நாவிகாக்களும்.. நைந்துபோகும் ஊடக அறமும்!
ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று சொல்லிக்கொள்ளும் ஊடக உலகம், இன்று அதிகார வர்க்கத்தின் காலடியில் விழுந்து கிடப்பது வேதனைக்குரியது மட்டுமல்ல, ஆபத்தானதும்கூட. ஆட்சியாளர்களையும், அதிகார மையங்களையும் நோக்கி கேள்விக்கணை தொடுக்க வேண்டிய ஊடக ஆசிரியர்கள், இன்று அரசியல் தலைவர்களின் வீட்டு வாசலில் தவம் கிடப்பது ஆரோக்கியமான போக்கல்ல. டைம்ஸ் நவ் குழுமத்தின் முதன்மை ஆசிரியர் நாவிகா குமார், தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியைச் சந்தித்து, ‘தேர்தல் குறித்து ஆலோசித்ததாகப்’ பெருமையுடன் பதிவிட்டுள்ளது ஊடக அறத்திற்கே விடப்பட்ட சவால்.
செல்ஃபி கலாச்சாரமும்.. சிதைக்கப்படும் ரிப்போர்ட்டர்களின் சிரமும்!
ஏற்கனவே, தமிழக அரசியலில் ‘காளான்’ போல முளைத்திருக்கும் சோசப் விஜய் வீட்டுக்கு ஓடிச் சென்று, செய்திகளைச் சேகரிப்பதை விட்டுவிட்டு, அவருடன் ‘செல்ஃபி’ எடுத்து மகிழ்ந்த இந்திய மஹா ஜர்னலிஸ்டுகளை நாம் பார்த்தோம். அந்தத் தரங்கெட்ட செயலின் தொடர்ச்சியாகவே நாவிகா குமாரின் இந்தச் சந்திப்பையும் பார்க்க வேண்டியிருக்கிறது. வெயிலிலும் மழையிலும் களத்திற்குப் போய் (Field work), அதிகார வர்க்கத்தை எதிர்த்து நின்று கெத்து காட்டும் உண்மையான ரிப்போர்ட்டர்களின் சிரம், இத்தகைய சொகுசு அறை ‘செல்ஃபி’ ஜர்னலிஸ்டுகளால் சிதைக்கப்பட்டு வருகிறது. செய்தி சேகரிப்பதை விட, அரசியல் தலைவர்களுடன் நெருக்கத்தைக் காட்டுவதே தங்களின் பிழைப்பு என இவர்கள் கருதுவது சாபக்கேடு.

செய்தி சேகரிப்பா? தேர்தல் வியூகமா?
ஒரு பத்திரிகையாளர் அரசியல் தலைவரைச் சந்திப்பது செய்திகளுக்காக இருக்கலாம். ஆனால், ‘ஆலோசனை நடத்தினேன்’ (Detailed discussion) என்று ஒரு தேசிய ஊடகத்தின் முதன்மை ஆசிரியர் சொல்வது ஊடக எல்லையைத் தாண்டிய அத்துமீறல். தேர்தல் களம் சூடுபிடித்துள்ள வேளையில், ஒரு குறிப்பிட்ட கட்சியின் தலைவரைச் சந்தித்துவிட்டு, அதைக் ‘கட்டுமானபூர்வமான பரிமாற்றம்’ என்று நாவிகா குமார் ஜல்லி அடிப்பது எதைக் காட்டுகிறது? ஊடகங்கள் இன்று நடுநிலைத் திரையாக இல்லை; அவை அரசியல் கட்சிகளின் ‘பி-டீம்’ ஆகவும், பிரச்சாரக் கருவிகளாகவும் மாறிவிட்டனவோ என்ற பலமான ஐயத்தை இது ஏற்படுத்துகிறது.
‘கோடி மீடியா’ கலாச்சாரமும், ஊடக வீழ்ச்சியும்!
வட இந்திய ஊடகங்கள் ஏற்கனவே ‘கோடி மீடியா’ (Godi Media) என்ற அவப்பெயரைச் சுமந்து வரும் நிலையில், அதே பாணியை இங்கும் இறக்குமதி செய்வது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. சினிமாவில் பெரிய பட்ஜெட் படங்களுக்குப் பூஜை போடும்போதே முன்னணி நாளிதழ்கள் மற்றும் சேனல்களுடன் ‘பேக்கேஜ்’ போட்டுக்கொள்ளும் தரம் தாழ்ந்த கலாச்சாரம் ஏற்கனவே ஊடக உலகின் நம்பகத்தன்மையைக் குழிதோண்டிப் புதைத்துவிட்டது.

இச்சூழலில், சாமானிய மக்களின் வலிகளைப் பேச வேண்டிய ஊடக முதலாளிகளும், ஆசிரியர்களும் அரசியல் சதுரங்கத்தின் காய்களாக மாறும்போது, செய்திகளின் புனிதத்தன்மை காணாமல் போகிறது. இது காலங்காலமாக செய்திகளுக்காகத் தங்கள் ரத்தத்தையும், வியர்வையையும் சிந்திப் பணியாற்றிய மூத்த பத்திரிகையாளர்களின் உழைப்பைக் கேலி செய்யும் இழிவான செயலாகும்.
தவறான முன்னுதாரணம்
ஊடக ஆசிரியர்கள் தங்களை அரசியல் கட்சிகளின் ஆலோசகர்களாகப் பாவித்துக்கொள்ளத் தொடங்கினால், மக்களுக்கும் அதிகாரத்திற்கும் இடையிலான அந்த நேர்மைப் பாலம் தவிடுபொடியாகிவிடும். ஒரு தலைவரைப் பேட்டி எடுப்பதற்கும், அவருடன் அமர்ந்து தேர்தல் ‘டிஸ்கஷன்’ செய்வதற்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் உண்டு. அதை மறந்த நாவிகா குமார் போன்றவர்களின் ‘ஆலோசனை’ அரசியல், வளர்ந்து வரும் இளம் பத்திரிகையாளர்களுக்கு நஞ்சூட்டும் முன்னுதாரணமாக அமைந்துவிடும்.
ஆந்தை ரிப்போர்ட்டரின் எச்சரிக்கை!
பத்திரிகையாளர்கள் என்பவர்கள் எக்காலத்திலும் மக்கள் பக்கம் மட்டுமே நிற்க வேண்டியவர்கள். அதிகாரத்தின் மடியில் அமர்ந்து கொண்டு அவர்கள் ஆலோசனைகள் வழங்கத் தொடங்கினால், ஜனநாயகம் அங்கே சவக்குழிக்குத் தள்ளப்படும் என்பதுதான் கசப்பான உண்மை.
திருந்துங்கள்.. இல்லையெனில் காலத்தால் திருத்தப்படுவீர்கள்!
நிலவளம் ரெங்கராஜன்


