நீதியின் குரலாய் ஒலித்த ‘ரேவதி’: சாத்தான்குளம் வழக்கின் நிஜ நாயகிக்கு ஒரு சல்யூட்!
தமிழகத்தையே உலுக்கிய சாத்தான்குளம் தந்தை-மகன் (ஜெயராஜ் – பென்னிக்ஸ்) கொலை வழக்கில், ஒன்பது காவலர்களுக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பு இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்தத் தீர்ப்பின் பின்னணியில், அதிகார வர்க்கத்தின் மிரட்டல்களுக்கு அஞ்சாமல், ஒரு சாதாரணக் காவலராக இருந்து நீதியை நிலைநாட்டிய ரேவதி என்ற பெண்மணியின் துணிச்சலானப் பங்களிப்பை நாம் ஒருபோதும் மறந்துவிட முடியாது.
இருண்ட இரவின் மௌன சாட்சி
2020-ஆம் ஆண்டு அந்தப் பயங்கரமான இரவில், சாத்தான்குளம் காவல் நிலையத்தில் இரவுப் பணியில் இருந்தவர் காவலர் ரேவதி. தனது கண் முன்னாலேயே ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் இருவர் மீதும் காவல்துறை அதிகாரிகள் ஏவிய காட்டுமிராண்டித்தனமானத் தாக்குதல்களை அவர் நேரில் கண்டார். ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன் மற்றும் ரகுகணேஷ் ஆகியோர் அந்தத் தந்தை-மகனை எப்படியெல்லாம் சித்திரவதை செய்தார்கள் என்பதை ஒவ்வொரு நொடியாகத் தனது மனதில் பதிய வைத்துக்கொண்டார்.
அதிகாரத்தை எதிர்த்த அறச்சீற்றம்
குற்றவாளிகளான காவல்துறை அதிகாரிகள் அனைவரும் செல்வாக்கு மிக்கவர்கள்; ஆனால் ரேவதி ஒரு சாதாரணக் காவலர். “ஐயா, நான் உண்மையைச் சொல்கிறேன். ஆனால் எனக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். என் வேலைக்கும், என் பிள்ளைகளின் பாதுகாப்புக்கும் உங்களால் உத்தரவாதம் அளிக்க முடியுமா?” என்று மாஜிஸ்திரேட் பாரதிதாசனிடம் அவர் கேட்டபோது, ஒரு தாயாகவும், ஒரு நேர்மையான அதிகாரியாகவும் அவர் எவ்வளவு மனப்போராட்டத்தை எதிர்கொண்டிருப்பார் என்பது புரியும்.

மறைக்கப்பட்ட உண்மைகளை மீட்டெடுத்தவர்
காவல் நிலையத்தில் இருந்த ரத்தக் கறைகளை அழித்து, சிசிடிவி (CCTV) காட்சிகளைத் துடைத்து எறிந்து, ஆதாரங்கள் எதையும் மிச்சம் வைக்காமல் குற்றவாளிகள் கச்சிதமாகச் செயல்பட்டனர். ஆனால், ரேவதி அஞ்சவில்லை. துடைக்கப்பட்ட சுவர்களின் இடுக்குகளிலும், தளபாடங்களிலும் ஒட்டியிருந்த மிகச்சிறிய ரத்தத் திவலைகள் மற்றும் டிஎன்ஏ (DNA) ஆதாரங்களைச் சேகரிக்க விசாரணை அதிகாரிகளுக்கு அவர் பெரும் துணையாக இருந்தார். உயிருக்குப் போராடிய அந்தத் தந்தை-மகனுக்குக் காபியும், தண்ணீரும் கொடுத்து மனிதநேயம் காட்டியவர், அவர்கள் அனுபவித்த சித்திரவதையை நீதிமன்றத்தில் ஒரு சாட்சியாக நின்று விவரிக்கவும் தயங்கவில்லை.
அச்சுறுத்தல்களை வென்ற நேர்மை
இந்த நான்கு ஆண்டுகளில் ரேவதி சந்தித்த நெருக்கடிகள் கொஞ்சநஞ்சமல்ல. சக ஊழியர்களால் மிரட்டப்பட்டார், அதிகார மையங்களால் அச்சுறுத்தப்பட்டார், லஞ்சம் கொடுக்க முயன்றனர், தரக்குறைவாகவும் விமர்சிக்கப்பட்டார். ஆனாலும், “சாதாரண மனிதனுக்கு நீதி கிடைக்க வேண்டும்” என்ற ஒற்றை இலக்கோடு தனது சாட்சியத்தில் அவர் உறுதியாக நின்றார். இன்று ஒன்பது காவலர்களுக்குத் தூக்குத் தண்டனை கிடைத்துள்ளது என்றால், அதற்கு அந்தப் பெண்மணி காட்டிய மனதிடமே அஸ்திவாரம்.
நீதியின் அடையாளம்
காவல்துறை மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையைச் சில கறுப்பு ஆடுகள் சிதைக்கும்போது, அதே துறையில் இருக்கும் ரேவதி போன்றவர்கள் தான் அந்த நம்பிக்கையை மீண்டும் துளிர்க்கச் செய்கிறார்கள். சீருடை அணிந்த ஒவ்வொரு அதிகாரிக்கும் ரேவதி ஒரு முன்மாதிரி. நீதியின் பக்கம் நின்ற அந்த வீர மங்கைக்கு ஒட்டுமொத்தத் தமிழகமும் தலைவணங்குகிறது.
நிம்மி


