தினகரன் வெற்றி பெற்றது செல்லாது என்று அறிவிக்க முடியாது! – ஐகோர்ட்
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், குக்கர் சின்னத்தில் சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார் சசிகலாவின் உறவினரான தினகரன். நேற்று (ஜனவரி 8) தொடங்கிய சட்டமன்ற கூட்டத்தொடரில், அவர் சுயேச்சை உறுப்பினராகப் பங்கேற்றார். இந்த நிலையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தினகரன் பெற்ற வெற்றியை செல்லாது என்று அறிவிக்கக் கோரி, சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ராமமூர்த்தி உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.
அதில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்து தினகரன் வெற்றி பெற்றார் என்றும், ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தல் அறிவிப்புக்குப் பிறகு நிறைய குக்கர்கள் விநியோகிக்கப்பட்டது என்றும், தேர்தல் ஆணையமே 30 லட்ச ரூபாயைக் கைப்பற்றியதாக அறிவித்தது என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது இதனால் தினகரன் சட்டசபைக்குள் நுழையக்கூடாது என்றும், அவர் எம்எல்ஏவாக பணியாற்றத் தடை விதிக்க வேண்டுமென்றும், நீதிமன்றத்தில் மனு செய்திருந்தார் ராமமூர்த்தி. இந்த மனு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்தல் முடிந்த பிறகு இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்தது.
மேலும், இதனைப் பொதுநல வழக்காக அல்லாமல் தேர்தல் வழக்காக மட்டுமே தொடர முடியும் என்றும், முறைகேடுகள் ஏதேனும் நடந்திருந்தால் அது குறித்து தேர்தல் ஆணையத்தில் புகார் செய்யலாம் என்றும் யோசனை கூறியது. இதையடுத்து, தினகரனின் தேர்தல் வெற்றி குறித்தான வழக்கு தள்ளுபடி செய்யப்படுவதாக உயர் நீதிமன்றம் அறிவித்தது.