மெட்ராஸ் மேட்னி – விமர்சனம்!
தனது அத்தியாவசியத் தேவைகளை பெறுகிற அளவுக்கு கூட வருமானம் இல்லாத, வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் வறுமையானவர்கள், அத்தியாவசியத் தேவைகளை பெற்றாலும் ஆசைப்பட்டதை கனவில் மட்டுமே கொண்டு வாழ்ந்தாலும் அதையெல்லாம் பெரிதாய் நினைக்காமல் ,மறந்துவிட்டு அல்லது கவலைப்படாத ஏழை வர்கம், இந்த இரண்டுக்கும் மேலே ஆசைப்பட்டதை அடைய முடியும் என்ற நம்பிக்கையை தருமளவு மட்டுமே வருமானத்தை வைத்துக் கொன்டு ஆசைகளை தீர்க்க வருமானத்தை பெருக்க வேண்டுமென்று அல்லாடுகிற பெருவாரியான ஜனங்களை கொண்ட கூட்டம்தான் நடுத்தர வர்க்கம்.இந்த வர்க்கத்தை வைத்து அந்த கே.எஸ். கோபாலகிருஷ்ணன் தொடங்கி., விசு., வி.சேகர் என பலர் படம் பண்ணி ஃபீல் பண்ண வைத்துள்ளார்கள். அந்த பட்டியலில் இணைய முயற்சித்து இருக்கும் சினிமாவே மெட்ராஸ் மேட்னி. அதாவது மேல்தட்டு என்றுக் கொள்ளும் வர்க்கத்தினர் பொழுதுபோக்கிற்காகவும் உடற்பயிற்சிக்காகவும் செய்யும் வேலைகளைச் சாகசம் என்று சொல்லிக் கொள்வார்கள்.அதே சமயம், நடுத்தட்டு மனிதர்களின் அன்றாட வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வுகளுமே பெரும் சாகசப் பயணமாகும் என்பதை அனைவருக்கும் தெரிந்த எடுத்துக் காட்டுகளுடன் சொல்லிகாட்டி சோர்வைடைய வைத்து விட்டதுதான் இப்படம்.
குப்பை அள்ளும் தொழில் செய்து பின்னர் ஆட்டோ டிரைவராகி வாழ்க்கையை ஓட்டும்ம் நாயகன் கண்ணன் தன் ஆசை மகன் மற்றும் மூத்த செல்ல மகளை நன்கு படிக்க வைக்கிறார். அடுத்து ஐ டி கம்பெனியில் வேலை பார்க்கும் மகளுக்கு திருமணம் செய்து வைக்க முயல்கிறார் அதேசமயம் தன் மகனின் மேற்படிப்புக்கு வங்கியில் கடன் வாங்க முயல்கிறார். இதெல்லாம் ஒரு போராட்டமாகவே அவருக்கு மாறுகிறது. இதன் முடிவு என்னவாகிறது என்பதுதான் மெ.மே. படத்தின் கதை, திரைக்கதை வசனம் மற்றும் இத்யாதியாக்கும்.
நாயகனாக காளி வெங்கட்.இது திரைப்படம் , இதில் நாம் நடிக்கிறோம் என்று நினைக்காமல் நிஜமான மிடில் கிளாஸ் ஃபேமிலி தலைவராகவே வாழ்ந்த் அசத்துகிறார். இதற்கு அவரின் முந்தைய அனுபவமு, அவருடைய உடல்மொழியும் வசன உச்சரிப்பும் பெரிதும் கைகொடுத்திருக்கிறது.
காளி வெங்கட்டின் மகளாக நடித்திருக்கும் ரோஷினி ஹரிப்ரியன், மகனாக நடித்திருக்கும் கிஷோர், மனைவியாக நடித்திருக்கும் ஷெல்லி கிஷோர் ஆகிய மூவருமே நடுத்தர குடும்பத்தின் பிரதிநிதிகளாக ஜொலிக்கிறார்கள்.
கீதா கைலாசம் என்றாலே நினைவுக்கு வரும் கதாபாத்திரத்துக்கு நேர்மாறான கதாபாத்திரத்தில் நடித்துத் தனி கவனம் பெறுகிறார். ஆம்.. முதல் முறையாக சிரித்த முகத்தோடு, மெட்ராஸ் பாஷையில் திருக்குறள் சொல்வது முதல் பஞ்சாயத்து பேசும் அரசியல்வாதி வரை என பார்வையாளர்களை சிரிக்க வைக்கும் கதாபாத்திரத்தில் கலகலப்பாகவும், கம்பீரமாகவும் நடித்து ஸ்கோர் செய்கிறார்.
அர்ச்சனா, சுனில்சுதா, சாம்ஸ், மதுமிதா ஆகிய நடிகர்களும் தங்கள் பாத்திரமுணர்ந்து நடித்திருக்கிறார்கள்.
படத்தில் வரும் நிறைய சின்ன சின்ன கேரக்டர்களுக்கும் ஒரு பின்கதை வைத்துள்ளார் இயக்குநர். அதில் பொற்கொடி, சாம்ஸ் கேரக்டர் மட்டுமே கவர்கிறது.ஒவ்வொரு கேரக்டர்களுக்கு ஏற்ற சொல்லாடல்கள் படத்தின் பெரும் பலம்.ஆனால் சத்யராஜ் பேசும் வசனங்களில் மட்டுமே ஏகப்பட்ட செயற்கைத்தனம் தலைகாட்டுகிறது.
கேமராமேன் ஆனந்தின் ஒளிப்பதிவுதான் நம்மை கதைக்குள் ஈர்க்கிறது. விதவிதமான, வித்தியாசமான கேமரா கோணங்கள் மூலம் படத்தை வேறு ஒரு தளத்துக்குக் கொண்டு செல்கிறார். வடிவேலு குரலில் வரும் ‘என்னடா பொழப்பு இது’ பாடல் கதைக்கு பலம். பாலசாரங்கனின் பின்னணி இசை நிச்சயம் கவனம் பெறலாம்.
ஆனால் தெரிந்த கதை, பார்த்த சீன்கள், யூகிக்கும் காட்சியமைப்புகள் என முன்னொரு கால தூர்தர்சனின் ஞாயிறன்று வெளியாகும் திரைப்பட உணர்வை மட்டுமே தருகிறது.
மார்க் 2.25/5


