சமையல் விமர்சனம், நிறக் கேலி செய்த கணவருக்கு 27 ஆண்டுக்குப் பின் விடுதலை – மும்பை ஐகோர்ட்!
மகாராஷ்டிரா மாநிலத்தில் 27 ஆண்டுகளாக நடைபெற்று வந்த வரதட்சணைக் கொடுமை வழக்கில், மும்பை ஐகோர்ட் கணவருக்கு விடுதலை அளித்து முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. மனைவியின் சமையலை கிண்டல் செய்வது அல்லது அவரது நிறத்தைக் குறிப்பிட்டு குறை கூறுவது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 498ஏ-ன் கீழ் கொடுமையாகாது என நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
கடந்த 1995 ஆம் ஆண்டில் திருமணமான ஒரு தம்பதிக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக, மனைவி தனது கணவர் வீட்டில் இருந்து பெற்றோர் வீட்டிற்குச் சென்றார். அதைத் தொடர்ந்து, 1997 ஆம் ஆண்டு, கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வரதட்சணைக் கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தனது புகாரில், கணவர் தொழில் தொடங்குவதற்காக ₹40,000 கேட்டதாகவும், தனது கருமையான நிறத்தைக் குறிப்பிட்டு கிண்டல் செய்ததாகவும், சமையல் சரியில்லை என்று தொடர்ந்து குறை கூறியதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த கீழ் நீதிமன்றம், 2004 ஆம் ஆண்டில் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினரை குற்றவாளிகள் எனத் தீர்ப்பளித்து, அவர்களுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து, கணவர் தரப்பில் அமர்வு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அங்கும் கீழ் நீதிமன்றத்தின் தீர்ப்பு உறுதி செய்யப்பட்டதால், இறுதியாக மும்பை ஐகோர்ட்டின் அவுரங்காபாத் கிளையில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
சுமார் 27 ஆண்டுகளாக நடைபெற்ற இந்த வழக்கில், தற்போது ஐகோர்ட் முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. நீதிபதி நிதின் சூர்யவன்ஷி தனது தீர்ப்பில், “மனுதாரர் தரப்பில் கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் பொதுவானதாகவும், தெளிவற்றதாகவும் இருக்கின்றன. எப்போது, எங்கே துன்புறுத்தல் நடந்தது என்பது குறித்த விவரங்கள் எதுவும் புகாரில் இல்லை” என்று குறிப்பிட்டார்.
மேலும், நீதிபதி கூறுகையில், “மனைவியின் சமையலை விமர்சிப்பதோ அல்லது அவரது நிறத்தைக் குறிப்பிட்டு கிண்டல் செய்வதோ, இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 498ஏ-ன் கீழ் வரும் கொடுமை என்ற வரையறைக்குள் வராது. பெண்ணைத் தற்கொலைக்குத் தூண்டும் அல்லது அவரது உயிருக்கோ, உடல் நலத்திற்கோ கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் நடத்தை மட்டுமே கொடுமையாகக் கருதப்படும். திருமண வாழ்வில் ஏற்படும் சாதாரண சண்டைகள் மற்றும் கருத்து வேறுபாடுகளை எல்லாம் கொடுமை என்று கூற முடியாது” எனத் தெளிவுபடுத்தினார்.
இதனையடுத்து, கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் ரத்து செய்து, 27 ஆண்டு கால சட்டப் போராட்டத்திற்குப் பிறகு அவர்களை வழக்கிலிருந்து முழுமையாக நீதிமன்றம் விடுவித்து உத்தரவிட்டது. இந்தத் தீர்ப்பு, குடும்ப உறவுகளில் எழும் சாதாராண கருத்து வேறுபாடுகளை குற்றச் சட்டத்தின் கீழ் கொண்டுவருவது குறித்து ஒரு தெளிவான வழிகாட்டுதலை வழங்கியுள்ளது.


