’குற்றம் புதிது’ – விமர்சனம்!
கோலிவுட்டில் அதிகம் பார்ப்பதோ மாஸ் மசாலா திரைப்படங்கள்தான். ஹீரோயிசம், சென்டிமென்ட், ஆக்ஷன், பஞ்ச் டயலாக், பாடல்கள் போன்றவை தமிழ்க் கடவுளாகக் கருதப்படும் நடிகர்களின் படங்களை மட்டுமே. அதே சமயம் மோலிவுட்டில் க்ர்ைம் திரில்லர்ப் படங்களுக்கு தனித்துவமான வரவேற்பு உள்ளது. அப்படியான கதைக்க்கான களம், வலுவான திரைக்கதை, இயற்கையான நடிப்பு ஆகியவை மூலம் ரசிகர்களை ஈர்க்க்கும் திறன் மலையாளிகளிடம் உண்டு. ஆனால் தமிழ் சினிமாவில், ராட்சசன், போர் தொழில் போன்ற சில படங்களைத் தவிர, மற்ற குற்றப் படங்கள் பெரிய வரவேற்பைப் பெறவில்லை. அதிகமான மசாலா சேர்ப்பு, கதையின் ஆழமின்மை, மற்றும் சில நேரங்களில் ரசிகர்கள் எதிர்பார்ப்புகளுக்கு ஒவ்வாத பாணி ஆகியவை காரணம் என்றும் எல்லாரும் தெரியும். இச்சூழலில் படத்தின் டைட்டிலைப் போலவே கதையையும் திரைக்கதையையும் புதிதாக எழுதி, இதுபோன்ற படங்கள் இப்படித்தான் இருக்கும் என்கிற யூகங்களைப் பொய்யாக்கினாலும் க்ளைமாக்ஸில் கொலை நடந்தது ஏன்? எப்படி என்பதை விவரிக்கும்போது ‘அடச்சே’ என்று சொல்ல வைத்து விடுகிறார்கள்.
அதாவது அசிஸ்டெண்ட் கமிஷனர் ஆஃப் போலீஸ் மதுசூதனன் ராவின் மகளான நாயகி சேஷ்விதா கனிமொழி, ஒர்க் முடித்துவிட்டு இரவு நேரத்தில் தனியாக வீடு திரும்பும் போது மாயமாகி விடுகிறார். ஆட்டோவில் வருவதாக தகவல் தெரிவித்த மகள் வீடு திரும்பாததால் கவலை கொள்ளும் மதுசூதனன் ராவுக்கு, மறுநாள் காலையில் இளம் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக தகவல் வருகிறது. இதற்கிடையே, தான் ஒரு பெண்ணை கொலை செய்துவிட்டதாக கூறி ஹீரோ தருண் விஜய் போலீஸில் சரணடைகிறார். தருண் விஜய் கொலை செய்ததாக சொல்லும் பெண் சேஷ்விதா கனிமொழியா ? என்ற கோணத்தில் விசாரணையை தொடங்கும் காவல்துறைக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக, இந்த கொலை மட்டும் அல்ல, மேலும் இரண்டு கொலைகள் செய்திருப்பதாக சொல்கிறார் தருண் விஜய், தான் கொலை செய்தவர்களில் சேஷ்விதா கனிமொழியும் ஒருவரா? என்பது தெரியாது, என்று சொல்லி, அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியளிக்கிறார். அவர் கூறிய தகவல்களின் அடிப்படையில் விசாரணையை மேற்கொள்ளும் போலீஸ் அவர் கொலை செய்ததாக சொல்லப்படும் இரண்டு பேரும் உயிருடன் இருப்பதை கண்டுபிடிக்கிறது. ஒரு கட்டத்தில் கனிமொழியும் உயிரோடு வருகிறாள். அப்படியானால், நாயகன் சொன்ன மூன்று கொலைக்கும், நாயகி சேஷ்விதா கனிமொழிக்கும் என்ன தொடர்பு?, உயிருடன் இருப்பவர்களை கொன்று விட்டதாக சொல்லும் தருண் விஜய் யார் ?, எதற்காக இப்படி சொல்கிறார் ? என்பது போன்ற கேள்விகளுக்கான பதிலை புது பாணியிலானன கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் ஜானரில் சொல்ல முயற்சித்து இருப்பதே ‘குற்றம் புதிது’ படக் கதை.
நாயகனாக நடித்திருக்கும் தருண் விஜய், அதற்கென பக்காவாக தயாராகியிருக்கிறார். போலீஸ் அதிகாரியையும், நீதிபதியையும் அங்கிள் என்று அழைப்பதும், கொலை செய்ததையே ஒரு குழந்தையை போல் ஒப்புக்கொள்ளும் காட்சியிலும் மனநிலை பாதித்தவர் போல் பேசுவதும் இவர் ஒரு சைக்கோவாக இருப்பாரோ என்ற சந்தேகத்தை எழுப்பி கதையின் வேகத்தை அதிகரிக்கிறது.நாயகியாக சேஷ்விதா கனிமொழிவுக்கு வழக்கமான நாயகிகளைக் காட்டிலும் மாறுபட்ட கதாபாத்திரம்.அதற்குப் பொருத்தமாக நடித்து வரவேற்பைப் பெறுகிறார்.அவருடைய கண்கள் ரசிகர்களை உடனே ஈர்க்கும் ஆயுதம்.நிழல்கள் ரவி, மதுசூதன் ராவ்,பாய்ஸ் ராஜன்,ராம்ஸ் உள்ளிட்டோரின் பாத்திரப்படைப்புகளும் அதில் அவர்களுடைய நடிப்பும் அவர்களுக்கு மட்டுமின்றி படத்துக்கும் பலமாக அமைந்திருக்கிறது.
இசையமைப்பாளர் கரண் பி.க்ருபா இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் ஜானருக்கு ஏற்ற வகையில் பயணித்திருப்பதோடு, கமர்ஷியல் அம்சங்களோடு பயணித்து படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.
கேமராமேன் ஜேசன் வில்லியம்ஸின் கேமரா, சிறிய அறையில் நிகழும் கொடூரமான காட்சிகள் மூலம் பார்வையாளர்களை பீதியடைய செய்தாலும், கதைக்களத்தோடு பார்வையாளர்களையும் பயணிக்க வைக்கும் விதத்தில் காட்சிகளை படமாக்கியிருக்கிறது. திரைக்கதையில் குற்றத்தை புதுவிதமாக சொல்ல முயற்சித்திருக்கும் இயக்குநருக்கு பெரும் பலமாக பயணித்திருக்கும் எடிட்டர் எஸ்.கமலக்கண்ணன், யூகிக்க முடியாதபடி காட்சிகளை தொகுத்து படத்தை சுவாரஸ்யமாக மட்டும் இன்றி விறுவிறுப்பாகவும் நகர்த்தி செல்கிறார்.
எழுதி இயக்கியிருக்கும் நோஹா ஆம்ஸ்ட்ராங், ஒரு பெண் காணாமல் போகும் சம்பவத்தை மையக்கருவாக வைத்துக்கொண்டு, யூகிக்க முடியாத திருப்பங்கள், விறுவிறுப்பான திரைக்கதை, வேகமான காட்சியமைப்பு என்று புதுவிதமான கிரைம் திரில்லர் ஜானர் படத்தை கொடுத்திருந்தாலும் முத்தாய்ப்பில் இப்படி சொதப்பி இருக்க வேண்டாம்.
ஆனாலும் க்ரைம் சினிமாக்களில் இந்த குற்றம் புதிது படமும் இடம் பெற்று விட்டது
மார்க் 2.5/5


