பட்டாஸ் – விமர்சனம்!
1970 களில் புரூஸ் லீ –என்னும் ஹாலிவுட் நாயகன் ஏற்படுத்திய அதிரடி ஆக்ஷன் சூறாவளியில் சிக்கி மரை கழண்ட போனார்கள் இந்திய சினிமா ரசிகர்கள். நம் தமிழகத்தில் கூட பலரும் அப்போதுதான் புரூஸ் லீ வாழ்க்கை வரலாற்றையும், அவரின் குங்க் ஃபூ சண்டை குறித்தும் அறிந்து கொள்ள ஆலாய் பறந்தார்கள்.. இத்தனைக்கும் 1976ம் ஆண்டில் இந்தியாவில் இந்த திரைப்படம் திரையிடப்பட்டது. ஆனால் புரூஸ் லீ 1973ம் ஆண்டிலேயே இறந்து விட்டார் என்ற உண்மையே அப்போது எந்த இந்திய ரசிகருக்கும் தெரியாது. நம் சென்னை உள்பட எல்லா நகரங்களிலும் ஓடு ஓடு என்று ஓடியது எண்டர் த டிராகன். முதல் தடவை சென்னையில் திரையிடப்பட்டு 25 வாரங்கள் ஓடியதை விடுங்கள். மீண்டும் திரை யிடப்பட்டபோது 100 நாட்கள் ஓடியது. இந்தியாவில் இந்தப் படம் வசூலைக் குவிக்காத நகரமே இல்லை என்றானது. பார்த்த ரசிகர்கள் மீண்டும் மீண்டும் பார்த்தனர். 30 தடவைப் பார்த்தேன், 40 தடவைப் பார்த்தேன் என்று பெருமையாக சொல்லிக் கொள்ளும் ரசிகர்கள் ஏராளம். அச்சூழலைப் பயன்படுத்தி ஜே. எம்.சாலி உள்ளிட்ட சில எழுத்தாளர் கள் மேற்படி புரூஸ் லீ, கராத்தே, ஜூடோ, குங்க் ஃபூ குறித்தெல்லாம் ஏகப்பட்ட புத்தகங்கள் எழுதியது வெளி வந்து செம சேல்ஸ் ஆயின.. கூடவே நாடெங்கும் கராத்தே., குங்ஃபூ பயிற்சி மையங்கள் உருவாகி இன்று வரை கூட பல செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.. இதை எல்லாம் சுட்டிக் காட்டி நம் தமிழகத்தில் முன்னொருக் காலத்தில் அடிமுறை என்றொரு கலை இருந்ததே.. அதையும் கொஞ்சம் யோசிங்கப்பா என்ற சுட்டிக் காட்ட பட்டாஸ் என்ற தலைப்பில் தனுஷை வைத்து ஒரு ஜாலியான சினிமா கொடுத்து தெறிக்க விட்டுள்ளர்கள்..!
எடுத்துக் கொண்ட அடிமுறைக் கலை என்னும் ஒற்றை முதுகெலும்புக்காக ‘எதிர்நீச்சல்’, ‘காக்கிச் சட்டை’, ‘கொடி’ என ஜாலியான படங்கள் கொடுத்த துரை செந்தில்குமார் பட்டாஸ் படத்துக்காக எடுத்திருக்கும் கதையும் ரொம்ப சிம்பிள்தான். வளர்ப்புத் தந்தை முனீஷ்காந்த் ராமதாஸ்-ஸால் வளர்க்கப்படும் தனுஷ் & சதீஷ் (கலக்கப் போவது யாரு) இருவரையும் வைத்து திருட்டுத் தொழில் செய்து பிழைப்பை ஓட்டி வருகிறார். இதனிடையே ஆயுள் தண்டனையை முடித்துவிட்டு கேரளா ஜெயிலில் இருந்து விடுதலை அடைந்து சென்னை வரும் சினேகா இந்த திருடன் தனுஷைக் கண்டு அப்படியே ஷாக் & ஹேப்பி அடைகிறார்.
ஹூம்.. அப்புறம் இதே திருடன் சத்யா என்கிற ‘பட்டாஸ்’ தனுஷின் நயினா ‘திரவிய பெருமாள்’ (தாடி வச்ச தனுஷ்) ஒரு மிகச் சிறந்த ‘அடிமுறை’ வீரராக இருந்தார் என்பதுடன் அவரது அம்மே-தான் ‘கன்யாகுமரி’ என்ற இந்த சினேகா என்பது இவர்களில் அப்பா தனுஷ் என்னவானார்? இந்த மகன் எப்படி, ஏன், யாரால் பிரிந்தார்? என ஒவ்வொரு சினிமா ரசிகருக்கும் தெரிந்த கதைதான் இந்த ‘பட்டாஸ்’.
இந்தக் கதை இண்டர்வெல் வரை விடலைத்தனமாக போனாலும் இடைவேளை முடிந்து ஃப்ளாஷ் பேக்கில் வரும் (தாடி) தனுஷ் ‘திரவிய பெருமா’ ளாக அதன் அருமை, பெருமை புரிந்து அந்த ரோலுக்கு தேவையான அளவு சிறப்பான நடிப்பை தந்திருக்கிறார். அவரை விட இந்த பட்டாஸுக்கு த்ரி என்றால் அது சினேகாதான். முழுக் கதையையும் இவரே தாங்கி நிற்கிறார். முன்னதாக வயதான அதே சமயம் அழுக்கான தோற்றத்தில் வருபவர் இளமைக் கால கன்னியாகுமரியாக தாடி தனுஷை லவ்வுவதற்க்காகவே அடிமுறைக் கலையை கற்றவராகவும், ஆசான் நாசரின் அபிமானத்தை பெற ஆக்ரோஷமாக சண்டை போட ஆயத்தமாவதிலும், முழுமையான நடிப்பை அளித்து தனித் தடம் பதிக்கிறார்.
நாயகி மெஹரீன் பிரஷாதா, நம்மூருக்கு ஒட்டாத முகம், பேருக்கு ஹீரோயினாக வந்து போகிறார் மெஹ்ரீன் பிரஷாடா. அவர் செய்யும் 70 கே-யை வைத்து செய்யும் அது, இது எதுவும் ஒட்டவே இல்லை – பட்டாஸில் நமுத்து போன த்ரிகளில் ஒன்றென்றால் அது இவர்தான். வில்லன் நவீன் சந்திரா-வும் ஜஸ்ட் பாஸ் மார்க்-தான் .
இசை விவேக் – மெர்வின் இசையில் ‘சில் ப்ரோ’ முன்னரே ரிங் டோனாகி சரவொலி கிளப்பிக் கொண்டிருக்கிறது. அது போல் ‘அடிமுறை’-க்கென சிவ தாண்டவ ஸ்லோகத்துடன் கூடிய பின்னணி இசை டபுள் ஓ கே. ஓம் ப்ரகாஷின் கேமரா மூலம் இரண்டு வித வண்ணங்களை இணைத்து கொடுத்து அட்டகாசம் செய்திருக்கிறார்.
மொத்தத்தில் ஆரம்ப பேராவில் சொன்னது போல் நம் தமிழரின் பாரம்பரிய கலைகளான சிலம்பம் மட்டுமல்லாது, சுருள்வாள் வீச்சி, அடிவரிசை, குத்துவரிசை போன்றவைகளில் அடிமுறை என்றொரு கலையும் உண்டு என்பதை சொல்ல ஒரு பக்கா கமர்ஷியல் படமொன்று கொடுத்து சகலரையும் கவர்ந்து விட்டது இந்த பட்டாஸ் டீம்.
மார்க் 3.25 / 5