கோலாபுரி சப்பலுக்கு இனி கியூஆர் கோடு: ஒரு வரலாற்று சிறப்புமிக்க செருப்பின் டிஜிட்டல் பயணம்!

கோலாபுரி சப்பலுக்கு இனி கியூஆர் கோடு: ஒரு வரலாற்று சிறப்புமிக்க செருப்பின் டிஜிட்டல் பயணம்!

காராஷ்டிராவின் பாரம்பரியத்தையும், கைவினைத்திறனையும் பறைசாற்றும் கோலாபுரி செருப்புகளின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த, ஒரு புதிய அத்தியாயம் தொடங்குகிறது. இனி இந்தச் செருப்புகளில் கியூஆர் குறியீடுகள் (QR codes) அச்சிடப்பட உள்ளன.

கோலாபுரி செருப்புகளின் தொன்மை வரலாறு

12 ஆம் நூற்றாண்டில் மன்னர் பிஜ்ஜலாவும் அவரது பிரதம மந்திரி பசவண்ணாவும் உள்ளூர் கயிறு உற்பத்தியாளர்களை ஆதரிப்பதற்காக கோலாபுரி செருப்பு உற்பத்தியைத் தொடங்கி வைத்ததாகக் கூறப்படுகிறது. வரலாற்றுப் பதிவுகளின்படி, 13 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில்தான் இந்தச் செருப்புகள் முதன்முதலில் அணியப்பட்டன.

முன்னர் இவை கபாஷி, பைதான், கச்சடி, பக்கல்னாலி, புக்ரி என அவை தயாரிக்கப்பட்ட கிராமங்களின் பெயர்களால் அழைக்கப்பட்டன. இந்தக் கையால் செய்யப்பட்ட தோல் செருப்புகள் 12 ஆம் நூற்றாண்டில் மகாராஷ்டிராவின் கோலாப்பூர், சாங்லி, சோலாப்பூர் ஆகிய இடங்களில் தைக்கப்பட்டன. சத்ரபதி சிவாஜி காலத்தில் இவை நாட்டின் பெருமையாகவும் கருதப்பட்டன. கோலாப்பூரில் முதன்முதலில் தயாரிக்கப்பட்டதால், அந்த ஊரின் பெயரே இந்தச் செருப்புக்கும் நிலைபெற்றது.

புவிசார் குறியீடும் (GI) புவிப் பரவலும்

பல நூற்றாண்டுகளாக, கர்நாடகாவைச் சேர்ந்த கைவினைஞர்களும் கோலாபுரி சப்பல்களைத் தயாரித்து வருகின்றனர். தற்போது மகாராஷ்டிராவின் எல்லையோரப் பகுதிகளான கர்நாடகாவின் தார்வாட், பெல்காம், பாகல்கோட், விஜயபுரா ஆகிய இடங்களிலும் கோலாபுரி செருப்புகள் தயாரிக்கப்படுகின்றன.

2019 ஆம் ஆண்டில், மகாராஷ்டிரா மற்றும் கர்நாடக அரசுகள் இணைந்து கோலாபுரி செருப்புகளுக்குப் புவிசார் குறியீட்டை (Geographical Indication – GI tag) பெற்றன. இதன் மூலம், மகாராஷ்டிராவின் கோலாப்பூர், சாங்லி, சதாரா, சோலாப்பூர் மாவட்டங்கள் மற்றும் கர்நாடகாவின் பாகல்கோட், பெல்காவி, தார்வாட், பிஜாப்பூர் மாவட்டம் போன்ற பகுதிகளில் தயாராகும் செருப்புகள் மட்டுமே “கோலாபுரி சப்பல்” என்ற பெயரைப் பயன்படுத்த முடியும் என்பது உறுதியானது.

வடிவமைப்புச் சர்ச்சை மற்றும் கியூஆர் குறியீட்டின் அவசியம்

கோலாபுரி செருப்புகள் பழங்காலத்திலிருந்தே பிரபலமானவை என்றாலும், சமீபத்தில் உலக அளவில் காலணிகள் தயாரிப்பதில் பிரசித்தி பெற்ற இத்தாலிய நிறுவனமான பிராடா (Prada) அவற்றின் வடிவமைப்பை நகலெடுத்துச் செருப்புகளைத் தயாரித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது வாடிக்கையாளர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி, பல்வேறு விவாதங்களைத் தூண்டியது. இதன் விளைவாக, பிராடா நிறுவனம் மன்னிப்பு கேட்டதுடன் உற்பத்தியையும் நிறுத்திக் கொண்டது.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, கோலாபுரி செருப்புகளின் உரிமையையும், நம்பகத்தன்மையையும் உறுதிப்படுத்தவே செருப்புகளில் கியூஆர் குறியீடுகள் பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

கியூஆர் குறியீடு வழங்கும் தகவல்கள்

மகாராஷ்டிரா தோல் தொழில்கள் மேம்பாட்டுக் கழகம் (லிட்காம் – LITCOM) அதிகாரிகள் இது குறித்துத் தெரிவிக்கையில், “செருப்புகள் ஒரு கைவினைப் பொருள் என்பதால், தயாரிப்பாளர்களை அடையாளம் காணவும், போலிச் செருப்புகள் பரவுவதைத் தடுக்கவும், நுகர்வோர் மத்தியில் நம்பிக்கையை வளர்க்கவும் செருப்புகள் குறித்த தகவல்கள் அடங்கிய கியூஆர் குறியீடுகள் இனி ஒவ்வொரு செருப்பிலும் அச்சிடப்படும்” என்று கூறியுள்ளனர்.

இந்தக் கியூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம், நுகர்வோர் உற்பத்தியாளரின் பெயர், தயாரிக்கும் இடம், பயன்படுத்தப்படும் மூலப்பொருள், தயாரிப்பு முறை, செருப்பின் ஆயுட்காலம் மற்றும் புவியியல் குறியீடு சான்றிதழ் பற்றிய துல்லியமான தகவல்களைப் பெற முடியும்.

ஒரு சாதாரண செருப்பாக மட்டும் இல்லாமல், அதன் வரலாறு, தயாரிப்பு முறை, கலாச்சார முக்கியத்துவம் எனப் பல பரிமாணங்களைத் தன்னகத்தே கொண்ட கோலாபுரி செருப்பு, இனி டிஜிட்டல் உலகிலும் தனது தனித்துவத்தை நிலைநிறுத்தும்!

தென்காசி தேவா