நதிகள் இணைப்பில் நாட்டம் காட்டாத நம் நாட்டு அரசியல் பீடைகள்!

நதிகள் இணைப்பில் நாட்டம் காட்டாத நம் நாட்டு அரசியல் பீடைகள்!

இந்தியாவின் மத்திய ஆட்சியில் ராணுவமும், மாநில ஆட்சிகளின் கீழ் காவல் துறையும் உள்ளன. இந்தியா பூகோள ரீதியாக மேலும் வலுவாக வேண்டுமானால், கங்கை – காவிரி நதிகளின் இணைப்பால்தான் அது முடியும். நதிகளை இணைப்பதற்கான திட்டத்தைப் பற்றி பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திலேயே கே.எஸ். ராவ், சர் ஆர்தர் காட்டன், டி.ஜே. தஸ்தூர், விஸ்வேஸ்வரய்யா, சி.பி. ராமசாமி ஐயர் முதலிய மேதைகள் தொலைநோக்கோடு சிந்தித்திருக்கிறார்கள். 1960-இல் சட்லஜ் நதியின் குறுக்கே பக்ராநங்கல் அணை கட்டப்பட்டு, பஞ்சாப் மாநிலம் இந்தியாவின் கோதுமைக் களஞ்சியமாக நேருஜி காலத்தில் மாறியது. 1961-இல் தமிழ்நாடு – கேரள மாநிலங்களுக்கு இடையில் பரம்பிக்குளம் – ஆழியாறு அணைக்கட்டை திறந்துவைத்த நேருஜி, இதுபோன்ற பல அணைக்கட்டுகள் வர வேண்டுமென்றார்.÷1960-இல் பஞ்சாபிலிருந்து பிரிந்த ஹரியாணாவின் விவசாய அபிவிருத்திக்காக, ரவி – பயஸ் இரு நதிகள் இணைக்கப்பட்டன.

edit jun 6

2003-இல் குடியரசுத் தலைவராக அப்துல் கலாம் இருந்தபோது, இந்தியாவின் வறட்சியையும், வெள்ளப் பெருக்கையும் தவிர்ப்பதற்கு நதிகளின் இணைப்பு அவசியம் என்று கூறினார். 1998-இல் 22 கட்சிகளைக் கொண்ட வாஜ்பாயின் கூட்டணி ஆட்சியில், கேபினெட் அமைச்சர் அந்தஸ்தில் சிவசேனை கட்சியின் சுரேஷ் பிரபு தலைமையில் ஒரு குழு தேசிய நதிகள் இணைப்புக்காகவே நியமிக்கப்பட்டது. முதல் திட்டம், தீபகற்ப நதிகளை இணைப்பது. இத் திட்டத்தின்படி, ஒடிஸாவிலுள்ள மகாநதியை ஆந்திரத்திலுள்ள கோதாவரியுடனும், கிருஷ்ணாவுடனும் இணைத்து அப்படியே கர்நாடகத்தின் காவிரி நதியுடன் இணைத்துத் தமிழ்நாட்டில் பாலாறு, பெண்ணையாறு, வைகை, தாமிரபரணி வரை 16 நதிகளோடு இணைப்பது.

வடஇந்தியாவில் ஓடும் கங்கை மற்றும் பிரம்மபுத்திராவின் வெள்ளப் பெருக்கு நீரைப் பாசன நீராகப் பயன்படுத்த சீனா, நேபாளம், வங்க தேசம் முதலிய அண்டை நாடுகளுடனும் கலந்து பேசி உருவாக்கப்பட வேண்டிய பெரிய திட்டம் அது. இத்திட்டம் நிறைவேற்றப் படுமானால், 700 கி.மீ. தூரத்திற்கு நீர்வழிப் போக்குவரத்தும், 75 ஆயிரம் மெகாவாட் நீர்மின் உற்பத்தியும், 7 கோடி ஏக்கருக்கான பாசன வசதியும் பெற முடியும். தென்னக நதிநீர் இணைப்புத் திட்டம் தென்னக மாநிலங்களுக்குக் கட்டாயமானதாக இல்லை. தமிழ்நாடு மாநிலத்திற்குத்தான் நதிகள் இணைப்பைவிட்டால் வேறு கதியே இல்லை. காரணம், முந்தைய ஆந்திரத்திற்குக் கடல் போன்ற கோதாவரி, கிருஷ்ணா நதிகளே போதும். கர்நாடகத்தில் ஓடும் காவிரி நதிநீர் அவர்களுடைய தேவையை நிறைவு செய்த பிறகுதான், தமிழகத்திற்குத் தரப்படுகிறது.

கேரள மாநிலத்திற்கோ அவர்களுடைய 46 சொந்த ஆறுகளும் அரபிக்கடலில் விழுந்து வீணாகிக் கொண்டிருந்தாலும் தமிழ்நாட்டிற்கு உதவும் எண்ணமே இன்னும் வரவில்லை. அதனால், ஒடிஸாவின் மகாநதி – காவிரி இணைப்புத் திட்டம்தான் மிகவும் காரிய சாத்தியமானது. அதற்கு ஆந்திரத்தின் ஆதரவும் கர்நாடகத்தின் ஒத்துழைப்பும் இருந்தால்தான் நிறைவேற்ற முடியும். தேசிய நதிகளான கங்கை-காவிரி இணைப்புத் திட்டம் எப்படிக் கிடப்பில் போடப்பட்டதோ, அதேபோல ஒடிஸா மகாநதி – காவிரி இணைப்புத் திட்டமும் கிடப்பில் போடப்பட்டுவிட்டது. கிடப்பில் இருந்த இணைப்புத் திட்டத்தைத்தான் வாஜ்பாய் ஆட்சி 2004-இல் உயிர்ப்பித்தது. ஆனால், பதவிக்காலம் முடிந்து ஆட்சியை இழந்துவிட்டது. காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்துவிட்டது.

இந்தச் சூழ்நிலையில், காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ராகுல் காந்திதான் நதிகளின் இணைப்பு இயற்கைக்கு விரோதமானது என்று முதன்முதலாகப் பேசினார். இதனைத் தெரிவித்த அவர் நீரியல் நிபுணரல்ல. நதிகளை இணைப்பதற்கு வனப் பகுதிகள் அழிக்கப்படுமானால், நதிகள் இணைப்பைப் பற்றி மறுபரிசீலனை செய்ய வேண்டி வருமென்று மத்தியப் பிரதேசத்தில் பத்திரிகையாளர் விழா ஒன்றில் அன்றைய பிரதமர் மன்மோகன் சிங், ராகுலின் கருத்தை எதிரொலித்தார். தேசியத் திட்டக்குழு துணைத் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியாவும் நதிகள் இணைப்புப் பற்றி அதிகமாகப் பேசத்தான் முடியுமே தவிர, நடைமுறைப் படுத்துவது எளிதானதல்ல என்றார். ஏறக்குறைய இதுவும் ராகுல் காந்தியின் கருத்தை ஆமோதிப்பதைப் போலவே அமைந்தது.

நதிகளின் இணைப்புப் பற்றிய வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் இருந்தபோது, 2011 அக்டோபரில் அதனைப் பற்றிக் கருத்துக் கூறிய உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.எச். கபாடியா, நதிநீர் இணைப்புக்காக அதிக நிதிச்சுமை அரசுக்கு ஏற்படுமானால், உச்சநீதிமன்றம் நதிநீர் இணைப்புத் திட்டத்திற்கு ஆதரவாகத் தீர்ப்பு வழங்காது என்று பேசினார். இக்கருத்துகள் எல்லாமே நதிகள் இணைப்பில் நாட்டமில்லை என்ற காங்கிரஸின் கருத்துகளே. தேசியக் கட்சிகளான இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் நதிகள் இணைப்பால் மாநிலக் கிளைகளின் ஆதரவை இழக்க நேரும் என்று நழுவிக் கொண்டன.

நதிகள் இணைப்பு அப்படி என்னதான் நாசத்தை ஏற்படுத்தி விடுமோ? குஜராத் எல்லையில் நர்மதா நதியிலிருந்து ராஜஸ்தான் மாநிலத்தின் தார் பாலைவனத்தின் சிறு பகுதியான ஜலேர் ஊருக்கு, 56 கிலோ மீட்டர் கால்வாய் வழியாக மனிதாபிமான அடிப்படையில் 2014 முதல் தண்ணீர் தரப்பட்டு வருகிறது. அதற்கு முன்பு அந்தப் பகுதி தார் பாலைவனத்தின் வெப்பத்திற்கு உட்பட்ட கடுமையான வறட்சிப் பகுதி. அங்குள்ள கிராம இளைஞர்களுக்கு வெளியிலிருந்து யாரும் பெண் தர மாட்டார்களாம்.ஏனெனில், அப்பெண்கள் 8 கி.மீ. தூரம் சென்று குடிநீர் கொண்டுவர வேண்டுமாம். நர்மதா கால்வாயின் தண்ணீர் அங்கு கிடைத்த பிறகு, குடிநீர்ப் பிரச்னையும் தீர்ந்தது. நல்ல விவசாயமும் நடக்கிறது. வறண்ட அந்தக் கிராமத்து மக்கள் இப்போது வளமாக வாழத் தொடங்கிவிட்டார்கள்.

இத்தனைக்கும் நர்மதா நதி ராஜஸ்தான் வழியாகச் செல்வதில்லை. ஒரு கால்வாய் வெட்டித்தான் இந்தத் தண்ணீர் அங்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. கால்வாய்த் தண்ணீரே ஒரு பாலைவனக் கிராமத்தைச் சோலைவனமாக்கி உள்ளதென்றால், இந்தியாவின் பிரதான நதிகள் இணைக்கப்பட்டால், நாடு எத்தகைய சுபிட்சமடையும் என்பதை எண்ணிப் பாருங்கள்.கடந்த மே 12-ஆம் தேதி நாடாளுமன்றக் கூட்டத்தில் கங்கை நதி புனரமைப்புக்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்றக் குழுவின் தலைவர் முரளிமனோகர் ஜோஷி, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில், “தேசிய நதிகளை இணைப்பது என்பது நடைமுறை சாத்தியமல்ல. சிறிய நதிகளை வேண்டுமானால், அந்தந்த மாநிலங்களுக்குள் இணைக்கலாம். பாசனநீரைப் பெருக்க வேண்டுமென்றால், வனப்பகுதிகளைப் பெருக்கி, மழையை அதிகமாகப் பெற்று அதன்மூலம் நீரைப் பெறலாம்’ என்ற கருத்தை தெரிவித்துள்ளார்.

அதோடு மட்டுமல்லாமல், மனித முயற்சியால் நதிகளை இணைப்பது சாத்தியமில்லை. ஒருவேளை அவ்வாறு அனைத்து நதிகளையும் இணைத்திருக்க முடியும் என்றால், அதை இயற்கையே செய்து முடித்திருக்குமே என்ற விஞ்ஞானத்திற்கு விரோதமான கருத்தையும் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். நதிகளை இணைப்பது சாத்தியமில்லை என்பதற்காக இயற்கையே அவ்வாறு செய்யவில்லை என்று கண்டுபிடித்தவர் ஜோஷி அவர்கள்தான்.

ஒரு மூலையிலிருந்து மற்றொரு மூலைக்கு நதிநீரைக் கொண்டு செல்ல வேண்டுமென்றால், அதற்குப் பல்லாயிரக்கணக்கான கிலோவாட் மின்சாரம் தேவைப்படும். அதுமட்டுமல்ல, டீசலில் இயக்கப்படும் ராட்சத பம்புசெட்டுகளும் தேவைப்படும். இது அதிகச் செலவுக்குரியது என்றும் தனக்குத்தானே முரண்பட்டும் கூறியுள்ளார்.முரளிமனோகர் ஜோஷி இயற்பியல் பேராசிரியர். வாஜ்பாய் ஆட்சியில் அமைச்சராக இருந்தவர். வாஜ்பாய், இந்தியாவின் முதல் பிரதமர் நேருவுக்குப் பிறகு முத்திரைப் பதித்தவர். கார்கில் ஊடுருவலைக் கண்டுபிடித்து விரட்டியவர். அப்பழுக்கற்ற ஞானியாக அரசியலைத் துறந்து முதிய அரசியல்வாதிகளுக்கு முன்மாதிரியாக வாழ்ந்து வருபவர். அவருக்குப் பிரியமான திட்டம்தான் தேசிய நதிகள் இணைப்புத் திட்டம்.

நதிகள் இணைப்புக்கு அதிகம் செலவாகும் என்று அவருக்குத் தெரியாதா? அவருடைய தங்க நாற்கரச்சாலைத் திட்டத்திற்குக் கொஞ்சமாகவா செலவாகியது? சாலைப் போக்குவரத்தில் அது ஒரு புரட்சியை உருவாக்கவில்லையா? அதுபோல நதிகள் இணைப்புத் திட்டமும் பாசனப் புரட்சியை உண்டாக்கும் திட்டம். அதற்கு அதிகம் செலவாவதைப்பற்றி அவர் பொருள்படுத்த வில்லை. அதை நிறைவேற்றவே வாஜ்பாய் 2004-இல் ஓர் ஆய்வுக் குழுவை சுரேஷ் பிரபு தலைமையில் (இன்றைய ரயில்வே அமைச்சர்) நியமித்தார்.
இப்போது நாடாளுமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்திருக்கும் ஜோஷி, வாஜ்பாய் ஆட்சியில் கல்வி அமைச்சராக இருந்தபோது ஏன் வாய்மூடி இருந்தார்? ராகுல் காந்தி, மன்மோகன் சிங், மாண்டேக் சிங் அலுவாலியா மற்றும் கம்யூனிஸ்டுகள் ஆகியோரின் அதே கருத்தை முரளிமனோகர் ஜோஷி இப்போது ஏன் முன் வைக்கிறார்? பா.ஜ.க. கட்சியிலிருந்து கொண்டே இப்படிப் பேசுவது வியப்பாக உள்ளது.

மின்சாரம் அதிகமாகச் செலவாகும் என்கிறார். ஆகட்டுமே! சூரிய ஒளி மின்சாரத்தை உற்பத்தி செய்தால், செலவு குறைந்து விடாதா? நதி களை இணைக்க முடியும் என்றால், இயற்கையே அதை செய்திருக்கும் என்று விஞ்ஞானத்திற்கு விரோதமான கருத்தை விஞ்ஞானப் பேராசிரியர் சொல்லலாமா? சட்லெஜ் நதியையும், பக்ராநங்கலையும் இணைத்துத்தானே பக்ராநங்கல் அணை கட்டப்பட்டது. தாமன்கங்கா- பிஞ்சால், பார் – டாப்பி – நர்மதா ஆகிய மூன்று நதிகளின் நீரையும் இணைக்க இப்போது திட்டம் தீட்டிக் கொண்டிருப்பவர் இவரல்ல, மத்திய நீர்வளத்துறை அமைச்சர்.

மத்தியப் பிரதேசத்திலும் உத்தரப் பிரதேசத்திலும் 15 லட்சம் ஏக்கர் பூமிக்குப் பாசன வசதி செய்ய, கென் நதியையும், பெட்வா நதியையும் இணைக்கும் திட்டம் மத்திய அரசால் இப்போது நடைபெற்றுக்கொண்டு இருக்கிறதே. இத்திட்டத்தால் பாசனநீர் மட்டுமல்லாமல், மத்தியப் பிரதேச வனத்திலுள்ள விலங்குகளுக்கான தண்ணீரும் உத்தரவாதப் படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கான செலவு ரூபாய் 9 ஆயிரம் கோடி. இத்திட்டத்தால் பண்டல்கண்ட் வறட்சிப்பகுதி வளம் பெறப்போகிறது.

நதிநீர் இணைப்பு இயற்கைக்கே விரோதம் என்று ஜோஷி கருத்துச் சொல்வதற்கு எங்கே போய் ஜோசியம் பார்த்தார் என்று தெரிய வில்லை. நதிகள் இணைப்பு காரிய சாத்தியமானது. விஞ்ஞானத்திற்கோ, இயற்கைக்கோ விரோதமானதல்ல. இதற்கான ஆதாரங்கள் நிறைய உள்ளன. இந்த நிலையில் ஜோஷி நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கை அவசியமற்றது; தமிழ்நாட்டிற்கு அநியாயம் செய்வதாகும். அரசியலைக் கடந்து இதனை எதிர்க்க வேண்டிய நமது தமிழ்நாட்டுக் கட்சிகள் ஏனோ மெளனமாக உள்ளன.

By பெ. சிதம்பரநாதன்
இணையாசிரியர்,
ஓம் சக்தி திங்களிதழ்.

Related Posts