்றியையும், பார்வையாளர்களுக்கு முழுமையான பொழுதுபோக்கையும் தருவதில் அவர் மிகவும் தெளிவானவர்” எனப் பாராட்டினார்.

என் எனர்ஜிக்கு ஈடு கொடுத்த சாண்டி மாஸ்டர்: இயக்குநர் பாண்டிராஜ் நெகிழ்ச்சி

இறுதியாகப் பேசிய இயக்குநர் பாண்டிராஜ், படம் உருவான விதம் குறித்துப் பகிர்ந்துகொண்டார்:

“இக்கதை மூன்று வருடங்களுக்கு முன்பே எழுதப்பட்டது. ‘பரிமளா ஃபேமிலி’, ‘ஸ்வீட் ஹோம்’ எனப் பல தலைப்புகளை யோசித்து, இறுதியில் ‘பரிமளா & கோ’ என்று தேர்வு செய்தோம். ஜெயராம் சார், ஊர்வசி மேம் இருவரும் இந்த கதைக்குள் வந்ததும் படம் பாதி வெற்றி அடைந்துவிட்டது என்று நினைத்தேன். ஊர்வசி மேம் தனது சொந்த வாழ்க்கையில் ஒரு பெரிய சோகம் நடந்த தருணத்திலும், படப்பிடிப்பு பாதிக்கக் கூடாது என்று மறுநாளே வந்து நகைச்சுவைக் காட்சிகளில் நடித்துக் கொடுத்தார். அவர்களின் காம்பினேஷன் கடைசி வரை எடிட்டிங் டேபிளிலும் ஃப்ரெஷ்ஷாக இருந்தது.

செட்டில் என் எனர்ஜிக்கு ஈடு கொடுத்தவர் சாண்டி மாஸ்டர் தான். அனந்திகா, சஞ்சனா இருவரும் நிஜ அக்கா-தங்கை போலவே இயல்பாக நடித்திருக்கிறார்கள். மிஷ்கின் சார் மற்றும் அவருடைய தம்பியை முதன்முறையாக ஒரே படத்தில் நடிக்க வைத்தது சந்தோஷம். இசையமைப்பாளர் பாக்ஸன் (Foxn) இந்த படத்தின் மூலம் அறிமுகமாகிறார். அவர் இன்னொரு அனிருத் மாதிரி பெரிய அளவில் வருவார். லைக்கா நிறுவனம் இப்படத்தை மக்களுக்கு ஒரு பெரிய விருந்தாகக் கொண்டு சேர்க்கிறது” என்றார்.

“பரிமளா & கோ” – சுருக்கமான கதைக்களம்

இப்படம் ஒரு வித்தியாசமான குடும்பத்தைச் சுற்றி நகர்கிறது. அந்த குடும்பத்தில் உள்ள மனிதர்களின் தனித்துவமான குணாதிசயங்கள் மற்றும் அவர்கள் சந்திக்கும் அபூர்வமான சம்பவங்களே கதையின் மையம். சென்னை நகரத்தைத் தொடக்கமாகக் கொண்டு கோயம்புத்தூர் மற்றும் பாலக்காடு வரை பயணிக்கும் இந்த வித்யாசமான கதை, திரில்லர் பாணியிலும் அதேசமயம் பாண்டிராஜின் வழக்கமான நகைச்சுவை கலந்த குடும்ப பொழுதுபோக்கு பாணியிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

நட்சத்திரப் பட்டாளம்: ஜெயராம் – ஊர்வசி முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, இளம் நடிகர் சந்தோஷ் சோபன் – சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி மற்றும் சாண்டி மாஸ்டர் – அனந்திகா சனில்குமார் என இரண்டு ஜோடிகள் நடித்துள்ளனர். இவர்களுடன் யோகிபாபு முழுநீள நகைச்சுவை பாத்திரத்திலும், மிஷ்கின் முற்றிலும் மாறுபட்ட போலீஸ் அதிகாரியாகவும் நடித்துள்ளனர்.

Lyca Productions சார்பில் சுபாஸ்கரன் தயாரிப்பில், Tamilkumaran Productions மற்றும் Pasanga Productions இணைந்து தயாரித்துள்ள இத்திரைப்படம், மே மாத கோடை விடுமுறைக் கொண்டாட்டமாகத் திரைக்கு வரத் தயாராகி வருகிறது.