பிரதமர் மோடி தூத்துக்குடியில் நடத்திய முழு உரை விபரம் இதோ!
தூத்துக்குடி விமான நிலையம் ரூ.452 கோடி செலவில் சர்வதேச தரத்துக்கு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. பெரிய வகை விமானங்களும் தரையிறங்கும் வகையில் 3,115 மீட்டர் நீளம் கொண்ட விமான ஓடுதளம், இரவு நேரத்தில் விமானம் தரையிறங்குவதற்கான வசதிகள், ஒரே நேரத்தில் ஐந்து ஏ- 321 ரக விமானங்களை நிறுத்தி வைப்பதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும், சுமார் 17 ஆயிரத்து 340 சதுர மீட்டர் பரப்பில் அமைக்கப்பட்டுள்ள புதிய பயணிகள் முனையத்தில் 43 மீட்டர் உயர கன்ட்ரோல் டவர், தீயணைப்பு படைக்கான புதிய கட்டிடம், 3 ஏரோ பிரிட்ஜ், 5 விருந்தினர் அறைகள், ஒரு பெரிய உணவகம், சிற்றுண்டி கடைகள், மருந்தகம், ஸ்பா மையம், தாய்மார்கள் பாலூட்டும் அறை, செல்போன், லேப்டாப் சார்ஜ் செய்வதற்கான இடங்கள், இலவச வைபை வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. புதிய முனையத்தின் புறப்பாடு பகுதியில் 4 வாயில்களும், பயணிகள் வெளியே வருவதற்கான 4 வாயில்களும், 21 பயணிகள் செக்-இன் கவுன்ட்டர்களும் உள்ளன. ஒரு மணி நேரத்துக்கு 1,440 பயணிகளை கையாளும் வகையில் அதிநவீன வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. செட்டிநாடு கட்டிடக் கலையை பிரதிபலிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள, இந்த புதிய முனையம் 4 நட்சத்திர அந்தஸ்து பெற்ற பசுமை கட்டிடமாக உள்ளது. விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள தூத்துக்குடி விமான நிலையத்தின் திறப்பு விழா நேற்று சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

இவ்விழாவில் பிரதமர் மோடி வணக்கம்’ என தமிழில் சொல்லி நடத்திய முழு உரை விபரம் இதோ:
இன்று கார்கில் வெற்றி தினம். இந்த புனித நாளில், கார்கில் வீரர்களுக்கு எனது மரியாதையை செலுத்துகிறேன், மேலும் தியாகிகளுக்கு எனது அஞ்சலியை சமர்ப்பிக்கிறேன்.
நண்பர்களே,
நான்கு நாள் வெளிநாட்டுப் பயணத்திற்குப் பிறகு, நேரடியாக பகவான் ராமேஸ்வரரின் இந்த புனித பூமிக்கு வரும் வாய்ப்பு கிடைத்தது எனது பாக்கியம். எனது வெளிநாட்டுப் பயணத்தின் போது, இந்தியாவிற்கும் இங்கிலாந்திற்கும் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் (FTA) கையெழுத்தானது. இது இந்தியா மீது உலகின் அதிகரித்து வரும் நம்பிக்கையையும், இந்தியாவின் புதிய தன்னம்பிக்கையையும் காட்டுகிறது. இந்த தன்னம்பிக்கையுடன் நாம் வளர்ந்த பாரதம் மற்றும் வளர்ந்த தமிழ்நாடு உருவாக்குவோம். இன்றும் இங்கு பகவான் ராமேஸ்வரர் மற்றும் பகவான் திருச்செந்தூர் முருகன் அருளால் தூத்துக்குடியில் புதிய அத்தியாயம் எழுதப்படுகிறது. 2014-ல் தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் பணி தொடங்கியதில் இருந்து, தூத்துக்குடி தொடர்ந்து அதற்கு சாட்சியாக இருந்து வருகிறது.
நண்பர்களே,
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம், நான் இங்கு ‘வி.ஓ. சிதம்பரனார் துறைமுகத்திற்கான’ ‘வெளித் துறைமுக கொள்கலன் முனையத்திற்கு’ அடிக்கல் நாட்டினேன். அப்போது நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களும் தொடங்கி வைக்கப்பட்டன. செப்டம்பர் மாதம், புதிய தூத்துக்குடி சர்வதேச கொள்கலன் முனையத்தை நான் திறந்து வைத்தேன். இன்று மீண்டும், இங்கு நாலாயிரத்து எண்ணூறு கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டு, அடிக்கல் நாட்டப்பட்டுள்ளன. இதில் விமான நிலையம், நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் ரயில்வே திட்டங்கள், அத்துடன் மின்சாரத் துறையுடன் தொடர்புடைய முக்கியமான திட்டங்களும் அடங்கும். உங்கள் அனைவருக்கும், தமிழக மக்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நண்பர்களே,
கட்டமைப்பு மற்றும் எரிசக்தி ஆகியவை எந்தவொரு மாநிலத்தின் வளர்ச்சிக்கும் முதுகெலும்பாகும். இந்த 11 ஆண்டுகளில் கட்டமைப்பு மற்றும் எரிசக்தி மீது நாங்கள் கவனம் செலுத்தியது, தமிழகத்தின் வளர்ச்சிக்கு நாங்கள் எவ்வளவு பெரிய முன்னுரிமை அளிக்கிறோம் என்பதை காட்டுகிறது. இன்றைய அனைத்து திட்டங்களும் தூத்துக்குடி மற்றும் தமிழகத்தை இணைப்பு, தூய்மையான எரிசக்தி மற்றும் புதிய வாய்ப்புகளின் மையமாக மாற்றும்.
நண்பர்களே,
தமிழகம் மற்றும் தூத்துக்குடி மண், இங்குள்ள மக்கள் பல நூற்றாண்டுகளாக வளமான மற்றும் வலிமையான இந்தியாவிற்கு தங்கள் பங்களிப்பை வழங்கியுள்ளனர். இந்த மண்ணில்தான் வி.ஓ. சிதம்பரம் பிள்ளை போன்ற தொலைநோக்கு பார்வையாளர்கள் பிறந்தனர். அடிமைத்தனத்தின் காலத்திலும், கடல் வழியாக வர்த்தகத்தின் சக்தியை அவர் புரிந்துகொண்டார், கடலில் சுதேசி கப்பல்களை இயக்கி ஆங்கிலேயர்களுக்கு சவால் விடுத்தார். இந்த மண்ணில்தான், வீரபாண்டிய கட்டபொம்மன் மற்றும் அழகுமுத்து கோன் போன்ற மகாபுருஷர்கள் சுதந்திரமான மற்றும் வலிமையான இந்தியாவின் கனவை விதைத்தனர். சுப்பிரமணிய பாரதி போன்ற தேசியக் கவிஞரின் பிறப்பிடமும் இங்கு அருகில்தான். உங்கள் அனைவருக்கும் தெரியும், சுப்பிரமணிய பாரதி அவர்களுக்கு தூத்துக்குடியுடன் எவ்வளவு வலுவான உறவு இருந்ததோ, அதே அளவு வலுவான உறவு எனது நாடாளுமன்றத் தொகுதியான எனது காசியுடனும் உண்டு. காசி-தமிழ் சங்கமம் போன்ற நிகழ்வுகளின் மூலம் நமது கலாச்சார பாரம்பரியத்தை நாங்கள் தொடர்ந்து பலப்படுத்தி வருகிறோம்.
நண்பர்களே,
கடந்த ஆண்டு, தூத்துக்குடியின் புகழ்பெற்ற முத்துக்களை நான் பில் கேட்ஸுக்கு பரிசாக வழங்கியது எனக்கு நினைவிருக்கிறது. அந்த முத்துக்கள் அவருக்கு மிகவும் பிடித்திருந்தன. இங்குள்ள பாண்டிய முத்துக்கள், ஒரு காலத்தில் உலகின் பொருளாதார சக்தியின் அடையாளமாக இருந்தன.
நண்பர்களே,
இன்று நாம் இங்கு நமது முயற்சிகளின் மூலம் வளர்ந்த தமிழ்நாடு மற்றும் வளர்ந்த பாரதம் என்ற தொலைநோக்கு பார்வையை முன்னெடுத்துச் செல்கிறோம். பிரிட்டனுக்கும் இந்தியாவிற்கும் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்த FTA-வும் இதே தொலைநோக்கு பார்வைக்கு வேகம் அளிக்கிறது. இன்று இந்தியாவின் வளர்ச்சியில், உலகம் தனது வளர்ச்சியை காண்கிறது. இந்த ஒப்பந்தமும், இந்தியப் பொருளாதாரத்திற்கு புதிய பலத்தை அளிக்கும். இதன் மூலம், உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறுவதற்கான நமது வேகம் மேலும் அதிகரிக்கும்.
நண்பர்களே,
இந்த FTA ஒப்பந்தத்திற்குப் பிறகு, பிரிட்டனில் விற்கப்படும் 99% இந்திய தயாரிப்புகளுக்கு எந்த வரியும் இருக்காது. பிரிட்டனில் இந்தியப் பொருட்கள் மலிவாக இருக்கும்போது அங்கு தேவை அதிகரிக்கும், மேலும் இங்கு இந்தியாவில் அந்தப் பொருட்களை உற்பத்தி செய்ய அதிக வாய்ப்புகள் உருவாகும்.
நண்பர்களே,
இந்தியா-பிரிட்டன் FTA-வால், தமிழக இளைஞர்கள், நமது சிறு தொழில்கள், MSME-க்கள், ஸ்டார்ட்அப்கள் ஆகியவை அதிகப் பயனடையும். இதனால் தொழில், நமது மீனவர் சகோதர சகோதரிகள், அல்லது ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகள் என அனைவருக்கும் அதிக பலன் கிடைக்கும்.
நண்பர்களே,
இன்று இந்திய அரசு ‘மேக் இன் இந்தியா’ மற்றும் ‘மிஷன் மேனுஃபேக்சரிங்’ திட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. நீங்கள் அனைவரும் ‘ஆபரேஷன் சிந்துர்’ (Operation Sindoor) நடவடிக்கையின் போது ‘மேக் இன் இந்தியா’வின் வலிமையைப் பார்த்தீர்கள். பயங்கரவாதத் தளங்களை அழிப்பதில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களின் பங்கு பெரியது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் இன்றும் பயங்கரவாதத் தலைவர்களின் உறக்கத்தைக் கெடுக்கின்றன.

நண்பர்களே,
தமிழகத்தின் முழு திறனையும் பயன்படுத்த, இந்திய அரசு தமிழகத்தின் உள்கட்டமைப்பை நவீனப்படுத்த முயற்சிக்கிறது. தமிழகத்தில் நாங்கள் துறைமுக உள்கட்டமைப்பை அதிநவீனமாக்கி வருகிறோம். அத்துடன், விமான நிலையங்கள், நெடுஞ்சாலைகள் மற்றும் ரயில்வேயையும் ஒருங்கிணைத்து வருகிறோம். இன்று தூத்துக்குடி விமான நிலையத்தின் புதிய மேம்படுத்தப்பட்ட முனையம் திறக்கப்பட்டது இந்த திசையில் மற்றொரு பெரிய படியாகும். 450 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட இந்த முனையம் இனி ஒவ்வொரு ஆண்டும் 20 லட்சத்திற்கும் அதிகமான பயணிகளுக்கு சேவை செய்யும். முன்பு இதன் ஆண்டு திறன் வெறும் 3 லட்சம் பயணிகளாக இருந்தது.
நண்பர்களே,
புதிய முனையத்திற்குப் பிறகு நாட்டின் பல வழிகளுடன் தூத்துக்குடியின் இணைப்பு அதிகரிக்கும். தமிழகத்தில் கார்ப்பரேட் பயணம், கல்வி மையங்கள், சுகாதார உள்கட்டமைப்பு ஆகியவை இதனால் அதிகப் பயனடையும். அத்துடன், இந்த பகுதியின் சுற்றுலாத் திறனுக்கும் புதிய ஆற்றல் கிடைக்கும்.
நண்பர்களே,
இன்று தமிழகத்தின் இரண்டு முக்கிய சாலைத் திட்டங்களையும் மக்களுக்கு அர்ப்பணித்துள்ளோம். சுமார் 2500 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட இந்த சாலைகள், இரண்டு முக்கிய வளர்ச்சிப் பகுதிகளை சென்னைக்கு இணைக்கப் போகின்றன. இந்த சாலைகள் காரணமாக டெல்டா மாவட்டங்களிலிருந்து சென்னைக்கான இணைப்பு மேலும் மேம்பட்டுள்ளது.
நண்பர்களே,
இந்த திட்டங்களின் உதவியுடன் தூத்துக்குடி துறைமுகத்தின் இணைப்பும் மிகவும் மேம்பட்டுள்ளது. இந்த சாலைகள், இந்தப் பகுதி முழுவதும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும், அத்துடன் வர்த்தகம் மற்றும் வேலைவாய்ப்பிற்கான புதிய வழிகளையும் திறக்கும்.
நண்பர்களே,
நமது அரசு நாட்டின் ரயில்வேயை தொழில் வளர்ச்சி மற்றும் தற்சார்பு இந்தியாவின் உயிர்நாடியாக கருதுகிறது. அதனால்தான், கடந்த 11 ஆண்டுகளில் நாட்டின் ரயில்வே உள்கட்டமைப்பு நவீனமயமாக்கலின் புதிய சகாப்தத்தைக் கண்டுள்ளது. தமிழக ரயில்வே உள்கட்டமைப்பு நவீனமயமாக்கல் பிரச்சாரத்தின் ஒரு முக்கிய மையமாகும். நமது அரசு ‘அமிர்த பாரத் ஸ்டேஷன்’ திட்டத்தின் கீழ் தமிழகத்தின் 77 நிலையங்களை மறுவடிவமைப்பு செய்து வருகிறது. நவீன வந்தே பாரத் ரயில்கள் மூலம் தமிழக மக்கள் புதிய அனுபவத்தைப் பெற்று வருகின்றனர். நாட்டின் முதல் மற்றும் தனித்துவமான செங்குத்து லிஃப்ட் ரயில் பாலம், பம்பன் பாலம் தமிழகத்தில் கட்டப்பட்டுள்ளது. பம்பன் பாலத்தால் தொழில் செய்யும் எளிமை (Ease of Doing Business) மற்றும் பயண எளிமை (Ease of Travel) ஆகிய இரண்டும் அதிகரித்துள்ளது.
நண்பர்களே,
இன்று நாட்டில் மெகா மற்றும் நவீன உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான மாபெரும் இயக்கம் நடந்து கொண்டிருக்கிறது. சில நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட ஜம்மு-காஷ்மீரின் சினாப் பாலம், பொறியியல் அற்புதம். இந்த பாலம் முதன்முறையாக ரயில்வே மூலம் ஜம்முவை ஸ்ரீநகருடன் இணைத்துள்ளது. மேலும் நாட்டின் மிக நீளமான கடல் பாலம் அடல் சேது கட்டப்பட்டுள்ளது, அஸ்ஸாமில் போகீபீல் பாலம் கட்டப்பட்டுள்ளது, 6 கிலோமீட்டருக்கும் அதிகமான நீளமுள்ள சோன்மார்க் சுரங்கப்பாதை கட்டப்பட்டுள்ளது, இதுபோன்ற எத்தனையோ திட்டங்களை இந்திய அரசு, என்.டி.ஏ அரசு நிறைவேற்றியுள்ளது. இவை அனைத்தும் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளன.
நண்பர்களே,
இன்றும், தமிழகத்தில் நாம் அர்ப்பணித்துள்ள ரயில்வே திட்டங்களால் தென் தமிழகத்தின் லட்சக்கணக்கான மக்கள் பயனடைவார்கள். மதுரை முதல் போடிநாயக்கனூர் வரையிலான இந்த வழித்தடம் மின்மயமாக்கப்பட்ட பிறகு, வந்தே பாரத் போன்ற ரயில்களை இயக்க வழி ஏற்பட்டுள்ளது. இந்த ரயில்வே திட்டங்கள், தமிழகத்தின் வேகத்தையும் அதன் வளர்ச்சி அளவையும் புதிய சக்தியை அளிக்கப் போகின்றன.

நண்பர்களே,
இன்று இங்கு 2000 மெகாவாட் கூடங்குளம் அணுமின் நிலையத் திட்டத்துடன் தொடர்புடைய பரிமாற்றத் திட்டத்திற்கும் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. சுமார் 550 கோடி ரூபாய் செலவில் அமையவுள்ள இந்த அமைப்பு, வரும் ஆண்டுகளில் நாட்டிற்கு தூய்மையான எரிசக்தியை வழங்குவதில் முக்கியப் பங்கு வகிக்கப் போகிறது. இந்த எரிசக்தி திட்டம் இந்தியாவின் உலகளாவிய எரிசக்தி இலக்குகளையும் சுற்றுச்சூழல் உறுதிப்பாடுகளையும் நிறைவேற்றுவதற்கான ஒரு கருவியாக அமையும். மின் உற்பத்தி அதிகரிக்கும்போது, தமிழகத்தின் தொழில்துறைக்கும், உள்நாட்டுப் பயனாளர்களுக்கும் இது பெரிய பலனளிக்கும்.
நண்பர்களே,
தமிழகத்தில் ‘பிரதமர் சூரிய கர் இலவச மின்சார திட்டம்’ விரைவான வேகத்தில் நடைபெற்று வருவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இதுவரை அரசுக்கு சுமார் 1 லட்சம் விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன, மேலும் 40,000 சூரிய மேற்கூரை நிறுவல்கள் நிறைவடைந்துள்ளன. இந்த திட்டம் இலவச மற்றும் தூய்மையான மின்சாரத்தை வழங்குவதோடு மட்டுமல்லாமல், ஆயிரக்கணக்கான பசுமை வேலைவாய்ப்புகளையும் உருவாக்குகிறது.
நண்பர்களே,
தமிழகத்தின் வளர்ச்சி, வளர்ந்த தமிழகம் என்ற கனவு இது நமது முக்கிய உறுதிப்பாடு. தமிழகத்தின் வளர்ச்சி தொடர்பான கொள்கைகளுக்கு நாங்கள் தொடர்ந்து முன்னுரிமை அளித்துள்ளோம். கடந்த ஒரு தசாப்தத்தில் மத்திய அரசு நிதி ஒதுக்கீடு மூலம் தமிழகத்திற்கு மூன்று லட்சம் கோடி ரூபாய் அனுப்பியுள்ளது. இந்த தொகை முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் அனுப்பப்பட்ட தொகையை விட மூன்று மடங்குக்கும் அதிகம். இந்த 11 ஆண்டுகளில் தமிழகத்திற்கு 11 புதிய மருத்துவக் கல்லூரிகள் கிடைத்துள்ளன. முதல் முறையாக, கடலோரப் பகுதிகளில் உள்ள மீன்வளத் துறையுடன் தொடர்புடைய சமூகங்களின் மீது எந்த ஒரு அரசாங்கமும் இவ்வளவு அக்கறை காட்டியது இல்லை. நீலப் புரட்சி மூலம் நாங்கள் கடலோரப் பொருளாதாரத்தை விரிவுபடுத்துகிறோம்.
நண்பர்களே,
இன்று தூத்துக்குடியின் இந்த மண், வளர்ச்சியின் புதிய அத்தியாயத்திற்கு சாட்சியாக மாறி வருகிறது. இணைப்பு, மின் பரிமாற்றம், உள்கட்டமைப்பு ஆகிய இந்த அனைத்து திட்டங்களும் வளர்ந்த தமிழகம் – வளர்ந்த இந்தியாவின் வலுவான அடிப்படையை உருவாக்கப் போகின்றன. நான் மீண்டும் ஒருமுறை, தமிழகத்தின் எனது அனைத்து குடும்பத்தினருக்கும் இந்த அனைத்து திட்டங்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். மிக்க நன்றி. எனக்கு ஒரு வேண்டுகோள், இன்று உங்கள் உற்சாகம் மிக அதிகமாக இருப்பதை நான் பார்க்கிறேன், ஒரு காரியம் செய்யுங்கள், உங்கள் மொபைல் போனை எடுத்து, மொபைல் போனின் ஃபிளாஷ் லைட் மூலம் இந்த புதிய விமான நிலையத்தின் பெருமையை உயர்த்துங்கள்.
பாரத மாதா கி – ஜெய்.
பாரத மாதா கி – ஜெய்.
பாரத மாதா கி – ஜெய்.
மிக்க நன்றி. வணக்கம்.- இவ்வாறு பேசினார்


