சாலையில் திருஷ்டி பூசணிக்காய்களை உடைத்தால் நடவடிக்கை: போலீஸ் எச்சரிக்கை!

நாளை நாடெங்கும் கொண்டாடப்படும் ஆயுத பூஜையொட்டி சாலையில் திருஷ்டி பூசணிக்காய்களை உடைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
திருஷ்டி கழிக்கிறேன் என்ர பெயரில் பூசணி உடைப்பது அவரவர் நம்பிக்கையாக இருப்பதில் தவறில்லை. ஆனால், மற்றவர்களுக்கு எந்த பாதிப்பும் வரக்கூடாது என்பதில் கவனம் தேவை. தெருக்கள், சாலைகளில் உடைக்கப்படும் பூசணிக்காயால் என்னென்ன நடந்திருக்கிறது என்பதை சொல்ல தேவையில்லை. பைக்கில் செல்பவர்கள் எத்தனை பேர் பூசணிக்காயால் சறுக்கி விழுந்துள்ளனர். பலர் உயிரை துறந்துள்ளனர் என்பதை நினைத்து பார்க்க வேண்டும். பூசணிக்காய் இறப்புகளை தடுக்க தொடர்ந்து பிரசாரம் நடத்தப்படுகிறது. எனினும் விழிப்புணர்வுதான் முழுமையாக ஏற்படவில்லை. பூசணி உடைக்கலாம். உடைத்த பின் அதன் சிதறல்களை ஓரமாக தள்ளி வைத்தால் நடப்பவர்கள், வாகனங்களில் செல்பவர்களின் உயிருக்கு உத்தரவாதம் கிடைக்கும். இதை தனிப்பட்ட முறையில் ஒவ்வொருவரும் சிந்தித்தால்தான் விபத்துகளை தடுக்க முடியும். மற்றவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்ள யாருக்கும் உரிமையில்லை. அப்படி நடந்தால் சம்பந்தப்பட்டவர்களை தண்டிக்க சட்டமும் இருக்கிறது.
இந்நிலையில் சென்னை நகர போக்குவரத்து போலீசார் வெளியிட்ட அறிவிப்பில், “ஆயுதபூஜை பண்டிகையை முன்னிட்டு பெரும்பாலான பொதுமக்கள் வணிக நிறுவனங்கள், கடைகள் மற்றும் வாகனங்கள் போன்றவற்றிற்கு பூஜைகள் செய்து திருஷ்டி பூசணிக்காய்கள் உடைப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்கள். பலசமயங்களில் சாலைகளின் நடுவே திருஷ்டி பூசணிக்காய்களை உடைத்து அப்படியே விட்டுச் செல்வதால், வாகன ஓட்டிகள் வழுக்கி விழுந்து விபத்துகள் ஏற்படுவதும் அவ்வாறு விழும்போது பின்னால் வரும் வாகனங்கள் அவர்கள் மீது மோதி உயிருக்கு ஆபத்து ஏற்படுகிறது.
எனவே, பொதுமக்கள் சாலைகளில் வாகன ஓட்டிகளுக்கு ஆபத்து ஏற்படுத்தும் விதத்தில் திருஷ்டி பூசணிக்காய்களை உடைக்க வேண்டாம் எனவும், பாதுகாப்பான முறையில் தங்களது பூஜைகளை செய்யவும் சென்னை போக்குவரத்து போலீஸ் சார்பாக கேட்டுக்கொள்ளப்படு கிறது. மேலும், திருஷ்டி பூசணிக்கா ய்களை சாலைகளில் உடைத்து விபத்து ஏற்பட்டால், விபத்து ஏற்பட காரணமானவர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற் கொள்ளப்படும் எனவும் தெரிவித்து கொள்ளப்படுகிறது. பொதுமக்கள் தங்கள் ஒத்துழைப்பை நல்கி, விபத்தில்லா ஆயுதபூஜை பண்டிகையை கொண்டாட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்”என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.