தியா – திரை விமர்சனம் =இப்படத்தின் ‘கரு’ எல்லோருக்கும் பிடிக்கும்!

தியா – திரை விமர்சனம் =இப்படத்தின்  ‘கரு’ எல்லோருக்கும் பிடிக்கும்!

புண்ணிய பூமி என்று சொல்லிக் கொள்ளும் நம்ம இந்தியத் திருநாட்டில் 2015-ம் ஆண்டில் மட்டும் 1.56 கோடி கருக் கலைப்புகள் நடந்துள்ளன. சரி பாதி கர்ப்பங்கள் திட்டமிடுதல் இன்றி நிகழ்கின்றன. இதுவே கருக்கலைப்பு சதவீதத்தை அதிகரிக்கிறது. இந்தியர்களில் சரிபாதி பேருக்கு ஆணுறையை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று தெரியாது என்றும் ஓர் ஆய்வு தெரிவித்து இதன் காரணமாகவே இந்தியாவில் மூன்று கர்ப்பங்களில் ஒன்று கலைக்கப்படுகிறது எனவும் தெரிவித்து. இருந்தது. காரணம் எதுவாக இருந்தாலும் இப்படி அநாயசமாக கலைக்கப்பட்ட ஒரு கரு ஆவியாகி ‘தியா’வாக வளர்ந்து நெத்தில் பொட்டில் அறையும் விதத்தில் சொல்லும் சமாச்சாரமே விஜய் இயக்கத்தில் வெளிவந்துள்ள ‘தியா படம்.

படத்தின் கதை மற்றும் விமர்சனத்திற்குள் நுழையும் முன் இயக்குநர் விஜய் நம்மிடம் பகிந்து கொண்ட ஒரு விஷயத்தை சொல்வது முக்கியமாகப்படுகிறது, அதாவது, “இந்த படத்தின் பெயர் ஆரம்பத்தில் கரு என்று தான் வைக்கப்பட்டிருந்தது. இதை முறைப்படி கவுன்சில், சேம்பர் உள்பட எல்லாவற்றிலும் புக் செய்தும் இருந்தேன். ஆனால் இந்த ஆண்டு தொடக்கத்தில் வேறு குழு ஒன்று இந்த படத்தின் பெயரை மாற்ற சொல்லியும், கரு என்ற பெயரை தாங்கள் புக் செய்ததாகவும் நீதி மன்றத்தில் வழக்கு பதிவு போட்டாங்க.  உடனே இந்தப் பட பிராஜக்டை எடுத்துகிட்ட லைகா நேமை சேர்த்து லைகாவின் கரு- என்று விளம்பரப்படுத்தினோம். அதே சமயம் கோர்ட்டில் இந்த வழக்கில் என் தரப்பு தான் வெற்றியும் பெற்றுள்ளது.

ஆனால் படம் ரிலீஸ் தேதி 27 என்று குறித்த பிறகு மீண்டும் அதே குழு இன்னொரு வழக்கு பதிவு செய்ததால் அதை எதிர் கொள்ள நேரமும் இஷ்டமில்லாததால் தான் படத்தின் பெயரை தியா என்று மாத்திவிட்டு, ரிலீஸ் செய்து விட்டோம்” என்றார்.

இனி படத்தின் கதையைப் பார்ப்போமா?

கல்லூரிக்கு போக வேண்டிய வயதில் காதல் வயப்ப்பட்டு விட்ட துளசி என்ற சாய்பல்லவியும் கிருஷ்ணா என்னும் நாகஷவுரியாவும் கட்டில் வரை போய் செய்யக் கூடாத தப்பை செய்து விட இதன் காரணமாக சாய்பல்லவி கர்ப்பமாகி விடுகிறார். இதையடுத்து இரு வீட்டாரும் நேருக்கு நேர் சந்தித்து ஆக்ரோஷமாக சண்டை போட்டு விட்டு பின்னர் சமாதானமாகி இதே ஜோடிக்கு கல்யாணம் செய்து வைக்க முடிவெடுக்கிறார்கள். அதே சமயம் வயிற்றில் உருவான கரு குழந்தையாகி பிறந்தால் சாய் பல்லவியின் எதிர்காலம் பாதிக்கும்.. அவள் டாக்டருக்கு படிக்க ரெடியா இருக்கிறாள்.. பையனும் அதுக்குள்ளே ஒரு பொசிசன் வந்து விடட்டும் என்று பேசி அக்கருவை கலைத்து விடுகின்றனர்.

அதை அந்த அம்மா-வான் சாய் பல்லவி விரும்பாத நிலையிலும் கலைக்கப் பட்ட கரு ஆவியாக வந்து தன்னைக் கலைக்க காரணமாக இருந்த தாத்தா , பாட்டி ,டாக்டர், பாட்டியின் தம்பி என்று எல்லோரையும் பழி வாங்குகிறாள் . கூடவே சாய்பல்லவியின் கணவர் நாகஷ்வுரியவையும் பழி வாங்க முயற்சி செய்ய, அதை சாய்பல்லவி கண்டறிந்து தடுக்க முயன்ற போது நடந்தது என்ன என்பதுதான் படத்தின் கதை

படத்தின் மெயின் கருவை சுமந்து அதை கனவிலேயே பெற்று, வளர்த்து, ஏங்கி, துடித்து, பதறி, பாசம் காட்டி, அழுது என தனக்கான கேரக்டரில் சாய் பல்லவி அம்புட்டு பொருந்தமாய் மிளிர்கிறார். அதே சமயம் நாயகன் நாகஷவுரி வட இந்திய சாயலில் இருப்பதும் அதிலும் ஆரம்பக் காட்சியில் 19 வயசு என்று சொல்வதும் ஒட்டவே இல்லை. அதே சமயம் அம்மா என்ற ஒற்றைச் சொல்லை மட்டுமே வசனமாக பேசும் தியா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சிறுமி வெரோனிகா அரோரா, தனது கண்களால் கவர்ந்து தனி முத்திரை பதித்து இருக்கிறார். .

கேமராமேன் நீரவ் ஷா -வுக்கு ஸ்பெஷல் பூங்கொத்து கொடுத்தே ஆக வேண்டும்.. பேய் கதை என்பதால் அதீத லைட், இருட்டு என்று படம் பார்ப்போரின் பார்வையை பரிசோதனைக்குட் படுத்தாமல் ரொம்ப நீட்டாக ஓளிப்பதிவை வழங்கி இருக்கிறார். சாம் சி எஸ் இசைக்கு இப்போது தனி மவுசு வந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் டைட்டில் சாங் தொடங்கி ஆவி-யின் இருப்பை வெளிக்காட்டும் தீம் மியூசிக் வரை தன் பங்கை தனி கவனத்துடன் கொடுத்து சபாஷ் வாங்கி இருக்கிறார்.

எஸ்.ஐ. வரும் ஆர்.ஜெ. பாலாஜி ஆரம்பத்தில் பேக்குத்தனமாக நடத்து வெறுபேற்ற நினைப்பதும் சரி.. கிளைமாக்சில் ரொம்ப புத்திசாலியாய் நடந்து கொள்வதாக காட்டுவதும் சரி.. கொஞ்சம் கூட ஒட்டவில்லை. மற்றபடி நடித்துள்ள சகலரும் மிகைப்படாமல் வந்து போனதே படத்தில் தனி பலம்.

ஆரம்பத்தில் சொன்னது போல் எடுத்து கொண்ட கரு -வை ஆவியாக்கி அது பழி வாங்கும் கதை யாக காட்டி இருப்பது தமிழுக்கு புதுசு. கூடவே நாடெங்கும் குறிப்பாக தற்போது தமிழகத்தில் அதிகரித்துள்ள கரு கலைப்புக்கான காரணம் எதுவாக இருந்தாலும் அதை கலைக்க வேண்டாமே என்பதை புது ஸ்டைலில் சொல்லி இருக்கும் விஜய் பாராட்டுக்குரியவர் ஆகிறார். அப்படின்னா குறையே இல்லையா?-ன்னு கேட்டா  இருக்குது – ஆனால் அதெல்லாம் லாஜிக் மீறல் என்ற கேட்டகிரியில் போய் விடும்.

மொத்தத்தில் இந்த ’தியா’ வின் கரு எல்லோருக்கும் பிடிக்கும்!

மார்க் 5 / 3.5