திரையங்குகளில் தேசியகீதம் கட்டாயமில்லை! – சுப்ரீம் கோர்ட்

திரையங்குகளில் தேசியகீதம் கட்டாயமில்லை! – சுப்ரீம் கோர்ட்

திரையரங்கில் தேசிய கீதம் கட்டாயம் இசைக்கப்பட வேண்டும் என்ற உத்தரவை தற்போதைக்கு வாபஸ் பெற வேண்டும் என்ற மத்திய அரசின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. பழைய உத்தரவை வாபஸ் பெற்றுள்ளது. இதன் காரணமாக, மறு உத்தரவு வரும்வரை திரையரங்குகளில் தேசிய கீதம் இசைக்கப்படுவது கட்டாயமில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.

முன்னதாக 2016 நவம்பர் 3-ம் தேதி நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, திரையரங்குகளில் தேசிய கீதம் இசைக்கப்படுவது கட்டாயம் என்று உத்தரவிட்டது. இதனை எதிர்த்து கேரள திரைப்பட சங்கம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, கான்வில்கர், சந்திரசூட் ஆகியோ விசாரித்தனர். அப்போது பழைய உத்தரவில் திருத்தம் செய்யலாம் என்று நீதிபதி சந்திரசூட் கருத்து தெரிவித்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் நேற்று (திங்கள்கிழமை) பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், திரையரங்குகளில் தேசிய கீதம் இசைக்கப்படுவது தொடர்பான விதிகளை வரையறுக்க அனைத்து அமைச்சரவைகளை சேர்ந்த உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு 6 மாதங்களில் தனது அறிக்கையை சமர்ப்பிக்கும். அதுவரை திரையரங்குகளில் தேசிய கீதம் கட்டாயம் என்ற உத்தரவை வாபஸ் பெற வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா முன்பு இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்றம், “திரையரங்குகளில் திரைப்படத்தை திரையிடும் முன்னர் தேசிய கீதம் இசைப்பது கட்டாயம் இல்லை. பழைய உத்தரவை இந்த நீதிமன்றம் திருத்துகிறது. மத்திய அரசின் கோரிக்கையை நீதிமன்றம் ஏற்றுக்கொள்கிறது. தேசிய கீதம் இசைப்பது தொடர்பான விதிகளை வரையறுக்க மத்திய அரசு அமைத்துள்ள அனைத்து அமைச்சரவைகளை சேர்ந்த உயர்நிலைக் குழு இறுதி முடிவை எடுக்கும்” எனத் தெரிவித்தது.

error: Content is protected !!