ஊபெர் ஃபார் டீன்ஸ்: பதின்பருவ பயணம் இனி பாதுகாப்பு மற்றும் வசதியுடன்”
ஊபெர் இந்தியா நிறுவனம், பெற்றோர்களுக்கு தங்கள் பதின்பருவ பிள்ளைகளின் (13 முதல் 17 வயது வரையிலானவர்கள்) போக்குவரத்து தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் ஒரு புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது. இதற்காக ‘உபெர் ஃபார் டீன்ஸ்’ என்ற சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சேவை இந்தியாவின் முக்கிய நகரங்களான சென்னை, தில்லி, மும்பை, ஐதராபாத், கொல்கத்தா உள்ளிட்ட 37 நகரங்களில் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்காக ஒரு சிறப்பு கணக்கை உருவாக்கி, அவர்கள் சார்பாக சவாரிகளை முன்பதிவு செய்ய முடியும். மேலும், பயணத்தின் போது நிகழ்நேரத்தில் அதைக் கண்காணிக்கவும், சவாரி முடிந்த பிறகு விரிவான விவரங்களைப் பெறவும் வழி செய்யப்பட்டுள்ளது.

இந்த சேவையில் பல பாதுகாப்பு அம்சங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. உதாரணமாக, ஜிபிஎஸ் மூலம் பயணத்தை துல்லியமாக கண்காணிக்கும் வசதி மற்றும் அவசர காலங்களில் உதவி பெறுவதற்காக ஒரு நெருக்கடி பட்டன் ஆகியவை இடம்பெற்றுள்ளன. இதற்கு முன்னர், 2023 ஆம் ஆண்டு அமெரிக்காவில் இந்த சேவை அறிமுகப்படுத்தப்பட்டு வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக இப்போது இந்தியாவிலும் இது பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
ஊபெர் இந்தியா மற்றும் தெற்காசியாவின் தலைவர் பிரபஜீத் சிங் இதுகுறித்து பேசுகையில், “இந்தியாவில் பதின்பருவத்தினரும் அவர்களது பெற்றோரும் போக்குவரத்து விஷயத்தில் பல சவால்களை எதிர்கொள்கின்றனர் என்பதை நாங்கள் அறிவோம். பள்ளி, பயிற்சி வகுப்புகள், நண்பர்களை சந்திப்பது போன்ற தினசரி தேவைகளுக்கு பாதுகாப்பான மற்றும் நம்பகமான போக்குவரத்து அவசியம். ‘ஊபெர் ஃபார் டீன்ஸ்’ சேவை மூலம், பெற்றோர்களுக்கு மனநிம்மதியையும், பிள்ளைகளுக்கு வசதியையும் உறுதி செய்யும் ஒரு தீர்வை வழங்க நாங்கள் முயல்கிறோம்,” என்று கூறினார்.
நிறுவனம் நடத்திய ஒரு நுகர்வோர் ஆய்வு இந்த சேவையின் அவசியத்தை மேலும் வலியுறுத்துகிறது. அதில், 92 சதவீத பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு நம்பகமான போக்குவரத்து வசதி இல்லாததால், அவர்கள் விரும்பிய நிகழ்ச்சிகள், பொழுதுபோக்கு அல்லது முக்கியமான சந்திப்புகளுக்கு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளனர். இது பெற்றோர்களுக்கு கவலையை ஏற்படுத்துவதோடு, பிள்ளைகளின் சுதந்திரத்தையும் பாதிக்கிறது. இதற்கு தீர்வாகவே இந்த சேவை அறிமுகமாகியுள்ளது.

இந்தியாவில் ஓலா, ரேபிடோ போன்ற உள்ளூர் போட்டியாளர்களின் ஆதிக்கம் அதிகரித்து வரும் சூழலில், ஊபெர் தனது சந்தையை விரிவுபடுத்தவும், பயனர்களுக்கு புதிய வசதிகளை அளிக்கவும் இத்தகைய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கு முன்னதாக, பெண்களுக்கு பாதுகாப்பான மற்றும் எளிதான பயண வசதியை வழங்கும் நோக்கில், பெங்களூரு நகரில் 300 பெண் ஓட்டுநர்களைக் கொண்ட ‘பெண்கள் மட்டும்’ பைக் சேவையை தொடங்கியது. இது பெண் பயணிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
‘ஊபெர் ஃபார் டீன்ஸ்’ சேவையானது, பெற்றோர்களுக்கு தங்கள் பிள்ளைகளின் பயணங்களை முழுமையாக கட்டுப்படுத்தும் அதிகாரத்தை அளிப்பதோடு, பதின்பருவத்தினருக்கு சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் பயணிக்கும் வாய்ப்பை உருவாக்குகிறது. இது இந்தியாவில் ஊபெர் நிறுவனத்தின் சேவை வரிசையில் ஒரு முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.
தனுஜா ரெங்கராஜன்


