தமிழ்நாட்டின் கஜானா காலியா? விஜய் அரசின் வெள்ளை அறிக்கை முழு விபரம்!

தமிழ்நாட்டின் கஜானா காலியா? விஜய் அரசின் வெள்ளை அறிக்கை முழு விபரம்!

மிழக வெற்றி கழகம் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்றவுடன், மாநிலத்தின் நிதிநிலை தொடர்பான உண்மைத் தன்மையை விளக்க வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என முதலமைச்சர் விஜய் ஏற்கனவே உறுதியளித்திருந்தார். முந்தைய தி.மு.க அரசு தமிழ்நாட்டின் கஜானாவை காலி செய்துவிட்டதாக விஜய் ஏற்கனவே கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்த நிலையில், இன்றைய தினம் அறிவித்தப்படி வெளியாகி உள்ள இந்த வெள்ளை அறிக்கைhttps://www.aanthaireporter.in/storage/2026/06/AanthaiReporter-TN_White_Paper_Press_Briefing_Tamil_16.6.2026.pdf அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.

அரசின் வரவு-செலவு கணக்குகள், நிதிநிலை, கடந்த அரசின் செயல்பாடுகள் குறித்து இந்த வெள்ளை அறிக்கையில் விரிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அறிக்கையை வெளியிட்ட நிதியமைச்சர் மரிய வில்சன், மாநிலத்தின் கடன் சுமை அதிகரிக்க நான்கு முக்கிய காரணங்கள் உள்ளதாக தெரிவித்தார். அதில், மாநிலத்தின் சொந்த வரி வருவாய் குறைந்திருப்பது முதலாவது காரணமாகவும், வட்டிச் செலவினங்கள் அதிகரித்திருப்பது இரண்டாவது முக்கிய காரணமாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும், பொறுப்பற்ற செலவினங்கள் மூன்றாவது காரணமாகவும், மூலதனச் செலவினங்களின் பாதிப்பு நான்காவது காரணமாகவும் இருப்பதாக தெரிவித்தார். இந்த காரணிகளால் மாநிலத்தின் நிதிநிலை பாதிக்கப்பட்டு, கடன் சுமை தொடர்ந்து அதிகரித்து வருவதாக வெள்ளை அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் நிதிநிலையைப் பற்றிய இந்த அறிக்கை வெறும் கணக்குப் புத்தக விவரங்களின் தொகுப்பாக இல்லாமல், கடந்த ஐந்து ஆண்டுகளில் மாநில பொருளாதாரம் எந்த திசையில் பயணித்தது என்பதற்கான ஒரு அரசியல் மற்றும் பொருளாதார மதிப்பீடாகவும் பார்க்கப்படுகிறது. குறிப்பாக, கொரோனா பெருந்தொற்றுக்குப் பிந்தைய மீட்புக் காலத்தில் பல மாநிலங்கள் தங்களது நிதிநிலையை வலுப்படுத்திய நிலையில், தமிழ்நாடு எதிர்மாறான பாதையில் சென்றுள்ளதாக அறிக்கை வலியுறுத்துகிறது.

இரு மடங்கான கடன் சுமை: ஐந்து ஆண்டுகளில் 10 இலட்சம் கோடி

வெள்ளை அறிக்கையின் மிக முக்கியமான கண்டுபிடிப்பு மாநிலத்தின் கடன் உயர்வுதான். 2020-21ஆம் ஆண்டில் ரூ.5.13 இலட்சம் கோடியாக இருந்த மொத்த நிலுவைக் கடன், 2025-26ஆம் ஆண்டில் ரூ.10 இலட்சம் கோடியை எட்டியுள்ளதாக அறிக்கை தெரிவிக்கிறது.

ஒரு மாநிலத்தின் கடன் உயர்வது புதிய முதலீடுகள், கட்டமைப்பு வசதிகள் மற்றும் வளர்ச்சித் திட்டங்களுக்காக என்றால் அது பொருளாதார ரீதியாக நியாயப்படுத்தப்படலாம். ஆனால் தமிழ்நாட்டில் கடன் உயர்ந்த வேகத்திற்கும், மூலதன முதலீடுகள் உயர்ந்த வேகத்திற்கும் இடையே பெரிய இடைவெளி இருப்பதாக அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் கடன் வளர்ச்சி விகிதம் 14.3 சதவீதமாக இருந்த நிலையில், மூலதனச் செலவின வளர்ச்சி வெறும் 8.3 சதவீதமாக மட்டுமே இருந்துள்ளது. இதனால் புதிய சொத்துகளை உருவாக்குவதைவிட அன்றாட நிர்வாகச் செலவுகளை சமாளிக்கவே கடன் பெறப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தை அறிக்கை எழுப்புகிறது.

ஒவ்வொரு தமிழரின் தலையிலும் ரூ.1.29 லட்சம் கடன்

கடன் உயர்வின் தாக்கம் தனிநபர் அளவிலும் வெளிப்படுகிறது. 2020-21ஆம் ஆண்டில் ஒரு தமிழரின் மீது இருந்த சராசரி கடன் சுமை ரூ.67,087 ஆக இருந்தது. தற்போது அது ரூ.1,28,934 ஆக உயர்ந்துள்ளதாக அறிக்கை கூறுகிறது.

இதன் பொருள், தமிழ்நாட்டில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் ஒரு லட்ச ரூபாய்க்கும் அதிகமான கடன் சுமையுடன் பிறக்கிறது என்பதாகும். இதனை அறிக்கை கவலைக்குரிய பொருளாதாரச் சுட்டிக்காட்டாக விவரிக்கிறது.

வரலாறு காணாத வருவாய்ப் பற்றாக்குறை

ஒரு அரசின் அன்றாட வருவாயால் அதன் அன்றாட செலவுகளை ஈடுகட்ட முடியாத நிலையே வருவாய்ப் பற்றாக்குறை எனப்படுகிறது. தமிழ்நாட்டில் இந்தப் பற்றாக்குறை தற்போது வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளதாக அறிக்கை தெரிவிக்கிறது.

2025-26ஆம் ஆண்டில் வருவாய்ப் பற்றாக்குறை ரூ.78,324 கோடியாக உயர்ந்துள்ளது. ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், இந்த அளவு பற்றாக்குறை கொரோனா பெருந்தொற்று உச்சத்தில் இருந்த 2020-21ஆம் ஆண்டின் பற்றாக்குறையையும் மிஞ்சியுள்ளது.

பொருளாதார நிபுணர்களின் பார்வையில் இது மிகவும் முக்கியமான எச்சரிக்கை. ஏனெனில், ஒரு அரசு வளர்ச்சித் திட்டங்களுக்காக அல்லாமல் சம்பளம், ஓய்வூதியம், மானியம் போன்ற அன்றாட செலவுகளுக்காக கடன் பெற வேண்டிய நிலை உருவாகியிருப்பதை இது காட்டுகிறது.

சொந்த வரி வருவாயில் சரிவு

தமிழ்நாட்டின் நிதிநிலையை பாதித்த முதல் காரணமாக நிதியமைச்சர் குறிப்பிட்டது மாநிலத்தின் சொந்த வரி வருவாய் குறைந்திருப்பதையே.

ஒரு காலத்தில் இந்தியாவின் முன்னணி வரி வசூல் மாநிலங்களில் ஒன்றாக இருந்த தமிழ்நாடு, தற்போது அந்த முன்னிலைப் பலத்தை இழந்து வருவதாக அறிக்கை குறிப்பிடுகிறது.

மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சொந்த வரி வருவாயின் பங்கு 2021-22ஆம் ஆண்டில் 5.93 சதவீதமாக இருந்த நிலையில், 2025-26ஆம் ஆண்டில் அது 5.45 சதவீதமாகக் குறைந்துள்ளது. இது ஆய்வு செய்யப்பட்ட காலகட்டத்தில் பதிவான மிகக் குறைந்த அளவாகும்.

சரக்கு மற்றும் சேவை வரி வசூலில் உள்ள குறைபாடுகள், முத்திரைத்தாள் வருவாய் சரிவு, ஆயத்தீர்வை வருவாய் வளர்ச்சியின் மந்தநிலை மற்றும் கனிமவளத் துறையில் ஏற்பட்ட வருவாய் இழப்புகள் ஆகியவை இதற்கான முக்கிய காரணங்களாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன.

வட்டிச் செலவினங்களின் வெடித்தளவு உயர்வு

கடன் அதிகரித்தால் அதன் வட்டிச் சுமையும் அதிகரிக்கும் என்பது பொருளாதார விதி. தமிழ்நாட்டின் தற்போதைய நிலை அதையே உறுதிப்படுத்துகிறது.

2025-26ஆம் ஆண்டில் வட்டிச் செலவு மட்டும் ரூ.67,050 கோடியாக உயர்ந்துள்ளது. இதே ஆண்டில் மாநிலத்தின் மூலதனச் செலவினம் ரூ.50,911 கோடியாக மட்டுமே உள்ளது.

அதாவது, வளர்ச்சிக்காக செலவிடப்படும் ஒவ்வொரு ரூபாய்க்கும் ரூ.1.32 வட்டிச் செலவாக செல்கிறது. மாநிலத்தின் மொத்த வருவாய் வரவுகளில் 22.8 சதவீதமும், சொந்த வரி வருவாயில் 34.8 சதவீதமும் வட்டிக்கே செலவிடப்படுவதாக அறிக்கை தெரிவிக்கிறது.

இதனால் புதிய திட்டங்களை அறிவிக்கவும், கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் அரசுக்கு நிதி நெருக்கடி உருவாகிறது.

பொறுப்பற்ற செலவினங்களின் சுமை

மாநில வருவாயில் பெரும் பகுதியை சம்பளம், ஓய்வூதியம் மற்றும் வட்டிச் செலவுகள் விழுங்கிவிடுகின்றன. இந்த மூன்று பிரிவுகளுக்காக மட்டும் 2025-26ஆம் ஆண்டில் ரூ.1.89 இலட்சம் கோடி செலவிடப்படுவதாக அறிக்கை கூறுகிறது.

மொத்த வருவாய் வரவுகளில் 64.4 சதவீதம் இந்த கட்டாயச் செலவுகளுக்கே செல்கிறது. மானியங்கள், மத்திய திட்டங்களுக்கான மாநில பங்கு மற்றும் பிற சட்டப்பூர்வச் செலவுகளையும் சேர்த்தால், மாநிலத்தின் வருவாயில் சுமார் 87 சதவீதம் முன்கூட்டியே ஒதுக்கப்பட்டுவிடுகிறது.

இதனால் வளர்ச்சித் திட்டங்களுக்காக பயன்படுத்தக்கூடிய நிதி மிகவும் குறுகிய அளவுக்கு சுருங்கியிருப்பதாக அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

குறைந்து வரும் மூலதன முதலீடுகள்

மாநிலத்தின் எதிர்கால வளர்ச்சிக்கான அடித்தளம் மூலதன முதலீடுகள்தான். சாலைகள், பாலங்கள், மருத்துவமனைகள், தொழிற்பூங்காக்கள், குடிநீர் திட்டங்கள் போன்றவை அனைத்தும் இந்தப் பிரிவின் கீழ் வருகின்றன.

ஆனால் தமிழ்நாட்டின் மூலதனச் செலவினம் மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வெறும் 1.44 சதவீதமாக மட்டுமே உள்ளது. குஜராத், கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது இது மிகவும் குறைவானதாக அறிக்கை கூறுகிறது.

இதன் விளைவாக நீண்டகால பொருளாதார வளர்ச்சி வாய்ப்புகள் பாதிக்கப்படலாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மத்திய நிதிப் பகிர்வும் ஒரு சவால்

மாநிலத்தின் நிதிநிலையை பாதித்த வெளிப்புற காரணிகளில் முக்கியமானது மத்திய அரசின் நிதிப் பகிர்வில் ஏற்பட்ட மாற்றங்களாகும்.

10வது நிதிக்குழுவில் 6.64 சதவீதமாக இருந்த தமிழ்நாட்டின் பங்கு, தற்போது 4.097 சதவீதமாகக் குறைந்திருப்பதாக அறிக்கை கூறுகிறது. இதனால் மாநிலத்திற்கு கிடைக்கும் நிதி ஆதாரங்கள் குறைந்து, நிதிநெருக்கடி மேலும் அதிகரித்துள்ளதாக மதிப்பிடப்படுகிறது.

அரசியல் தாக்கம் என்ன?

இந்த வெள்ளை அறிக்கை வெளியான உடனேயே தமிழ்நாட்டு அரசியலில் கடுமையான விவாதங்கள் வெடித்துள்ளன. தமிழக வெற்றி கழக அரசு, முந்தைய தி.மு.க ஆட்சியின் நிதி நிர்வாகமே தற்போதைய நெருக்கடிக்குக் காரணம் என வலியுறுத்துகிறது.

மறுபுறம், தி.மு.க தரப்பில் கொரோனா, மத்திய அரசின் நிதிப் பகிர்வு கொள்கைகள், தேசிய பொருளாதார சூழ்நிலை உள்ளிட்ட காரணிகளே மாநிலத்தின் நிதிநிலையை பாதித்ததாக வாதிடப்படும் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

எனவே இந்த வெள்ளை அறிக்கை வெறும் பொருளாதார ஆவணம் மட்டுமல்ல; அடுத்த சில மாதங்களுக்கு தமிழக அரசியலின் மைய விவாதமாக மாறக்கூடிய ஆவணமாகவும் பார்க்கப்படுகிறது.

தமிழ்நாடு இன்று எதிர்கொள்ளும் மிகப் பெரிய கேள்வி ஒன்று மட்டுமே: தொடர்ந்து கடன் பெற்று செலவுகளை நிர்வகிக்கும் பொருளாதார மாதிரியா தொடரப் போகிறது, அல்லது வருவாய் உயர்வு, முதலீட்டு விரிவாக்கம் மற்றும் நிதி ஒழுங்குமுறைகளை மையமாகக் கொண்ட புதிய பொருளாதாரப் பாதையா உருவாகப் போகிறது? அந்தக் கேள்விக்கான விவாதத்தையே இந்த வெள்ளை அறிக்கை தொடங்கி வைத்திருக்கிறது.

வாத்தீ அகஸ்தீஸ்வரன்

Related Posts