இந்திய ராணுவத்தின் புதிய தலைமைத் தளபதி:யார் இந்த லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத்?
இந்திய ராணுவத்தின் அடுத்த புதிய தளபதியாக (Chief of the Army Staff – COAS) லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போதைய ராணுவ தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி வரும் ஜூன் 30-ஆம் தேதியுடன் ஓய்வு பெறுவதைத் தொடர்ந்து, அன்றைய தினம் பிற்பகலில் தீரஜ் சேத் புதிய தளபதியாகப் பொறுப்பேற்க உள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ ஒப்புதலை இந்தியக் குடியரசுத் தலைவர் வழங்கியுள்ளதாக மத்திய பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.
சுமார் 40 ஆண்டு கால அசாத்திய ராணுவப் அனுபவமும், மிக உயரிய வியூகப் பின்னணியும் கொண்ட ஒரு ராணுவ அதிகாரியிடம் இந்தியாவின் பாதுகாப்புப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருப்பது, ஒட்டுமொத்த பாதுகாப்புத் துறையிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இராணுவப் பாரம்பரியக் குடும்ப பின்னணி
மத்தியப் பிரதேசத்தின் ரேவாவில் உள்ள சைனிக் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்த தீரஜ் சேத், பாரம்பரியமிக்க ஒரு ராணுவக் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை லெப்டினன்ட் ஜெனரல் கிருஷ்ணா மோகன் சேத் (ஓய்வு), இந்திய ராணுவத்தில் ‘அட்ஜூடன்ட் ஜெனரல்’ (Adjutant General) ஆகப் பணியாற்றிய பெருமைக்குரியவர். அதுமட்டுமன்றி, ராணுவப் பணிக்குப் பிறகு சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம் மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களின் ஆளுநராகவும் அவர் கடமையாற்றியுள்ளார்.
இங்குள்ள சுவாரசியமான விஷயம் என்னவென்றால், தந்தை கிருஷ்ணா மோகன் சேத் தலைமை தாங்கிய அதே புகழ்பெற்ற ‘சுதர்சன் சக்ரா கார்ப்ஸ்’ (Sudarshan Chakra Corps) படைப்பிரிவுக்குப் பின்னாளில் அவரது மகன் தீரஜ் சேத்தும் தலைமை தாங்கினார். இந்திய ராணுவ வரலாற்றிலேயே தந்தை, மகன் இருவருமே ஒரே முக்கியப் படைப்பிரிவுக்குத் தலைமை தாங்கியது மிகவும் அரிதான ஒரு நிகழ்வாகும். மேலும், இவரது தம்பி ரவ்னிஷ் சேத்தும் இந்திய கடற்படையில் ‘ரியர் அட்மிரல்’ (Rear Admiral) ஆகப் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
டாங்கிகளின் தளபதி: ஆர்மர்ட் கார்ப்ஸின் கம்பீரம்
கட்கவாஸ்லாவில் உள்ள புகழ்பெற்ற தேசிய பாதுகாப்பு அகாடமி (NDA) மற்றும் டெஹ்ராதூன் இந்திய ராணுவ அகாடமியில் (IMA) பயின்ற தீரஜ் சேத், 1986 டிசம்பரில் இந்திய ராணுவத்தின் மிக முக்கியப் பிரிவான ஆர்மர்ட் கார்ப்ஸின் (Armoured Corps – கவச வாகனப் படை) ‘2வது லான்சர்ஸ்’ (2nd Lancers – Gardner’s Horse) பிரிவில் அதிகாரியாகத் தனது பயணத்தைத் தொடங்கினார்.
இந்திய ராணுவ வரலாற்றில், 1997-ல் ஓய்வு பெற்ற ஜெனரல் சங்கர் ராய் சௌத்ரிக்குப் பிறகு, சுமார் 29 ஆண்டுகள் கழித்து கவச வாகனப் படையைச் சேர்ந்த ஒரு மூத்த அதிகாரி இந்திய ராணுவத்தின் மிக உயரிய ‘தளபதி’ (Chief of the Army Staff) பதவியை அலங்கரிக்கப் போவது இதுவே முதல்முறையாகும்.
போர்க்கள அனுபவங்களும் வியூகப் பதவிகளும்
கடந்த நான்கு தசாப்த காலப் பணியில், இந்தியாவின் பல்வேறு சவாலான எல்லைப் பகுதிகளிலும், உள்நாட்டுப் பாதுகாப்புப் மண்டலங்களிலும் தீரஜ் சேத் பணியாற்றியுள்ளார்.
-
எல்லைக் காவல்: பாலைவனப் பகுதியில் கவசப் படைப் பிரிவையும் (Armoured Regiment), மேற்கு எல்லையில் ஒரு கவச பிரிகேடையும் வழிநடத்தியுள்ளார்.
-
பயங்கரவாத ஒழிப்பு: ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத எதிர்ப்புப் படைப்பிரிவுக்குத் (Counter-Insurgency Force) தலைமை தாங்கி அமைதியை நிலைநாட்டப் பாடுபட்டார்.
-
இரண்டு கமாண்டுகள்: ஜெய்ப்பூரைத் தலைமையிடமாகக் கொண்ட ‘தென்மேற்கு கமாண்ட்’ (South Western Command) மற்றும் புனேயைத் தலைமையிடமாகக் கொண்ட ‘தெற்கு கமாண்ட்’ (Southern Command) ஆகிய இரண்டு முக்கிய கமாண்டுகளுக்குத் தலைமை தாங்கிய மிகச் சில ராணுவ அதிகாரிகளில் இவரும் ஒருவர். பாகிஸ்தான் எல்லையை எதிர்கொள்ளும் இந்த இரண்டு கமாண்டுகளையும் இவர் வெற்றிகரமாக வழிநடத்தியுள்ளார்.
-
டெல்லி ஏரியா தளபதி: 2023-ஆம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பை முன்னின்று வழிநடத்திய பெருமையும் இவருக்கு உண்டு.
சர்வதேச அளவில், அங்கோலாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப் பணிக்கான (UN Mission in Angola) செயல்பாட்டு அதிகாரியாகவும் இவர் பணியாற்றியுள்ளார்.
நவீன தொழில்நுட்பமும் ராணுவ நவீனமயமாக்கலும்
இந்திய ராணுவத்தின் எதிர்காலத் தேவைகளைக் கணித்து, அதை நவீன தொழில்நுட்பப் பாதையில் கொண்டு செல்வதில் தீரஜ் சேத் மிக முக்கியப் பங்காற்றியுள்ளார். ராணுவத் தலைமையகத்தில் ‘வியூகத் திட்டமிடல் மற்றும் திறன் மேம்பாட்டு இயக்குநரகங்களில்’ (Strategic Planning and Capability Development Directorates) பணியாற்றிய போது, ராணுவத்திற்கான புதிய ஆயுதக் கொள்முதல் மற்றும் நீண்டகாலப் பாதுகாப்புத் திட்டங்களை வகுப்பதில் தீவிரமாகச் செயல்பட்டார்.

குறிப்பாக, இவர் தெற்கு கமாண்ட் தளபதியாக இருந்தபோது, கவசப் படைப் பிரிவுகளுடன் ட்ரோன் (Drone) தொழில்நுட்பங்களை ஒருங்கிணைத்து ‘சவுர்யா ஸ்குவாட்ரன்’ (Shaurya Squadron) என்ற அதிநவீன முறையை அறிமுகப்படுத்திப் போர்க்கள வியூகத்தில் புதிய முத்திரையைப் பதித்தார். தற்போதைய நவீனப் போர்ச் சூழலில் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை இந்திய ராணுவம் எவ்வாறு கையாள வேண்டும் என்பதில் இவர் தெளிவான பார்விக் கொண்டவர்.
கல்வித் தகுதியும் உயரிய விருதுகளும்
ராணுவப் பணிகளில் மட்டுமல்லாமல், ராணுவக் கல்வியிலும் இவர் முதலிடம் பிடித்து சாதனை படைத்தவர். வெலிங்டனில் உள்ள பாதுகாப்புப் பணிகள் பணியாளர் கல்லூரியில் (DSSC) ‘சிறந்த ஆல்-ரவுண்ட் மாணவர் அதிகாரி’ (Best All Round Student Officer) விருதை வென்றார். பிரான்ஸ் நாட்டின் பாரிஸில் உள்ள புகழ்பெற்ற ‘கமாண்ட் அண்ட் ஸ்டாஃப்’ படிப்பை முடித்தவர். அமெரிக்காவில் பாதுகாப்பு கொள்முதல் மேலாண்மை திட்டத்திலும் பங்கேற்றுள்ளார்.
இவரது அசாத்திய ராணுவச் சேவை மற்றும் தேசப் பணியைப் பாராட்டி, இந்திய அரசு இவருக்குப் பின்வரும் மிக உயரிய விருதுகளை வழங்கி கௌரவித்துள்ளது:
-
பரம் விசிஷ்ட் சேவா பதக்கம் (PVSM)
-
உத்தம் யுத் சேவா பதக்கம் (UYSM)
-
அதி விசிஷ்ட் சேவா பதக்கம் (AVSM)
தற்போது ராணுவத்தின் துணைத் தளபதியாக (Vice Chief of the Army Staff) இருக்கும் லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத், ஜூன் 30 அன்று தளபதியாகப் பொறுப்பேற்றதும் முழு ‘ஜெனரல்’ அந்தஸ்தைப் பெறுவார். இவருடைய பதவிக் காலம் 2028 ஆகஸ்ட் 31 வரை நீடிக்கும் எனப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. உலகளவில் அதிவேகமாக மாறிவரும் புவிசார் அரசியல் மற்றும் எல்லைச் சவால்களுக்கு மத்தியில், இந்திய ராணுவத்தை இவர் வழிநடத்தவிருப்பது தேசப் பாதுகாப்பில் ஒரு புதிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.


