நடுநிலை நாடகம்: ஊடக விவாதங்களில் முகமூடி ஆசாமிகள்
காட்சி ஊடகங்களை நினைத்து பரிதாபப் படுவதா அல்லது அதைக் காணும் பார்வையாளர்களை நினைத்துப் பரிதாபப் படுவதா என்றே தெரியவில்லை. ஆம். அவற்றில் ஒளிபரப்பாகும் விவாத நிகழ்ச்சிகளைக் காணும்போதெல்லாம் எனக்கு இப்படித்தான் தோன்றுகிறது. இதற்காக ஊடகக்காரர்கள் என்மேல் கோபம் கொண்டாலும் என்னால் இதைச் சொல்லாமல் இருக்க முடியவில்லை.
அரசியல் விவாதங்கள் என்றால் பல்வேறு அரசியல் கட்சிகளைச் சார்ந்தவர்களும் கலந்து கொள்வதுதான் நியாயம். திமுகவை ஆதரித்துப் பேச வரும் அனைவரும் தாங்கள் எந்த அரசியல் கட்சியைச் சார்ந்தவர்கள் என்பதை வெளிப்படையாகச் சொல்லிக் கொண்டு வந்துதான் கலந்து கொள்கிறார்கள்; பேசுகிறார்கள். அவர்கள் வருவதே திமுகவை ஆதரித்துப் பேசுவதற்காகத்தான் என்பதால், அவர்களின் ஆதரவுப் பேச்சில் நமக்கு உடன்பாடு இல்லாவிட்டாலும் அல்லது அது படு அபத்தமாக இருந்தாலுங்கூட நம்மை முகம் சுளிக்க வைப்பதில்லை.
ஆனால்…
‘அரசியல் விமர்சகர்’, ‘எழுத்தாளர்’ என்கிற போர்வைகளை இறுக்கமாகப் போர்த்திக் கொண்டு வந்து பேசும் நபர்களின் பேச்சைக் கேட்கும்போதுதான் நமக்கு முகச்சுளிப்பு ஏற்படுகிறது. காரணம், அவர்கள் போர்த்திக் கொண்டிருக்கும் போர்வைக்கும் பேச்சுக்கும் சம்பந்தம் இருப்பதேயில்லை. இது ஜனநாயக நாடு. ஒருவர் எந்த அரசியல் கட்சியில் சேர்ந்து பணியாற்றுவதற்கும் ஆதரிப்பதற்கும் எல்லா உரிமைகளும் உண்டு.
அப்படியிருந்தும் அவர்கள் ‘அரசியல் விமர்சகர்’, ‘எழுத்தாளர்’ என்ற நடுநிலையான போர்வைகளுக்குள் ஒளிந்து கொண்டு பாஜகவையும் அதிமுகவையும் ஆதரிக்க வேண்டிய அவசியமென்ன? சொல்லப் போனால், அவர்கள் திமுகவை ‘கிழிகிழி’யென்று கிழிக்க ஆரம்பிக்கும்போதே, அவர்கள் போர்த்திக் கொண்டிருக்கும் ‘அரசியல் விமர்சகர்’ ‘எழுத்தாளர்’ என்னும் போர்வைகள் கிழிந்து தொங்கி விடுகின்றன. இது என் போன்ற அறிவிலிகளுக்கே பளிச்சென்று தெரியும்போது, அறிவுஜீவிகளான அவர்களுக்கு மட்டும் எப்படித் தெரியாமல் போகும்?
எனவேதான், தவிர்க்க முடியாமல் நமக்கொரு கேள்வி எழுகிறது. அந்த அறிவுஜீவி ‘அரசியல் விமர்சகர்’, ’எழுத்தாளர்’களுக்கு தாங்கள் இன்ன கட்சியைச் சேர்ந்தவர்களென்றோ அல்லது ஆதரவாளர்கள் என்றோ சொல்லிக் கொள்வதில் என்ன கூச்சம் அல்லது தயக்கம்? இப்படி தயக்கமும் கூச்சமும் கொண்டவர்கள், எதற்காக அந்தக் கட்சிகளை ஆதரித்து ஊடகங்களில் பேச வரவேண்டும்? இதுதான் நமது கேள்வி.
சாதாரணர்களின் இது போன்ற கேள்விகள், பெரும் செல்வாக்குப் பெற்று உயர்ந்து நிற்கும் அவர்களின் காதுகளை எட்டுவது கடினம்தான். என்றாலும் எப்போதும்போல, நாம் ஊதுகிற சங்கை ஊதி வைக்கிறோம். அவ்வளவே!


