நீங்க எப்படி இருக்கீங்க? குஜராத்தை அலற விடப் போகும் ட்ரம்ப் இந்தியா விசிட்!
வரும் 24, 25ம் தேதி அமெரிக்க அதிபர் இந்தியா வரவுள்ள நிலையில் விமான நிலையத்திலிருந்து அகமதாபாத் மைதானம் வரை என்னை வரவேற்க 5 முதல் 7 மில்லியன் மக்கள் வரவுள்ளதாக மோடி கூறியுள்ளார் என்று சொல்லி ட்ரம்ப் பெருமைப்பட்டுள்ளார்.
அதாவது அமெரிக்காவில் நடந்த ‘ஹவுடி மோடி’ நிகழ்ச்சியை போன்று டிரம்புக்கு ‘கெம் சோ’ நிகழ்ச்சி அகமதாபாத்தில் நடத்தப்படுகிறது. அதனால், குஜராத்தின் அகமதாபாத் நகரை அழகு படுத்தும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், மனைவி மெலனியாவுடன் வரும் 24, 25ம் தேதி இரண்டு நாள் பயணமாக இந்தியா வருகிறார். பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று இந்தியா வரும் டிரம்ப், தலைநகர் டெல்லி, குஜராத் மாநிலம் அகமதாபாத் ஆகிய நகரங்களில் நடக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
இதையடுத்து, மோடியின் குஜராத் மாநிலத்தின் முக்கிய நகரங்கள், சாலைகள் அழகுபடுத்தப்பட்டு வருகின்றன. உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் அரங்கம் என்று அழைக்கப்படும் மொடாரா ஸ்டேடி யத்தில் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சுமார் 1.10 லட்சம் பேர் அமர்வதற்கான வசதிகள் இந்த அரங்கில் உள்ளது. ஸ்டேடியத்தைச் சுற்றி, சாலைகள் போடப்பட்டு, தரைவிரிப்பு வேலைகள் தீவிரமாக நடக்கின்றன. ரயில்களுக்கு பெயின்ட் அடிக்கப்படுகிறது. நடைபாதைகளில் புதிய பேவர்பிளாக் கற்கள் பதிக்கப்படுகின்றன. கடந்தாண்டு செப்டம்பரில் அமெரிக்காவின் டெக்சாஸில் பிரதமர் மோடி பங்கேற்ற ‘ஹவுடி மோடி’ நிகழ்ச்சியை போன்று ஒரு நிகழ்வை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. பிப். 24ம் தேதி மாலை நடைபெறவிருக்கும் இந்த நிகழ்வின் தலைப்பாக ‘கெம் சோ மிஸ்டர் பிரசிடென்ட்’ என்று கூறப்படுகிறது. ‘கெம் சோ’ (நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்) என்பது குஜராத்தியில் ஹவுடிக்கு சமமானதாகும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
இந்தியப் பயணம் பற்றி வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசியுள்ள ட்ரம்ப், “இந்தியப் பிரதமர் மோடி மிகவும் சிறந்த மனிதர். இந்த மாத இறுதியில் என் முதல் இந்தியப் பயணத்தை ஆவலுடன் எதிர்நோக்கிக் காத்துக்கொண்டிருக்கிறேன். இந்தப் பயணத்தின்போது இந்தியாவுடன் பல வர்த்தக ஒப்பந்தங்கள் கையொப்பமாகலாம். இந்தியர்கள் ஏதேனும் செய்ய வேண்டும் என விரும்புகிறார்கள். அனைத்தும் நல்லபடியாக முடிந்தால் சரியான ஒப்பந்தம் முடிவாகும்.
நான் பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் பேசினேன். அப்போது அவர், `நமக்காகப் பல மில்லி யன் கணக்கான மக்கள் வருவார்கள். அன்றைய இரவு நடக்கும் பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் மட்டும் குறைந்தது 40 முதல் 50 ஆயிரம் மக்கள் கலந்துகொள்வார்கள் என்று கூறினார். இந்திய மக்களைக் காண நான் மிகவும் ஆவலுடன் காத்திருக்கிறேன்.
விமான நிலையத்திலிருந்து அகமதாபாத் மைதானம் வரை என்னை வரவேற்க 5 முதல் 7 மில்லி யன் மக்கள் வரவுள்ளதாக மோடி கூறியுள்ளார். அந்த மைதானம் உலகிலேயே மிகவும் பெரியது. மோடி அதைக் கட்டமைத்து வருகிறார். அதன் கட்டுமானம் முழுமையடைந்துவிட்டதாக என்னிடம் கூறினார்’ என்று ட்ரம்ப் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது