மின் இணைப்பு இல்லாத வீடே இல்லை! – சாதித்தது கேரளா1
நம் நாட்டின் முதல் முழுமையான கல்வியறிவு பெற்ற மாநிலமாக அறியப் பட்ட கேரளாவின் ஒவ்வொரு வீட்டுக்கும் மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை கேரள அரசு வெற்றிகரமாக செயல்படுத்தி விட்டது. இதன் மூலம் எல்லா வீடுகளுக்கும் மின்சாரம் வழங்கும் மாநிலங்களின் பட்டியலில், குஜராத், ஆந்திராவை அடுத்து கேரளாவும் இணையவுள்ளது.

அண்டை மாநிலமான கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பினராயி விஜயன் முதல்வராக உள்ளார். இங்கு, இடது ஜனநாயக முன்னணி கூட்டணி ஆட்சி நடக்கிறது. மாநிலத்தின் அனைத்து வீடுகளுக்கும் மின் இணைப்பு வழங்க மாநில அரசு திட்டமிட்டது. அதன்படி இதுநாள் வரை மின் இணைப்பு பெறாத, பெற இயலாதோரின் பட்டியலை, அரசு சாரா தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் மாநில மின் வாரியம் தயாரித்தது. இதையடுத்து 2.5 லட்சம் வீடுகளில் மின் இணைப்பு இல்லாதது தெரிய வந்தது. அவர்களுக்கு மாநில அரசின் செலவிலேயே மின் இணைப்பு வழங்கப்பட்டு மீட்டரும் பொருத்தப்பட்டது.
அது மட்டுமின்றி பழங்குடியினர் அதிகம் வசிக்கும் மலை கிராமங்கள் வனத்தை ஒட்டிய பகுதிகளிலும் பூமிக்கு அடியில் மின் ஒயர்கள் பதிக்கப்பட்டு மின் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது.இதன் மூலம் மாநிலத்தின் அனைத்து வீடுகளிலும் மின் இணைப்பு வழங்கிய பெருமை கேரளாவுக்கு கிடைத்துள்ளது. ஆனாலும் முன்னதாக் குஜராத், ஆந்திர மாநிலங்களில் அனைத்து வீடுகளிலும் மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில்தான் அந்த பட்டியலில் தற்போது கேரளாவும் இணைந்துள்ளதாக்கும்.


