மாநாடு – விமர்சனம்!

மாநாடு – விமர்சனம்!

ம் நாட்டில் படிக்கப் படிக்க அல்லது கேட்கக் கேட்க திகட்டாத மற்றும் விரும்பும் ஏகப்பட விசித்திரக் கதைகள் உலாவி வருகின்றன. அவைகள் காலத்தால் அழியாதவை. அதன் சுவை வர்ணிக்க முடியாதவை. அந்த வரிசையில் வருவது தான் விக்கிரமாதித்தன் கதை. அது பல கிளைக் கதைகளைக் கொண்டது.மேலும் நம்பகத்தன்மையற்ற பல சம்பவங்களைக் கொண்டிருந்தாலும் எதிர் கேள்வி கேட்காமல் நேர் கொள்ளும் திறன் மிக்கவை அரபு தேசத்தில் ஆயிரத்து ஓர் இரவுகள் எப்படியோ அதே போல உலாவும் பட்டி விக்கிரமாதித்தன் கதை போல் டைம் லூப் டைப் கதைகள் ஆங்கிலத்தில் நிறைய வெளியாகி இருக்கின்றன.. அதாவது ஒரு குறிப்பிட்ட நாள் அல்லது காலம் மீண்டும் மீண்டும் ரிப்பீட் மோடில் நடப்பதே டைம் லூப். இது எப்படி ஆரம்பிக்கும், டைம் லூப்பில் மாட்டிக்கொண்டவருக்கு தான் மாட்டிக்கொண்டது தெரியுமா, எந்த அடிப்படையில் டைம் லூப் மீண்டும் மீண்டும் நிகழ்கிறது, இந்த டைம் லூப் எதன் அடிப்படையில் நிறைவு பெறுகிறது. இது போல் பல கேள்விகள் உண்டாகும். இதை தெளிய வைத்த படங்களும், மேலும் குழப்பிய படங்களும் ஏகப்பட்ட மொழிகளில் வெளிவந்திருக்கின்றன. பொதுவாக டைம் லூப், டைம் டிராவல் போன்றவைகள் எல்லாம் கற்பனையான ஒன்றுதான். ஆனாலும் டைம் லூப் சார்ந்து வெளிவரும் படைப்புகளுக்கு என்றுமே வரவேற்பு உள்ளது. அந்த வகையில் நம் இந்தியாவில் அதிலும் தமிழில் இந்த டைம் லூப் கதையை சினிமாவாக சொல்வதில் முதலில் தெளிவாக சொல்லி ஜெயித்திருப்பதே மாநாடு படம்!

இந்த மாநாடு படத்தின் கதை என்னவென்றால் ஹீரோ அப்துல் காலிக் (சிம்பு) துபாயில் இருந்து கிளம்பி நண்பன் ஒருவனின் திருமணத்திற்காக கோயம்புத்தூருக்கு வருகிறான். அதுவும் தாலிக்கட்ட தயாராக இருக்கும் பெண்ணை கடத்தி போய் அவளைக் காதலித்த தன் நண்பணுடன் சேர்த்து வைப்பதுதான் காலிக்கின் பிளான். அத்ன்படி திருமணப் பெண்ணைக் கடத்தி நண்பனுக்கு திருமணம் செய்து வைக்கப் போகும்போது, ஒரு எதிரபாரா சம்பவம் நடந்து விடுகிறது. அதில் ஏற்படும் பிரச்னையில் இருந்து விடுபட வேண்டுமானால் முதலமைச்சரைக் கொல்ல வேண்டுமெனக் கூறுகிறார் போலீஸ் ஆபீசரான தனுஷ்கோடி (எஸ்.ஜே. சூர்யா). அதை ஒப்புக் கொண்டு முதலமைச்சரைக் கொன்றும் விடுகிறான் அப்துல் காலிக். இதை அடுத்து போலீஸ் அவனைக் கொன்று விடுகிறது. சட்டென விழித்துப் பார்த்தால், காலிக் மீண்டும் விமானத்தில் இருக்கிறான். அப்போதுதான் தான் ஒரு Time – loopல் சிக்கியிருப்பது அவனுக்குப் புரிகிறது. இதையடுத்து இந்த இக்கட்டிலிருந்து தானும் தப்பிக்க வேண்டும், முதலமைச்சரும் காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்காக நாயகன் மேற்கொள்ளும் அதிரடி சாகசங்கள்தான் ஸ்டோரி.

நீண்ட இடைவேளைக்கு பிறகு சிம்பு நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பில் வெளியாகியுள்ள படம் மூன்று வருட காத்திருப்பிற்கு பின் வெளியாகியிருக்கும் படம் ரசிகர்களை ஏமாற்றவில்லை.அசத்தலான கம்பேக், கன கச்சிதமாக கதாப்பாத்திரத்திற்குள் பொருத்திக்கொண்டு அப்துல் காலிக்காக அசத்தியிருக்கிறார். ஒரு நாளில் மீண்டும் மீண்டும் திரும்பும் பலத்தை வைத்து கொண்டு, அதை தன் பலமாக மாற்றிக்கொண்டு சி எம்மை காப்பாற்ற ஓடும்போது நாமும் சேர்ந்து ஓடுகிறோம். அதிலும் ஒய் ஜி மகேந்திரனிடம் மாட்டிக்கொள்ளும் சிம்பு பேசும் வசனங்களிலும் நடிப்பிலும், தியேட்டர் விழுந்து விழுந்து சிரிக்கிறது. படம் முழுக்க சிம்பு வியாப்ப்த்திருக்க அவரை ஒரங்கட்டி தான் வரும் ஒவ்வொரு காட்சியிலும் எஸ் ஜே சூர்யா தியேட்டரையே அலற விடுகிறார். சிம்பு சாகும் ஒவ்வொரு முறையும் பெட்டில் இவரும் மீண்டும் கண் விழிக்கும் காட்சிகளில் ரசிக்க வைக்கிறார். வில்லத்தனத்தில் புதுமை காட்டி மிரள வைத்து விடுகிறார்

வழக்கமாக வெங்கட் பிரபு படத்தில் வரும் காமெடி கூட்டணி நடிகர்கள் இதில் இல்லை. பிரேம்ஜி மட்டும் நண்பராக தேவையான இடத்தில் வந்து போகிறார். நாயகி கல்யாணி ப்ரியதர்ஷன், கருணாகரன் உட்பட பெரிய பாத்திரம் இல்லை என்றாலும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.

பரபரப்பான படத்தில் ஒரு பாடல் தான் என்பது ஆறுதல் வில்லனுக்கு நாயகனுக்கு தனித்தனி பிஜிஎம்மோடு, படத்திற்கான பின்னணி இசையில் பின்னியெடுத்திருகிறார் யுவன். ரிச்சர்ட் எம் நாதனின் ஒளிப்பதிவு அபாரம்

ஆரம்ப பேராவில் சொன்னது போல் ஹாலிவுட்டில் டைம் லூப் கதைகள் நிறைய வந்திருக்கிறது ஆனால் அதன் சிக்கலான கான்செப்டை ரசிகர்களுக்கு புரிய வைப்பது கடினம் என்பதால், தமிழ் சினிமாவில் யாரும் அதனை முயற்சிக்கவில்லை ஆனால் அதை தனது அநாயசமான திரைக்கதையால் கடந்து சாதித்திருக்கிறார் வெஙகட் பிரபு. இப்படம் சிம்புக்கு மட்டுமல்ல வெங்கட் பிரபுவின் திறமையையும் வெளிச்சமிட்டு காட்டியிருக்கிறது. படத்தில் ஒரு காதாப்பாதிரம் கூட தேவையில்லாமல் இல்லை. ஒவ்வொரு காட்சியிலும் ஆயிரம் பின்னணி கதைகள், பரபரக்கும் ஜெட் வேக திரைக்கதை என தமிழில் ஒரு அசத்தலான முயற்சியை செய்து சாதித்திருக்கிறார்கள்.

குறிப்பாக எடிட்டர் கே.எல். பிரவீணுக்கு இது நூறாவது படமாம். பிரமாதமான சதம்! மேலும் இப்படி ஒரு படம் கோலிவுட்டுக்குக் கிடைக்க வழி செய்த சுரேஷ் காமாட்சிக்கு ஸ்பெஷல் பொக்கே பார்சல்

மொத்தத்தில் சினிமாவை நேசிப்போர் ஒவ்வொருவரும் கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய படமிது!

மார்க் 4 / 5

error: Content is protected !!