டெல்லியில் ரூ.1,100 கோடிக்கு விற்பனையான நேருவின் அதிக்காரப்பூர்வ இல்லம்!
டெல்லியில் உள்ள இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் முதல் அதிகாரப்பூர்வ இல்லம், சமீபத்தில் ஒரு தனிப்பட்ட ஒப்பந்தத்தில் ரூ.1,100 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டது. இது இந்தியாவின் ரியல் எஸ்டேட் துறையில் இதுவரை இல்லாத மிகப் பெரிய விற்பனை என்று கூறப்படுகிறது.
ஒரு வருட பேச்சுவார்த்தைக்குப் பிறகு நடந்த விற்பனை
டெல்லியின் மிக முக்கியமான பகுதியான லுட்யென்ஸ் பங்களா மண்டலத்தில் 3.7 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த இல்லம், முதலில் ரூ.1,400 கோடிக்கு விற்பனைக்கு வந்தது. ஒரு வருடத்திற்கும் மேலாக நடந்த பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, இறுதியாக இந்த இல்லம் ரூ.1,100 கோடிக்கு ஒரு பிரபல தனியார் நிறுவனத்திற்கு விற்கப்பட்டது. இந்த விற்பனை குறித்து பொதுவெளியில் எந்த அறிவிப்பும் செய்யப்படவில்லை.

விற்பனைக்கு முன் வழங்கப்பட்ட நோட்டீஸ்
விற்பனை நிறைவடைவதற்கு முன், இந்தச் சொத்தின் மீது வேறு யாரும் உரிமை கோர முடியுமா என்பதை உறுதிப்படுத்த, பொது அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டது. இந்தச் சொத்துக்குச் சொந்தமான ராஜஸ்தான் அரச குடும்பத்தைச் சேர்ந்த ராஜ்குமாரி கக்கர் பினா ராணியின் குடும்பம், கடந்த வாரம் அதிகாரப்பூர்வமாக அந்த சொத்தை விற்றுள்ளது. சொத்து வாங்குபவர், ஏதேனும் ஆட்சேபனைகள் இருந்தால், ஆதாரங்களுடன் ஏழு நாட்களுக்குள் தெரிவிக்க வேண்டும் என்று கோரி ஒரு நோட்டீஸையும் வெளியிட்டுள்ளனர். குறிப்பிட்ட காலத்திற்குள் எந்த ஆட்சேபனையும் வராததால், விற்பனை வெற்றிகரமாக முடிந்தது.
ரியல் எஸ்டேட் துறையில் ஒரு புதிய மைல்கல்
இந்த விற்பனை, இந்தியாவின் ஆடம்பர ரியல் எஸ்டேட் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக கருதப்படுகிறது. 2012-ஆம் ஆண்டில் மும்பையில், பிரபல தொழிலதிபர் குமார் மங்களம் பிர்லா வாங்கிய வீட்டின் விற்பனைதான், இதற்கு முந்தைய சாதனையாக இருந்தது. அதைவிட இந்த விற்பனை பல மடங்கு அதிகம். நேருவின் பங்களா, ராஜஸ்தான் அரச குடும்பத்தைச் சேர்ந்த ராஜ்குமாரி கக்கர் பினா ராணியின் வசம் இருந்தது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த இல்லத்தின் விற்பனை, நாட்டின் ரியல் எஸ்டேட் சந்தையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
நிலவளம் ரெங்கராஜன்


