தமிழ் சினிமாவை அவமதிக்கவே செய்கிறோம்! – படச்சுருள் அருண்!
அருண் சார், படச்சுருள் கடைசி பக்கம் எப்போது ஃபில் ஆகும், அந்த பக்கத்தில் ஒரு தமிழ்ப்பட விமர்சனம் வெளியாக வேண்டுமென்றால் அந்த படம் எப்படி இருக்க வேண்டும். நானும் ஒரு சில தமிழ்ப்படங்கள் வெளியாகும்போது இந்த படம் படச்சுருள் கடைசிப்பக்கத்தில் வெளியாகும் என்று நினைத்தேன். ஆனால் இன்றுவரை அந்த பக்கம் காலியாகவே இருக்கிறது. இது தமிழ் சினிமாவை அவமதிக்கும் செயலாகவே எனக்கு தெரிகிறது. – சிவா

அன்பின் சிவா, படச்சுருள் கடைசி பக்கத்தை நிரப்பப்போகும் அந்த தமிழ்ப்படத்திற்காக நானும் காத்திருக்கிறேன். படச்சுருள் கடைசிப்பக்கத்தில் ஒரு தமிழ்ப்படம் வெளியாக இரண்டு அளவுகோல் இருக்கிறது, ஒன்று வடிவம், இன்னொன்று உள்ளடக்கம். இந்த இரண்டில் நூறு சதவீதம் கூட தேவையில்லை, இரண்டிலும் எழுபது சதவீதம் பூர்த்தி செய்தால் கூட அந்த படம் கடைசிப்பக்கத்தில் வெளியாகும். தமிழ் சினிமா பார்வையாளர்கள், படச்சுருள் வாசகர்கள் அப்படி ஏதாவது ஒரு தமிழ் சினிமா, வடிவம் உள்ளடக்கம் இரண்டிலும் எழுபது சதவீதம் திருப்தியாக இருக்கிறது என்று எழுதி நிறுவினால் அந்த படத்தை கடைசிப்பக்கத்தில் வெளியிட நானும் தயார். ஆனால் நிறுவ வேண்டும். ஒரே வார்த்தையில் எழுபது சதவீதமும் படம் இரண்டிலும் திருப்தியாக இருக்கிறது என்று சொல்லக்கூடாது.
ஆனால் அப்படி எழுதி நிறுவ முதலில் சினிமா நமக்கு தெரிந்திருக்க வேண்டும். இங்கே சமூக வலைத்தளங்கள், வார இதழ்கள், தினசரி, தொலைகாட்சி உள்ளிட்ட மற்ற ஊடகங்களில் சினிமாவை விமர்சிக்கும் நபர்களுக்கு சினிமா ஒரு சாதாரண பார்வை ஊடகமாகவே தெரிகிறது. பார்க்கிறோம் விமர்சிக்கிறோம் என்கிற ரீதியில் இருக்கிறார்கள். அதிலும் இன்னும் சிலர் கொஞ்சம் அறிவுஜீவியாக காட்டிக்கொள்ள காட்சி ஊடகம், உண்மை,நேர்மை, அருமை என்று எதையாவது எழுதி தங்களை நிறுவிக்கொள்கிறார்கள். அதாவது தங்களது மேட்டிமைத்தனத்தை காட்டிக்கொள்கிறார்கள். உண்மையில் அவர்கள் சினிமாவை கொஞ்சமும் புரிந்துக்கொண்டதாக தெரியவில்லை. எது நல்ல சினிமா என்பதற்கு அவரவர் ஒரு தனி அளவுகோல் வைத்திருக்கிறார்கள்.
எமோஷனல் படமாக இருந்தால், கொஞ்சம் சமூக கருத்தை பேசினால், சமூகத்தில் நிலவும் பிரச்சனைகளை கிண்டலடித்தால், பிரச்சார படமாக இருந்தால்… இப்படி இன்னும் பல இருந்தால் அதெல்லாம் நல்ல சினிமாவாக மாறிவிடுகிறது. அவரவர் அளவுகோல் அவரவருக்கு சரி. ஆனால் அதையே பொதுவெளியில் எழுதி நிறுவ நினைப்பது அசட்டுத்தனம். இப்படி பேதைத்தனமாக எழுதி எழுதியே இன்று தமிழில் தனி விமர்சனக் கோட்பாட்டை உருவாக்கி இருக்கிறார்கள். இங்கே அப்பாவும் நல்லப்படம், சாட்டையும் நல்லப்படம், மெட்றாசும், கபாலியும், கத்தியும் நல்லப்படம். இதே தரவரிசையில் காக்கா முட்டையும் நல்லப்படம். ஆரண்ய காண்டம் நல்லப்படம் என்று எழுதுகிற அதே கை, குற்றம் கடிதல் நல்லப்படம் என்று எழுதுகிறது. காக்கா முட்டை நல்லப்படம் என்று எழுதும் அதே கை, பசங்கவும் நல்லப்படம் என்று எழுதுகிறது.
புதிதாக படிப்பவர்கள் உண்மையில் வெறித்து போவார்கள். இங்கே நல்லப்படம் என்பதே எழுதி நிறுவுதல் என்கிற நிலைக்கு சென்றுவிட்டது. ஒருவரின் எழுத்து சிறப்பாக இருந்தால், அவர் எதையாவது எழுதி ஒரு படத்தை நல்லப்படம், சிறந்தப்படம் என்று எழுதி நிறுவிவிடுவார். தமிழில் நல்ல சினிமா மட்டுமல்ல, நல்ல சினிமா குறித்த கட்டுரைகளும், நல்ல சினிமாவை அடையாளம் காட்டுவதும் கூட ஒருவகையில் கானல் நீராகவே இருக்கிறது. ஓரே கலரில் சட்டைப்போட்டு ஒருத்தர் விமர்சனம் செய்றார், அவர் சட்டைக்காகவே பிரபலம் ஆகிறார். இணையத்திலும், மற்ற ஊடகங்களிலும், பத்திரிகைகளிலும் வெளியான விமர்சனங்களை தொகுத்து ஒருமுறை படித்துப்பாருங்கள், விமர்சனம் என்றால் என்ன என்றே நீங்கள் மறந்துபோவீர்கள்.
ஆங்கிலத்தில் தி ஹிந்துவும், தமிழில் தமிழ் ஹிந்துவும் மாற்று விமர்சனக்கோட்பாடு என்கிற முறையில் சினிமா விமர்சனத்தை இன்னமும் கீழிறக்கியுள்ளது. பரத்வாஜ் ரெங்கன் இன்று இந்தியாவின் மிக முக்கியமான விமர்சகர். தமிழ் ஹிந்துவில் சினிமா குறித்து எழுதுபவர்கள், கேபிள் சங்கர், தனஞ்செயன், இன்னும் இத்தியாதி இத்தியாதி. சினிமா எங்கே உருப்படும். சினிமா குறித்த எழுத்து எங்கே வளப்படும். கோடிட்ட இடங்களை நிரப்புக என்பதுபோல், பத்திரிகையை நிரப்புக என்கிற ரீதியில் இன்று எல்லா பத்திரிகைகளிலும் சினிமா பத்திகள் வெளியாகிறது.. விகடன், குமுதம், குங்குமம் என்று யாரும் விதிவிலக்கல்ல. கேமரா அருமை, கோணங்கள் பளிச்சிடுகிறது என்று விகடனும் இவர்களுக்கு சளைக்காமல் விமர்சனம் எழுதவே செய்கிறது.
இப்படி ஒன்றுக்கும் உதவாத உதவாக்கரை விமர்சனங்கள், சினிமா கட்டுரைகளை எழுதி இடத்தை பூர்த்தி செய்யும் பத்திரிகைகளும் சரி, எழுதுபவர்களும் சரி உண்மையில் நல்ல சினிமா என்பதை ஒருபோதும் புரிந்துக்கொள்ள வாய்ப்பில்லை. காரணம் சினிமா அவர்களுக்கு விற்பனையாகின்ற எழுத்து, அதை எப்படியோ நிரப்பினால் போதும்.
ஆக, எப்படியான அளவுகோல்களை வைத்து ஒரு வாசகன் ஒரு தமிழ்ப்படத்தை உருப்படியான படம் என்று நிறுவ முடியும். நீங்கள் முயற்சித்து எழுதி படச்சுருளுக்கு எழுதி அனுப்புங்கள். ஆனால் நிறுவ வேண்டும். இறுதியாக படச்சுருள் கடைசிப் பக்கத்தில் நாங்களாகவே ஒரு படத்தை வெளியிடுகிறோம் என்றால் மேற்சொன்ன இரண்டையும் நாங்களே நிறுவவோம், ஒரு விவாதத்தையும் முன்னெடுப்போம். அப்போது யாரெல்லாம் எது நல்ல சினிமா என்று கேள்வி எழுப்புகிறீர்களோ அவசியம் வாருங்கள், உரையாடுவோம். அதுவரை அந்த இடம் நிரப்பப்படாது. எங்களுக்கு அது வணிகம் அல்ல, வாழ்க்கை.
படச்சுருள் கடைசிப்பக்கம் காலியாக இருப்பது தமிழ் சினிமாவை அவமதிப்பது போல் இருக்கிறது என்கிறீர்கள், மாற்றுக்கருத்தே இல்லை, தமிழ் சினிமாவை அவமதிக்கவே செய்கிறோம். உருப்படியான படம் எடுக்க தெரியாத வியாபாரிகளை கொண்டது தமிழ் சினிமா என்பதை எதிர்கால சந்ததி தெரிந்துக்கொள்ளட்டும். உங்களால் முடிந்தால், வடிவம் உள்ளடக்கம் இரண்டிலும் எழுபது சதவீதம் பூர்த்தி செய்யும் ஒரு படத்தை கண்டுபிடித்து எழுதி நிறுவி அனுப்புங்கள். பார்ப்போம்


