லைன்மேன் -விமர்சனம்!
ஓர் உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு தயாராகியுள்ள இந்த லைன் மேன் படம் ஒரு எளிய மனிதர் தனது புதிய கண்டுபிடிப்புக்கான அங்கீகாரத்தை பெற நேர்கொள்ளும் இன்னல்களையும், அவமானங்க்களையும் எதிர்கொள்கிறார் என்பதையும், உப்பளத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள் முதலாளித்துவத்தால் எப்படி பாதிக்கப்படுகிறார்கள், என்பதையும் கொஞ்சூண்டு சினிமாத்தனத்தோடு சொல்லியிருந்தாலும் யாதொரு மிகைப் படுத்தலும் இல்லாமல் யதார்த்தமாகக் காட்சிப்படுத்தி வழங்க்கி இருப்பதற்காகவே உதயகுமார் & டீமை தாராளமாகப் பாராட்டலாம் .
அதாவது தூத்துக்குடி பகுதியில் உள்ள உப்பளத்தில் வேலை செய்யும் மக்களை பற்றி இந்த படம் பேசுகிறது. அந்த பகுதியில் சார்லி மின் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். அவருடன் அவரது மகன் செந்திலும் இருக்கிறார், சார்லியின் மனைவி நீண்ட நாட்களுக்கு முன்பு மின்சாரம் பாய்ந்து உயிரிழந்து விடுகிறார். சார்லி மகன் செந்தில் ஒரு இளம் விஞ்ஞானியாக இருக்கிறார், அந்த பகுதி மக்களுக்கு தேவையான உபகரணங்களை செய்து கொடுக்கிறார். கூடவே தெரு விளக்குகள் இரவில் தானாக எரிவதற்கும், காலையில் தானாகவே அணைவதற்கும் ஏற்றார் போல ஒரு கருவியை கண்டுபிடிக்கிறார். இதை அரசு அங்கீகரித்தால் மின்சாரத்தை மிச்சப்படுத்தலாம் என்பது அவரது எண்ணம்.எனவே இதனை எப்படியாவது செயல்படுத்த வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தினமும் செல்கிறார். இருப்பினும் அவரது கோரிக்கை ஏற்கப்படவில்லை. இன்னொரு பக்கம் உப்பளம் பகுதியில் உள்ள ஒரு முதலாளி பணத்தை அதிக கந்து வட்டிக்கு கொடுத்து அந்த மக்களை கொடுமைப்படுத்தி வருகிறார், மேலும் தனது உள்ளபத்திற்கு திருட்டு கரண்டையும் எடுத்து பயன்படுத்துகிறார். இவருக்கும் சார்லி குடும்பத்திற்கும் பகை இருந்து கொண்டே உள்ளது. இறுதியில் செந்திலின் கண்டுபிடிப்பு அரசாங்கத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டதா? அந்த பகுதி மக்களுக்கு என்ன ஆனது என்பதே லைன் மேன் படத்தின் கதை.
ஹீரோவாக நடித்திருக்கும் ஜெகன் பாலாஜி புதியவர் என்றாலும், தனது நடிப்பின் மூலம் உண்மை சம்பவத்தின் வலியை நேர்த்தியாக பார்வையாளர்களிடம் கடத்தி கவனம் ஈர்க்கிறார். ஜெகன் பாலாஜியின் தந்தையாக நடித்திருக்கும் சார்லி, சுப்பையா என்கிற அந்த லைன்மேன் கதாபாத்திரத்தில், நடிப்பிலும் உடல் மொழியிலும் அசலான கிராமத்துத் தந்தையை கண்முன் நிறுத்துகிறார்.சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் அதிதி பாலனின் வருகை படத்திற்கு கூடுதல் பலம். நாயகியாக நடித்திருக்கும் சரண்யா ரவிச்சந்திரன், உப்பளத்தில் பணியாற்றும் பெண் தொழிலாளர்களை பிரதிபலித்திருக்கிறார். மேலும் பல கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் அனைவரும் மண்ணின் மைந்தர்களாக வலம் வந்து ஓகே சொல்ல வைத்து விடுகிறார்கள்..
விஷ்ணு கே ராஜாவின் ஒளிப்பதிவில் உப்பளக் காற்றைக் காட்சிகளில் உணர முடிகிறது. தீபக் நந்தகுமாரின் பாடல்களும் பின்னணியும் படத்துக்குப் பலம் சேர்த்திருக்கின்றன. எடிட்டர் சிவராஜ் இன்னும் கொஞ்சம் அக்கறைக் காட்டி இருக்கலாம். .
ஓடிடி ரிலீஸ் என்று முடிவெடுத்தே எடுக்கப்பட்டது போல் போகும் படத்தில் அடுத்தடுத்து என்ன நடக்கப் போகிறது என்ற சுவாரஸ்யம் இல்லாதது லைன் மேன் படத்தில் உள்ள பிரச்சினை. படத்தில் உள்ள முக்கிய கதாபாத்திரங்களுக்கு என்ன நடந்தாலும் நமக்கு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அந்த உலகிற்குள் நம்மால் செல்ல முடியவில்லை. உண்மையை கதையை இன்னும் கொஞ்சம் அழுத்தமாக சொல்லி இருக்கலாம்.
ஆனாலும் இந்த லைன் மேன் – கவனிக்க வைக்கிறான்
மார்க் 3/5