பிரதமர் மோடி தன் தாயை அவமதித்ததார்கள் கூறுவது சரியா?

பிரதமர் மோடி தன் தாயை அவமதித்ததார்கள் கூறுவது சரியா?

நாட்டிலுள்ள பெண்களின் நலனுக்காக நான் அயராது பாடுபட்டு வருகிறேன். தாய்நாட்டுக்குச் சேவை செய்யும்படி என்னை ஈன்ற தாயார் சொன்னார். அதைத்தான் நான் செய்து கொண்டிருக்கிறேன். ஒரு தாய் கடவுளைவிட மேலானவர். தாய்மார்கள், சகோதரிகள்மீது அவதூறு பரப்புபவர்கள், பெண்களை பலவீனமாகக் கருதுகிறார்கள். அவர்களின் மனநிலை பெண்களைச் சுரண்டுகிறது. ஒடுக்குமுறைக்கு உள்ளாக்குகிறது. பெண்களுக்கு எதிரான மனநிலை கொண்டவர்கள் ஆட்சிக்கு வரும்போதெல்லாம் தாய்மார்கள், மகள்கள், சகோதரிகள் அனைவரும் பெரும் துன்பங்களைச் சந்திக்க வேண்டியிருக்கிறது. அது, ஆர்ஜேடியின் மாஃபியா ஆட்சிக் காலத்தில் நடந்தது.

ஆர்ஜேடி ஆட்சியில் பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்தன. பெண்கள் துன்பங்களைச் சந்தித்தனர். அதனால் தான் அவர்கள் ஆட்சியை வெளியேற்றினர். இதற்காக அவர்கள் தற்போது பெண்களைப் பழிவாங்க விரும்புகின்றனர். பின்தங்கிய சமூகத்தைச் சேர்ந்த யாரும் அதிகாரம் மிக்க பதவிக்கு வருவதை காங்கிரஸால் ஒருபோதும் பொறுத்துக் கொள்ள முடிவதில்லை, அதனால்தான் அவர்கள் என்னைப் பற்றி பேசக்கூடாத வார்த்தைகளால் பேசுகிறார்கள். நான் அவர்களை மன்னிக்கலாம். ஆனால், என் தாயை அவமதித்ததற்காக அவர்களை ஒருபோதும் பீகார் மக்கள் மன்னிக்க மாட்டார்கள். வரும் நாள்களில் இந்தக் கட்சிகளின் தலைவர்களைத் தண்டிப்பார்கள்.

பீகார் மாநிலம் அன்னை ஜானகி பிறந்த பூமி. அது எப்போதும் பெண்களுக்கு மரியாதை அளித்தே வருகிறது. இது சாத் பூஜை கொண்டாடப்படும் நிலம். இங்கு ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி), காங்கிரஸ் மேடையில் என் தாயார் அவமதிக்கப்பட்டுள்ளார். இப்படி நடக்கும் என்று ஒருபோதும் நான் நினைத்துப் பார்த்ததில்லை. இது எனது தாய்க்கு மட்டுமல்ல, பீகாரின் ஒட்டு மொத்த தாய்மார்கள், மகள்களுக்கு நேர்ந்த அவமானம். எனது வலியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்…’இப்படியெல்லாம் மோடிஜி உருக்கமாகப் பேசியது, பீகார் மக்களின் மத்தியில் மேடை போட்டு அல்ல. அம்மாநிலத்திலுள்ள சுய உதவிக் குழு பெண்களுக்கான புதிய கூட்டுறவுச் சங்கத்தை, டெல்லியில் இருந்தபடி காணொளியில் திறந்து வைத்துப் பேசியதுதான் மேற்கண்ட பேச்சு. மோடிஜியின் தாயார் பற்றி அவர்கள் என்ன பேசினார்கள் என்று நமக்குத் தெரியவில்லை. என்றாலும் மறைந்து விட்ட ஒருவர் பற்றி, வாழ்ந்தபோதும் அரசியல் பக்கம் தலை வைத்தும் படுத்திராத அந்தத் தாய் பற்றி அவதூறு பேசியிருந்தால், பேசிய அவர்களை, மோடிஜி சொன்னதுபோல் அந்த மக்களே பார்த்துக் கொள்வார்கள்.

ஆனால், 2002-ல் தாம் குஜராத் முதல்வராக இருந்தபோது நடந்த கோத்ரா ரெயில் எரிப்புச் சம்பவமும் அதன் தொடர்ச்சியாக, பில்கிஸ் பானுவின் மூன்றுவயதுக் குழந்தை உள்பட 14 பேர் படுகொலை செய்யப்பட்டதும் கூட்டாகப் பாலியல் வன்புணர்வுக்கு ஆளானதும் யாருக்குமே தெரியாதா? அந்த மூன்று வயதுப் பெண்குழந்தையைத் துணி துவைப்பதுபோல் கல்லின்மீது அடித்துக் கொன்ற போது, மோடிஜியின் இதயம் வலிக்கவேயில்லையா? அண்மையில் நடந்த மல்யுத்த வீராங்கனைகளுக்கான பாலியல் தொல்லைகளெல்லாம் பிரதமருக்குத் தெரியவே தெரியாதோ? பெண்களின் மீதான இப்போதைய கரிசனம் அப்போதெல்லாம் எங்கே போனது? மல்லாக்கப் படுத்துக் கொண்டு எச்சில் துப்பலாமா? இப்படியெல்லாம் கேள்வி கேட்டுத் தேசவிரோதியாகாமல், இன்றைய விஷயத்திற்கே வந்துவிடுவோம்.

வெளிநாட்டுப் பயணங்களில்தான் நம்மவர் உற்சாகம் காட்டுவார், உள்நாட்டுப் பயணங்களில் அத்தனை உற்சாகம் காட்ட மாட்டார் என்று சொல்லும் தேசவிரோதிகளுக்குச் சரியான பாடம் புகட்ட வேண்டாமா? அதற்காகவே, வரும் 13-ம் தேதி மிசோராம் மாநிலம் செல்கிறார். அங்கே பைரபி-சாய்ரங் இடையிலான 51 கி.மீ. தூரமுள்ள ரெயில் பாதையைத் திறந்து வைக்கிறார். மிசோராம் மாநிலத்திலிருந்து ஒரு எம்பு எம்பினாலே மணிப்பூர் மாநிலத்தில் குதித்துவிடலாம். மிசோராமை ஒட்டியபடிதான் மணிப்பூர் இருக்கிறது. அங்கு, இரண்டாண்டுகளுக்கு முன்பு என்ன நடந்தது? இரக்கமற்ற அரக்கர்களால், அங்கே பெண்களின் நிர்வாண ஊர்வலம் நடத்தப் பட்டதைக் காணச் சகிக்காமல் உலகமே வெட்கத்தால் தலைகுனிந்தது.

பெண்களின் மேல் இத்தனை மரியாதையும் பக்தியும் வைத்துள்ள பிரதமர், அப்போது அங்கே போனாரா? அந்த மக்களை நேரில் பார்த்து ஆறுதலாவது கூறினாரா? பிரச்னை என்றாலே, நம்மவர் பரப்ரம்ம நிலைக்குச் சென்று விடுவார். திறப்பு விழா என்றால்தான் இயல்பு நிலைக்குத் திரும்புவார் என்று எதிர்க்கட்சியினர் சொல்வதில் என்ன பிழை? சரி, இப்போது மிசோராம் செல்லும் பிரதமர், அதை ஒட்டியே இருக்கும் மணிப்பூருக்கும் செல்வாரா? ‘டிரம்ப்பையே திணறடித்துக் கொண்டிருக்கிறார் மோடிஜிஎன்றுதேசபக்தர்’களால் கொண்டாடப்படும் நம்மவர், எப்போது தமது சொந்த தேசத்திலுள்ள மணிப்பூர் மக்களை நேரில் சந்தித்து, மகிழ்ச்சிக் கடலில் திணறடிக்கப் போகிறார்? அந்த சுபமுகூர்த்த சுபதினத்தைப் பிரம்மதேவனாவது நமக்குக் கணித்துச் சொல்வாரா? சொல்லத்தான் முடியுமா?

செ.இளங்கோவன்

Related Posts