யு.பி.ஐ. பரிவர்த்தனைகளுக்குப் புதிய கட்டுப்பாடுகள்: தெரிந்துகொள்ள வேண்டியவை!

யு.பி.ஐ. பரிவர்த்தனைகளுக்குப் புதிய கட்டுப்பாடுகள்: தெரிந்துகொள்ள வேண்டியவை!

ன்றைய காலகட்டத்தில், ஒரு ரூபாய் கூட கையில் இல்லாமல் கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை சென்று திரும்பும் அளவுக்கு யு.பி.ஐ. பயன்பாடு விரிவடைந்துள்ளது. சிறு பெட்டிக் கடைகள் முதல் பெரிய வணிக வளாகங்கள் வரை எங்கும் க்யூ.ஆர் (QR) குறியீட்டை ஸ்கேன் செய்து எளிதாகப் பணம் செலுத்தும் வசதி பரவலாகிவிட்டது. இந்த எளிமையும் வசதியும்தான் யு.பி.ஐ.யின் மிகப்பெரிய வெற்றிக்கான காரணங்கள். யு.பி.ஐ. பரிவர்த்தனைகள் பாதுகாப்பானதாகவும், நம்பகமானதாகவும் கருதப்படுகின்றன. ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் தனிப்பட்ட PIN எண் தேவைப்படுவதும், வங்கிகளின் பாதுகாப்பு அம்சங்களுடன் ஒருங்கிணைந்திருப்பதும் இதற்கு முக்கியக் காரணங்கள். இந்நிலையில் UPI (ஒருங்கிணைந்த பணப் பரிமாற்ற இடைமுகம்) சேவைகளை மேம்படுத்தும் நோக்கில், இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) ஆகஸ்ட் 1, 2025 முதல் புதிய விதிகளை அமல்படுத்த உள்ளது. இந்த விதிகள் Google Pay, Paytm, PhonePe போன்ற அனைத்து UPI செயலிகளுக்கும் பொருந்தும்.

புதிய விதிமுறைகளின் முக்கிய அம்சங்கள் இங்கே:

1. கணக்கு இருப்பு சரிபார்ப்புகளுக்கு வரம்பு:

  • இனி ஒவ்வொரு UPI செயலியிலும் ஒரு நாளைக்கு அதிகபட்சம் 50 முறை மட்டுமே கணக்கு இருப்பைச் சரிபார்க்க முடியும்.
  • இந்த கட்டுப்பாடு தேவையற்ற API கோரிக்கைகளை (requests) குறைத்து, சிஸ்டத்தின் சுமையை குறைக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ளது.
  • நீங்கள் பல UPI செயலிகளைப் பயன்படுத்தினால், இந்த 50 முறை வரம்பு ஒவ்வொரு செயலிக்கும் தனித்தனியாகப் பொருந்தும்.

2. இணைக்கப்பட்ட வங்கிக் கணக்குகளைப் பார்ப்பதற்கான வரம்பு:

  • உங்கள் மொபைல் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்குகளின் பட்டியலை ஒரு நாளைக்கு 25 முறை மட்டுமே பார்க்க முடியும்.
  • இது தேவையற்ற பின்னணி செயல்பாடுகளைக் குறைத்து, UPI சேவையின் ஒட்டுமொத்த செயல்திறனை மேம்படுத்தும்.

3. தானியங்கு பணம் செலுத்துதல்களுக்கான (AutoPay) குறிப்பிட்ட நேரம்:

  • Netflix, Spotify போன்ற OTT சந்தாக்கள், SIP முதலீடுகள், EMI-கள், மின்சாரக் கட்டணங்கள் போன்ற தானியங்கு பணம் செலுத்துதல்கள் (AutoPay) இனி குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே செயல்படுத்தப்படும்.
  • இந்தத் தானியங்கு பணம் செலுத்துதல்கள் இனி நெரிசல் இல்லாத நேரங்களில் (Non-peak hours) மட்டுமே நடக்கும்:
    • காலை 10:00 மணிக்கு முன்
    • மதியம் 1:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை
    • இரவு 9:30 மணிக்கு பிறகு
  • இது உச்ச நேரங்களில் ஏற்படும் சர்வர் நெரிசலைக் குறைத்து, பரிவர்த்தனைகள் சீராக நடைபெறுவதை உறுதிப்படுத்தும்.

4. பரிவர்த்தனை நிலை சரிபார்ப்புகளுக்கு வரம்பு:

  • ஒரு பரிவர்த்தனை நிலுவையில் இருந்தால் (pending), அதன் நிலையை ஒரு நாளைக்கு மூன்று முறை மட்டுமே சரிபார்க்க முடியும்.
  • ஒவ்வொரு சரிபார்ப்பிற்கும் இடையில் குறைந்தது 90 வினாடிகள் இடைவெளி இருக்க வேண்டும்.
  • இது சர்வர் சுமையைக் குறைத்து, பரிவர்த்தனை தோல்விகள் அல்லது மீண்டும் முயற்சிப்பதன் வெற்றி விகிதத்தை அதிகரிக்கும்.

5. பயனாளியின் பெயர் காட்சியளிப்பு:

  • பணத்தை உறுதிப்படுத்தும் முன், பெறுநரின் பதிவு செய்யப்பட்ட வங்கிக் கணக்கின் பெயர் காண்பிக்கப்படும். இது பிழைகள் மற்றும் மோசடிகளைக் குறைக்கும்.

இந்த மாற்றங்கள் ஏன் கொண்டுவரப்படுகின்றன?

UPI பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், சிஸ்டம் மீது அதிக சுமை ஏற்படுகிறது. சமீபத்தில், ஏப்ரல் மற்றும் மே 2025 மாதங்களில் பரிவர்த்தனை தாமதங்கள் மற்றும் தோல்விகள் குறித்த புகார்கள் அதிகரித்தன. அடிக்கடி நிகழும் இருப்பு சரிபார்ப்புகள், நிலை புதுப்பித்தல்கள் மற்றும் பிற தேவையற்ற API கோரிக்கைகள் சிஸ்டத்தை மந்தமாக்குவதாகவும், செயலிழக்கச் செய்வதாகவும் NPCI கண்டறிந்துள்ளது. இந்த புதிய விதிகள், UPI அமைப்பை மேலும் வலுவானதாகவும், வேகமானதாகவும், நம்பகமானதாகவும் மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.

சாதாரண தினசரி சிறிய பரிவர்த்தனைகளுக்கு இந்த விதிகள் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது. ஆனால், அடிக்கடி கணக்கு இருப்பைச் சரிபார்க்கும் அல்லது பரிவர்த்தனை நிலையை மீண்டும் மீண்டும் புதுப்பிக்கும் பயனர்களுக்கு இது ஒரு குறிப்பிடத்தக்க மாற்றமாக இருக்கும். இந்த மாற்றங்கள் மூலம் UPI சேவையின் ஒட்டுமொத்த அனுபவம் மேம்படும் என NPCI நம்பிக்கை தெரிவித்துள்ளது.

தச்சை குமார்

Related Posts

error: Content is protected !!