ஆர்எஸ்எஸ் ஆலமரமல்ல.. -ஒரு புல்லுருவி!
“அழியாத கலாச்சாரத்தின் ஆலமரம் ஆர்எஸ்எஸ்” என்று மோடி புகழ்ந்து இருக்கிறார். மேலும் “ஆர்.எஸ்.எஸ் நிறுவப்பட்டபோது, 1925 முதல் 1947 வரையிலான காலம் போராட்டங்களால் நிறைந்திருந்தது. ஆர்.எஸ்.எஸ்ஸின் பல ஆண்டு முயற்சிகளும் கடின உழைப்பும் வளர்ந்த இந்தியாவின் புதிய அத்தியாயத்தை எழுதுகின்றன,” என்று மோடி கூறினார். 1947 வரை விடுதலைக் கோரி நாட்டு மக்கள் போராடிக் கொண்டுதான் இருந்தார்கள். ஆனால் அப்போது ஆர்எஸ்எஸ் என்ன செய்தது? பிரிட்டிஷ்காரனுக்கு அடிவருடி, போராட்டத்தை காட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தது! இதற்காக அவர்கள் வெட்கப்பட வேண்டாமா? வெள்ளையர்கள் அல்ல, நமது எதிரி முஸ்லீம்கள் தான் என்று இந்து முஸ்லீம் கலவரங்களை அவர்கள் உருவாக்கிக் கொண்டிருந்தார்கள்.
நாஜிப் படையை எதிர்த்து, செஞ்சேனை உயிர்த்தியாகம் செய்து போராடிக் கொண்டிருந்தபோது, ஹிட்லரைப் புகழ்ந்து போற்றினார் ஆர்எஸ்எஸ் தலைவர் எம்.எஸ்.கோல்வால்கர். அவனது ஆரிய இனவெறி, இந்தியாவுக்கான சிறந்த முன்மாதிரி என்றார்.நாடு விடுதலை அடைந்து ஆறு மாதத்துக்குள்ளாகவே, தேசத்தந்தை மகாத்மா காந்தியை ஆர்எஸ்எஸ் சுட்டு வீழ்த்தியது. இந்துத்துவ வெறியனான கோட்சே எமது உறுப்பினர் இல்லை என்று சொன்ன ஆர்எஸ்எஸ், ஆட்சிக்கு வந்ததும் அவனை தியாகி என்று புகழ்வது அதன் பொய் வேடத்தை அம்பலப்படுத்துகிறது.
வாரிசுரிமை, திருமணத் தேர்வு, சொத்துரிமை ஆகியவற்றில் பெண்களுக்கும் பங்கு உண்டு என இந்து சட்ட மசோதாவை டாக்டர் அம்பேத்கர் வைத்த போது, நாடு முழுமையும் கலகம் செய்தது ஆர்எஸ்எஸ். 1952 பொதுத் தேர்தலை சந்திக்க வேண்டிய நேரு, அந்தச் சட்டத்தை முழுமையாக நிறைவேற்ற தயங்கியதால், அம்பேத்கர் அமைச்சரவையில் இருந்து வெளியேறினார். ‘அவரது உழைக்கும் திறமைக்கும் தலை வணங்குகிறேன்’ என்று மட்டுமே நேருவால் சொல்ல முடிந்தது.
இன்று வரைக்கும் இந்தியச் சமூக முன்னேற்றத்தை கலகங்கள் செய்து பின்னிழுத்துக் கொண்டே இருப்பது ஆர்எஸ்எஸ்.கோவிலை இடித்துத்தான் பாபர் மசூதி கட்டப்பட்டது என்று கூறி தொடர்ச்சியான யாத்திரைகள், கலகங்களால் நாட்டை நிலை குலைய வைத்தனர். பாபர் மசூதியை திட்டமிட்டு இடித்ததற்குப் பின்னர், அங்கு கோவில் இருந்ததற்கான தடயமே இல்லை என்று உறுதிப்பட்டது. “மசூதியை இடித்தது மாபெரும் தவறு. நான் அதைத் தடுக்க முனைந்தேன்” என பேட்டியளித்தார் அத்வானி. ஆனால் ராமர் கோவில் கட்டித் திறக்கப்பட்ட ஆடம்பரம், ஆர்எஸ்எஸ்ஸின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்தியது.

அயோத்தியை தொடர்ந்து ஞானவாபி, மதுரா, துவாரகா, நம் திருப்பரங்குன்றத்திலும் கூட இஸ்லாமிய வழிபாட்டுத் தலங்களை அகற்ற வேண்டும், இடிக்க வேண்டும் என்று வீதிகளிலும் நீதிமன்றங்களிலும் தொடர்ந்து கலவரங்கள். குஜராத்தில், 2002ல் ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி நடத்தப்பட்ட கொடூரமான கோத்ரா கலவரம், முசாபர்நகர் கலவரம் என சமூகப் பதட்டத்தை அதிகரித்துக் கொண்டே இருப்பது நாட்டை முன்னேற்றவா?
மதமாற்றத் தடைச் சட்டம், ‘லவ் ஜிகாத்’, மாட்டுக்கறி வைத்திருந்தார் என்ற பெயர்களில் கும்பல் கூடி அடித்துக் கொலைகள், ஏதேனும் சப்பைக் காரணம் சொல்லி சட்ட விரோதமாக முஸ்லிம்களின் வீடுகளை புல்டோசர் கொண்டு இடிப்பது, குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு என்ற பெயரில் இஸ்லாமியர்களை நாடற்றவர்களாக்குவது, ஹிட்லரின் சித்திரவதை முகாம்களைப் போல அவர்களுக்கு தடுப்பு காவல் முகாம்களை அமைத்து வாழ்நாள் சித்திரவதைக்கு உள்ளாக்குவது, இந்து பண்டிகைகளின் போது மசூதிகள் மறைக்கப்பட வேண்டும் முஸ்லிம்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்று கட்டளை இடுவது, இஸ்லாமிய பண்டிகைகளின்போது மசூதிக்கு வெளியில் இருந்து தொழுகை நடத்தக் கூடாது பாஸ்போர்ட் டிரைவிங் லைசன்ஸ் பறிமுதலென அச்சுறுத்துவது…. என இவர்களது வன்கொடுமைகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.
ஒரு பக்கம் வெறுப்பு பேச்சுக்களை உமிழ்ந்து பதட்டத்தை உருவாக்கி கவனத்தை திசை திருப்பிவிட்டு, மறுபுறம் அமலாக்கத்துறை, வருமான வரி துறையை ஏவி விட்டு லட்சக்கணக்கான கோடி ரூபாய்களை கொள்ளையடிப்பது, சமஸ்கிருத, பார்ப்பனிய, இந்தி ஆதிக்கத்தைத் திணிப்பது, ஏற்க மறுக்கும் மாநிலங்களை பட்டினி போட்டுப் பணிய வைக்க முயல்வது, தொழிலாளர் உரிமைகளைப் பறித்து சட்டங்கள் நிறைவேற்றுவது, விவசாயத்தை கார்ப்பரேட்மயமாக்க விவசாயிகளை வீதியில் நிறுத்துவது என அதன் சதிகள் தொடர்கின்றன.ஆர் எஸ் எஸ் ஆலமரமல்ல. தன்னை வளர்த்துக் கொள்ள, தான் படர்ந்த மரத்தின் சத்தை உறிஞ்சிச் சாகடிக்கும் புல்லுருவி!


