🏛️நாடாளுமன்ற ஜனநாயகம்:பதிலடி கொடுப்பதா? பயந்து ஓடுவதா?
நாடாளுமன்றம் என்பது மக்கள் பிரச்சினைகளை விவாதிப்பதற்கும், ஆளுங்கட்சியின் தவறுகளை எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டுவதற்கும் உருவாக்கப்பட்ட ஒரு உன்னத மேடை. ஆனால், இன்று இந்திய நாடாளுமன்றத்தின் மாண்பு என்பது, அமைச்சர்களின் மிரட்டல்களுக்கும், பழைய வரலாறுகளைத் தோண்டிப் பார்க்கும் பழிவாங்கும் அரசியலுக்கும் இடையே சிக்கித் தவிப்பது வேதனைக்குரியது.
அமைச்சர் ரிஜிஜுவின் ‘உரிமை மீறல்’ காமெடி!
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, அதானி விவகாரம் மற்றும் அரசின் நிதித் திட்டங்கள் குறித்து எழுப்பிய கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாத அரசு, இப்போது ‘உரிமை மீறல் நோட்டீஸ்’ (Privilege Notice) என்ற ஆயுதத்தைக் கையில் எடுத்திருக்கிறது. “ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார் ராகுல்” என்கிறார் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு. இது ஒரு பழுத்த அரசியல்வாதிக்கு அழகல்ல, மாறாக இது ஒரு ‘படு காமெடி’ என்றே சொல்லத் தோன்றுகிறது.

ஏனெனில், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி, நாடாளுமன்றத்தின் உள்ளே ஒரு உறுப்பினர் பேசுவதை வைத்து அவர் மீது நீதிமன்றத்திலோ அல்லது வெளியிலோ நடவடிக்கை எடுக்கச் சட்டத்தில் இடமில்லை. ஒரு பொறுப்புள்ள பிரதமர் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கு, அந்தப் பிரதமரே நேரடியாகப் பதிலளித்துத் தனது நேர்மையை நிரூபிப்பதே உண்மையான ஜனநாயக மரபு. அதை விடுத்து, குறுக்கு வழியில் நோட்டீஸ் அனுப்பி வாயடைக்கப் பார்ப்பது பலவீனத்தையே காட்டுகிறது.
நேருவைக் கைகாட்டும் ‘பழைய பல்லவி’
பிரதமர் மோடி அவர்கள் நாடாளுமன்றத்தில் உரையாற்றத் தொடங்கினாலே, அவர் கையில் எடுக்கும் அஸ்திரம் ‘நேரு’. இந்தியாவின் இன்றைய அனைத்துப் பிரச்சினைகளுக்கும்—பக்கவாதம் முதல் காது கேளாமை வரை—காரணம் நேருவும் காங்கிரஸ் கட்சியும்தான் என்று அவர் பாடும் பழைய பல்லவியை இனி பிறக்கப் போகும் குழந்தை கூட நம்பாது.
ஏனெனில், பிரதமர் மோடி அவர்கள் இந்தியாவின் அரியணையில் ஏறி 12 ஆண்டுகளை நெருங்கிக் கொண்டிருக்கிறார். இன்று 2026-ஆம் ஆண்டில் நின்றுகொண்டு, தற்போதைய வேலையில்லாத் திண்டாட்டத்திற்கும், விலைவாசி உயர்வுக்கும், அதானி போன்ற தனிநபர் வளர்ச்சிகளுக்கும் இன்னும் 60 ஆண்டுகளுக்கு முந்தைய நேருவின் ஆட்சியைக் காரணம் சொல்வது, ஒரு பிரதமரின் தகுதியின்மையையே பறைசாற்றுகிறது.
எதிர்கொள்ளும் துணிச்சல் எங்கே?
ஜனநாயகத்தில் ஆளுங்கட்சி என்பது எதிர்க்கட்சிகளின் கேள்விக் கணைகளுக்குப் பதில் சொல்லக் கடமைப்பட்டது. ஆனால், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளை நேருக்கு நேர் எதிர்கொள்ள அஞ்சி, மைக் அணைப்பு (Mic Muting), சபை நீக்கம் மற்றும் உரிமை மீறல் நோட்டீஸ் போன்ற தந்திரங்களைக் கையாளுவது எவ்வகையில் நியாயம்?
நாடாளுமன்றத்தில் எழுப்பப்படும் கேள்விகள் பிரதமரின் தனிப்பட்ட நற்பெயருக்கு எதிரானவை அல்ல; அவை நாட்டின் நலன் சார்ந்தவை. அந்தக் கேள்விகளுக்குத் தெளிவான விளக்கங்களைக் கொடுத்து விவாதத்தை ஆரோக்கியமாக நகர்த்துவதற்குப் பதிலாக, பயம் கொண்டு மிரட்டல்களைப் பயன்படுத்துவது ‘உலக மகா ஜனநாயக நாடு’ என்று பெருமை பேசும் இந்தியாவிற்குப் பெருமை சேர்க்காது.
டாக்டர்.ரமாபிரபா


