இன்டர்வெல்லில் மெகா ட்விஸ்ட்: ‘கட்டா குஸ்தி 2’ அப்டேட்ஸ்!
ஃபேமிலி, ஆக்ஷன், சைக்கோ த்ரில்லர், சயின்ஸ் ஃபிக்ஷன் எனப் பல ஜானர்களில் வெற்றிகளைக் குவித்து வரும் விஷ்ணு விஷால் நடிப்பில், மிகப்பெரிய ஹிட் அடித்த ‘கட்டா குஸ்தி’ படத்தின் அடுத்த பாகம் தயாராகிவிட்டது. ‘கட்டா குஸ்தி 2’ என்று பெயரிடப்பட்டுள்ள இத்திரைப்படம் வரும் ஜூலை 3-ஆம் தேதி உலகம் முழுவதும் தியேட்டர்களில் ரிலீஸாகிறது.
விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் மற்றும் வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் ஐசரி கே.கணேஷ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தை செல்லா அய்யாவு இயக்கியுள்ளார். ஷான் ரோல்டன் இசையமைப்பில், கே.எம்.பாஸ்கரன் ஒளிப்பதிவில் உருவாகியுள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அதில் படக்குழுவினர் பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல்களின் தொகுப்பு இதோ:

முதல் பாகத்தை விட இதில் என்ன ஸ்பெஷல்? — இயக்குநர் செல்லா அய்யாவு
“ஆரம்பத்தில் இரண்டாம் பாகம் எடுக்கும் யோசனையே இல்லை. விஷ்ணு விஷால் கேட்ட பிறகுதான் ஒரு லைன் யோசித்து அவரிடம் சொன்னேன். அரை மணி நேரப் பேச்சில் உருவானதுதான் இந்தக் கதை.
முதல் பாகத்தில் இருந்த அத்தனை சுவாரஸ்யங்களும் இதிலும் இருக்கும், ஆனால் முற்றிலும் வித்தியாசமான பாணியில் கையாண்டிருக்கிறோம். முதல் பாகத்தின் இன்டர்வெல் பிளாக்கில் ஐஸ்வர்யா லட்சுமி பற்றிய உண்மை தெரியவரும்போது ஒரு பெரிய ட்விஸ்ட் இருந்தது அல்லவா? அதேபோன்ற ஒரு மிகப்பெரிய திருப்பம் இந்த இரண்டாம் பாகத்திலும் ஒளிந்திருக்கிறது. அது தியேட்டரில் பார்க்கும்போது ரசிகர்களுக்கு செம்ம சர்ப்ரைஸாக இருக்கும்.”
பார்ட் 2 ஆசையை நிறைவேற்றிய ‘கட்டா குஸ்தி’ — விஷ்ணு விஷால்
“என் சினிமா கரியரில் ராட்சசன், முண்டாசுப்பட்டி, இன்று நேற்று நாளை, எஃப்.ஐ.ஆர் எனப் பல படங்களுக்கு இரண்டாம் பாகம் எடுக்க பேச்சுவார்த்தை நடந்து, சில காரணங்களால் தள்ளிப்போனது. அதனால் எப்படியாவது ஒரு ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தை பண்ணியே தீர வேண்டும் என்ற வெறியில் இருந்தேன். அது செல்லா அய்யாவு மூலம் இந்த வாரம் சாத்தியமாகியிருக்கிறது.
முதல் பாகத்தில் ‘பெண்கள் இப்படித்தான் இருக்க வேண்டும், ஆண்கள் இப்படித்தான் இருக்க வேண்டும்’ என்ற பழைய பாணியை உடைத்திருந்தோம். இதில் அதற்கு நேர்மாறாக இருக்கும். தன் மனைவியை நேஷனல் லெவல் சாம்பியன் ஆக்க துடிக்கும் ஒரு கணவன், அதற்காக எதிர்கொள்ளும் சவால்களையும், பஞ்சாயத்துகளையும் செம்ம காமெடியாகச் சொல்லியிருக்கிறோம்.”
ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தரும் கதைகளைத் தேர்ந்தெடுப்பது ஏன்?
தொடர்ந்து பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடிப்பது குறித்து விஷ்ணு விஷால் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார்:
“என் நிஜ வாழ்க்கையில் பெண்களின் பங்கு மிக முக்கியமானது. என் தந்தை ஐபிஎஸ் அதிகாரி என்பதால் அடிக்கடி ஊர் மாற வேண்டி இருந்தது. அப்போது என் அம்மாதான் குடும்பத்தை ஒற்றையாளாகப் பொறுப்புடன் கவனித்துக் கொண்டார். அதேபோல், என் அக்கா சிறப்பாகப் படித்து உலகளவில் ஒரு முக்கிய வங்கியில் உயர் பதவியில் இருக்கிறார். அவரது உழைப்பால்தான் எங்கள் குடும்பமே அடுத்த நிலைக்கு முன்னேறியது.

என் சினிமா பயணத்திற்கும் அவர்தான் பக்கபலமாக இருக்கிறார். இந்தத் திரைப்படத்தின் இணை தயாரிப்பாளராகவும் என் அக்கா ‘சுப்ரா’ பணியாற்றியுள்ளார். நிஜ வாழ்க்கையில் என் முன்னேற்றத்திற்குக் காரணமான பெண்களுக்கு முக்கியத்துவம் தரும்போது, சினிமாவில் பெண்களை மையப்படுத்திய கதைகளில் நடிப்பதில் எனக்குப் பெருமையே. வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் இதைத் தொடர்வேன்.”
“காமெடிதான் உலகத்திலேயே கஷ்டம்!”
பல்வேறு ஜானர்களில் நடித்தாலும் காமெடி உங்களுக்கு எளிதாக இருந்ததா என்ற கேள்விக்கு விஷ்ணு விஷால் பதிலளிக்கையில், “செண்டிமெண்ட், ஆக்ஷன் காட்சிகளைக் கூட எளிதாகச் செய்துவிடலாம். ஆனால் காமெடிதான் மிகக் கடினம். அதற்கு ‘டைமிங்’ ரொம்ப முக்கியம். கொஞ்சம் மிஸ்ஸானாலும் போரடித்துவிடும். மக்கள் தங்களின் கவலைகளை மறந்து சிரிக்கத்தான் தியேட்டருக்கு வருகிறார்கள். மெசேஜ் சொல்லும் படங்கள் ஒருபுறம் இருந்தாலும், மக்களை மகிழ்விக்கும் காமெடி படங்கள் அதிகம் வர வேண்டும். அதனால்தான், வருடத்திற்கு ஒரு முறையாவது ஒரு முழுநீள காமெடி படத்தில் நடிக்க வேண்டும் என முடிவெடுத்துள்ளேன்” என்றார்.
பிசினஸில் மாஸ் காட்டும் ‘கட்டா குஸ்தி 2’
“என் கரியரிலேயே அதிக லாபத்தையும், மிகப்பெரிய வியாபாரத்தையும் பார்த்த படம் இதுதான். படத்தின் அவுட்புட்டைப் பார்த்துவிட்டு தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் ‘என் நிறுவனத்தில் உருவான படங்களிலேயே மிகச்சிறந்த படம் இதுதான்’ எனப் பாராட்டினார்.
முதல் பாகம் வெற்றி என்பதால் பட்ஜெட்டை தேவையின்றி இரண்டு மடங்கு ஆக்காமல், கதைக்கு என்ன தேவையோ அந்த நியாயமான பட்ஜெட்டில் நேர்த்தியாக எடுத்தோம். அதனால், பிசினஸ் ரீதியாக ஒட்டுமொத்தக் குழுவும் செம்ம ஹேப்பியாக இருக்கிறோம்” என உற்சாகமுடன் முடித்தார் விஷ்ணு விஷால்.
இது எனக்குக் கிடைத்த பாக்கியம் — ஐஸ்வர்யா லட்சுமி
“நான் நடிகையானதே ஒரு வரப்பிரசாதம். அதிலும் முதல் பாகத்தைத் தொடர்ந்து இந்த இரண்டாம் பாகத்திலும் என்னை மையப்படுத்தியே கதை நகர்வது நான் செய்த புண்ணியம். பெண்களைக் கொண்டாடும் இந்தக் கதை நிச்சயம் அனைத்துத் தரப்பு ரசிகர்களுக்கும் பிடிக்கும்” எனத் தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார் நாயகி ஐஸ்வர்யா லட்சுமி.


