பெட்ரோல் சலுகை விலை ; ஒரு லிட்டர் ஒன்றரை ரூபாய் – இது வெனிசுலா ரிப்போர்ட்

பெட்ரோல் சலுகை விலை ; ஒரு லிட்டர் ஒன்றரை ரூபாய் – இது வெனிசுலா ரிப்போர்ட்

உலகத்திலேயே கச்சா எண்ணெய் வளம் எக்கச்சக்கமாக உள்ள நாடு அப்படீங்கற பெருமைக்கு உரியது வெனிசுலா. கடந்த மாத இறுதியில் அங்கு பெட்ரோல் விலை கடுமையாக உயர்த்தப் பட்டது. அதாவது ஏறக்குறைய 25 மடங்கு அளவுக்கு பெட்ரோல் விலையை உயர்த்தியது அந்நாட்டு அரசு. அப்படியென்றால் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை இந்திய மதிப்பில் பல ஆயிரம் ரூபாய் இருக்குமே என நீங்கள் நினைத்தால் அது தவறு. அதாவது இவ்வளவு கடுமையான விலை உயர்வுக்கு பின்னும் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 37 ரூபாய் 50 காசுகள்தான். இதற்கே ஆச்சர்யப்பட்டால் அதற்கு முன்பு வரை ஒன்றரை ரூபாய்க்கு ஒரு லிட்டர் பெட்ரோல் விற்கப்பட்டது என்றால் நம்ப முடிகிறதா?

ஆம் உண்மைதான். கடந்த மாத இறுதி வரை ஒரு லிட்டர் பெட்ரோல் இந்திய மதிப்பில் வெறும் ஒன்றரை ரூபாய்க்குதான் வழங்கப்பட்டது. விலை உயர்வுக்கு பின்னும் கூட கார்களுக்கு மாதம் தோறும் 120 லிட்டர் பெட்ரோல் சலுகை விலையான ஒரு லிட்டர் ஒன்றரை ரூபாய் விலைக்கே தரப்படுகிறது. இருசக்கர வாகனம் வைத்திருப்பவர்கள் இதே விலையில் மாதம் 60 லிட்டர் பெட்ரோல் நிரப்பிக் கொள்ளலாம். அதற்கு மேல் தேவை என்றால் ஒரு லிட்டருக்கு 37 ரூபாய் 50 காசு கொடுக்க வேண்டும்.

அப்படி இருந்துமே விலை உயர்வுக்கு வெனிசுலா மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார் கள். ஏனெனில் இதுநாள் வரை பெட்ரோலை ஒரு செலவு தரும் அம்சமாக அவர்கள் பார்த்ததே இல்லை என்பதுதான் முக்கியக் காரணம். உலகிலேயே கச்சா எண்ணெயை அளவுக்கு அதிகமாக வைத்திருக்கும் வெனிசுலா, இப்போது பெட்ரோலுக்காக பிற நாடுகளிடம் கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதுதான் இந்த விலை உயர்வுக்கு காரணம்.

பெட்ரோல், டீசல் உற்பத்தியில் ஈடுபடும் அரசு நிறுவனத்தில் நிர்வாகக் குறைபாடும், ஊழலும் இந்த நிலைக்கு முக்கியக் காரணமாக கூறப்படுகிறது. அதோடு, நாட்டில் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு மையங்களில் வெறும் 20 விழுக்காடு மட்டுமே செயல்படும் நிலையில் இருப்பதால் பெட்ரோல், டீசல் உற்பத்தி கடுமையாக குறைந்துவிட்டது.

ஏற்றுமதி மூலம் கிடைக்கும் வருவாயில் 90 விழுக்காடு பெட்ரோல், டீசல் மூலமே கிடைத்து வந்த நிலையில், உற்பத்தி குறைவால் வெனிசுலா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு மத்தியில் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளதால் கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது என்பது தனி ரிப்போர்ட்.

error: Content is protected !!