திருநெல்வேலி இருட்டு லாலா கடை அதிபர் ஹரிசிங் தற்கொலை!

திருநெல்வேலி இருட்டு லாலா கடை அதிபர் ஹரிசிங் தற்கொலை!

திருநெல்வேலி டிஸ்டிரிக்கில் புகழ்பெற்ற இருட்டுக்கடை அல்வா உரிமையாளர் ஹரிசிங். இவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனையிலேயே தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. அதாவது நேற்று கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், பாளையங்கோட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் ஹரிசிங். இந்த நிலையில் மன உளைச்சல் காரணமாக அவர் இன்று தற்கொலை செய்து கொண்டதாகத் தெரிய வந்துள்ளது.

இருட்டுக் கடையில் அல்வா என்பது மாலை நேரத்தில் மட்டும் அதாவது மாலை ஆறு மணிக்குத் துவங்கி இரவு பத்து மணி வரை விற்பனை செய்யப்படுகிறது. 85 ஆண்டுகளுக்கு முன்பு ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த கிருஷ்ணசிங் மற்றும் அவரது மகன் பிஜீலிசிங் ஆகியோரால் துவங்கப்பட்ட இந்த அல்வாக் கடையில் மாலை நேரத்தில் அரிக்கேன் விளக்கு வெளிச்சத்தில் அல்வா வியாபாரம் செய்யப்பட்டு வந்திருக்கிறது. இதனால் இந்த அல்வாக் கடையை திருநெல்வேலி மக்கள் இருட்டுக் கடை என்று அழைத்தனர். கடையைத் துவங்கிய இருவரது மரணத்திற்குப் பிறகு ஹரிசிங் என்பவர் இந்தக் கடையை நடத்தி வந்தார். இப்போதும் இந்த இருட்டுக் கடையில் தங்களது பழைய நிலையிலேயே அதே மனோபாவத்தில் (செண்டிமெண்ட்) அதாவது வெறும் 40 வாட்ஸ் மின் விளக்கு வெளிச்சத்திலேயே கடையில் எவ்விதமான ஆடம்பரமும் செய்யாமல் அல்வா வியாபாரம் நடப்பதால் இந்தக் கடைக்கு இருட்டுக் கடை என்கிற பெயரே நிலையான பெயராகி விட்டது

இங்கு அல்வாவை 100 கிராம், 200 கிராம் என்கிற அளவுகளில் சுடச்சுட இலையில் வைத்து விற்பனை செய்வார்கள். இவ்வூர் மக்கள் இதை விரும்பி வாங்கிச் சாப்பிடுகிறார்கள். கிலோக் கணக்கிலும் வீடுகளுக்கு வாங்கிச் செல்வார்கள். திருநெல்வேலியிலும் இதைச் சுற்றிலுமுள்ள ஊர்களில் இருப்பவர்கள், வெளியூர்களில் இருக்கும் தங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளுக்குச் செல்லும் போது இந்த இருட்டுக் கடையில்தான் அல்வாவை வாங்கிச் செல்வது வாடிக்கை.

முன்னொரு முறை ஹரிசிங்-கிடம் பேசிய போது, “எந்தவிதமான எந்திரமும் இல்லாமல் கல் உரலில் ÷ பாட்டுத்தான் கோதுமையை அரைக்கிறோம். சுத்தமான சம்பா கோதுமை, நெய், சர்க்கரை, தாமிரபரணி தண்ணீர். இவை நான்கும் ரொம்ப முக்கியம். முந்திரிப்பருப்பு, அது… இது… என எக்ஸ்ட்ராவாக எந்தப் பொருளையும் சேர்ப்பதில்லை. நிறம் வேண்டும் என்பதற்காக கலர் பவுடர் எதையும் போடுவதில்லை. சம்பா கோதுமையை முதல் நாளே தண்ணீரில் ஊற வைக்கணும். மறுநாள் உரல்ல போட்டு நல்லா அரைக்கணும். அரைக்க அரைக்க கோதுமை பாலாக மாறி வரும்.

இந்தப் பாலை வடிகட்டி எடுத்து பெரிய இரும்புச்சடியில் ஊற்றி நன்கு கொதிக்க கொதிக்க கிளறணும். அந்தப் பால் இலேசாகச் சூடானதும் சர்க்கரை போட்டுக் கிண்டனும். கிளறுவதை விட்டுவிடக்கூடாது. பாலும் சர்க்கரையும் இறுகிக் கெட்டியான பதத்துக்கு வரும்போது நெய்விட்டுக் கிறளணும். அல்வா குங்கும நிறத்தில் உருவாக ஒரு இறுகலான பதத்துக்கு வந்ததும், இறக்கி ஒரு பெரிய தட்டில் ஊற்றி ஆற வைத்து ஆறியபின் எடுத்துச் சாப்பிட்டால், அதாங்க இருட்டுக் கடை அல்வா!” என்றார்

இந்த இருட்டுக் கடை அல்வா பெயரில் போலி கடைகள் நடத்தவும் , இந்தப் பெயரை வேறு யாரும் பயன்படுத்தவும் கோர்ட் தடை விதித்துள்ளது. இந்நிலையில் , இன்று இந்த இருட்டுக் கடை உரிமையாளர் ஹரிசிங் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவருக்கு கொரோனா பாதிக்கப்பட்டதாகவும் , இதனால் மனமுடைந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

error: Content is protected !!