வெள்ளிவிழா கொண்டாடும் குமரி வள்ளுவர் சிலை- அரிய தகவல்கள்!
தமிழகத்தின் கடைக் கோடியில் உள்ள கன்னியாகுமரியின் கடலுக்கு நடுவில், நீர் மட்டத்திலிருந்து 30 அடி உயரமுள்ள பாறை மீது, 133 அடி உயரத்தில் திருக்குறள் எழுதிய திருவள்ளுவருக்குச் சிலையமைத்து, அச்சிலை 2000 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் நாளில் அப்போதைய முதல்வர் கருணாநிதியால் திறந்து வைக்கப்பட்டது. அந்த வகையில் 2024 ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் 31 ஆம் நாளுடன் 24 ஆண்டுகள் நிறைவடைந்து 25 ஆம் ஆண்டில் வெள்ளிவிழாவைக் கொண்டாடவிருக்கிறது. இதனைத் தொடர்ந்து, டிசம்பர் 30 மற்றும் 31 ஆம் நாட்களில் வெள்ளிவிழாக் கொண்டாட்டம் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்து நடத்துகிறது.

இந்த திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டதன் வரலாறு இதோ:
தமிழ்நாடு அரசு சார்பில், கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை அமைக்கப்படும் என்று 1975 டிசம்பர் மாதம் முதல் அமைச்சர் கருணாநிதி சட்டசபையில் அறிவித்தார். அதை அடுத்து விவேகானந்தர் நினைவு மண்டபம் நிறுவிய ஏக்நாத் ரானடே, அதனருகே உள்ள பாறையில் திருவள்ளுவருக்குச் சிலை வைக்கலாம் எனப் பரிந்துரைத்து முழுத் திட்டம், வரைபடம் மற்றும் மதிப்பீட்டை அப்போதைய முதல்வர் மு. கருணாநிதியிடம் கொடுத்தார். 1975 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் திருவள்ளுவர் சிலை அமைக்கத் திட்டமும் அறிவிக்கப்பட்டது.
அத் திட்டம் குறித்து 1976, ஜனவரி 1ம் தேதி முரசொலி நாளிதழில், “பத்து லட்சம் ரூபாய் செலவில் முக்கடல் கூடும் குமரி முனையில் வள்ளுவர் சிலை” என்ற தலைப்பில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதிலும், “கன்னியாகுமரி முனையில் விவேகானந்தர் பாறைக்கு எதிரே உள்ள மற்றொரு பாறையில் 105 அடி உயரமுள்ள திருவள்ளுவர் சிலை 10 லட்ச ரூபாய் செலவில் அரசின் சார்பில் வைக்கப்பட அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது” என்று வந்தது. ஆனால், இம்முடிவு செய்யப்பட்ட சில நாட்களில் திமுக அரசு கலைக்கப்பட்டு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
இதற்குப் பிறகு 1977ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொதுத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று எம்.ஜி.ஆர். முதலமைச்சரானார். அச்சூழலில்தான் 1979 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15 ஆம் தேதி அப்போதைய ஆளுநர் பிரபுதாஸ் பட்வாரி, பிரதமர் மொரார்ஜி தேசாய் தலைமையில், எம்.ஜி.ஆர் கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை அமைக்க அடிக்கல் நாட்டினார். ாலும் அதன் பிறகு சிலை அமைக்கும் பணி எதுவும் நடைபெறாமல் தள்ளிப் போய்க் கொண்டேயிருந்தது. எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பின்பு, 1989 ஆம் ஆண்டில் மூன்றாவது முறையாக முதலமைச்சரான மு. கருணாநிதி ஆட்சியில், 1990 முதல் 1991 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் சிலை அமைப்பதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

மேலும் வி.கணபதி என்பவரின் தலைமையில் வள்ளுவர் சிலை செதுக்கும் பணி (1990) தொடங்கப்பட்டது .அதன் பிறகு மீண்டும் திமுக ஆட்சி கலைக்கப்பட்டு, 1991ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று ஜெயலலிதா முதலமைச்சரானார்.இதை அடுத்து மீண்டும் 1996 முதல் 2001ம் ஆண்டு வரை கலைஞரின் ஆட்சி நடந்தது. அந்த ஆட்சிக் காலத்தில் 1998-99ம் ஆண்டு நிதி அறிக்கை குறித்த உரையில் திருவள்ளுவர் சிலை தொடர்பான அறிவிப்புகள் இடம் பெற்று 1997 ஆம் ஆண்டில் திருவள்ளுவர் சிலையின் கட்டுமானப் பணிகள் மீண்டும் புத்துயிர் பெற்று பணி விரைவு படுத்தப்பட்டது. அதன் பின்னர், 2000 ஜனவரி 1 ஆம் நாளில், அப்போதைய முதல்வர் மு. கருணாநிதி சிலையைத் திறந்து வைத்தார்.ஆக1975 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் திருவள்ளுவர் சிலை அமைக்க திட்டம் அறிவிக்கப்பட, 2000 ஜனவரி 1 ஆம் நாளில்தான் அது பூர்த்தியாகி, சிலை திறந்து வைக்கப்பட்டது!
🌈இந்த திருவள்ளுவர் சிலை அமைக்கத் தேவையான கற்களை எடுத்துச் செல்ல கொச்சியிலிருந்து ‘பாண்டூன்’ என்ற படகு ஒன்று வாங்கப்பட்டது.
🌈திருவள்ளுவர் சிலை நிறுவுமிடத்திற்கான ஆதார பீடம் அமைப்பதற்காக, மொத்தம் 3,681 கற்கள் பயன்படுத்தி பீடம் அமைக்கப்பட்டது.
🌈மொத்தம் 6.14 கோடி செலவில் பணியாளர்கள், சிற்பிகள், உதவியாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர் என்று 150-க்கும் மேற்பட்டவர்கள் நாளொன்றிற்கு 16 மணி நேரம் உழைப்பில் இச்சிலை உருவானது.

🌈சிலையின் இடுப்பு வளைவு சற்றுச் சவாலாக இருந்தாலும் நவீன அறிவியல் துணையோடு வாஸ்து சாஸ்திரப்படி இதனை மர மாதிரி உருவாக்கி அதன் எடை மையத்தை அளந்து அதன் பின்னர் கட்டப்பட்டது.
🌈கன்னியாகுமாரி, அம்பாசமுத்திரம் மற்றும் சோழிங்கநல்லூர் என மூன்று சிலைக் கூடங்களில் பணிகள் நடைபெற்றன. அம்பாசமுத்திரத்திலிருந்து 5000 டன் எடை கொண்ட கற்களும், சோழிங்கநல்லூரிலிருந்து 2000 டன் தரமான கருங்கற்களும் வந்தன. 13 அடி நீளமும் 15 டன் எடையும் கொண்ட பெரிய கற்கள் மட்டும் 3,681 ஆகும். மற்றவை மூன்றிலிருந்து எட்டு டன் எடை கொண்டவை.
🌈காது, மூக்கு, கண், வாய், நெற்றி பகுதிகளுக்கான கற்கள் கையால் செதுக்கப்பட்ட ஒரே கற்களாகும்.
🌈பனை மரமும், சவுக்கு மரமும், இரும்புக் கம்பிகளும், சாரம் கட்டப் பயன்பட்டது. மொத்தம் 18,000 சவுக்கு மரங்கள் இரண்டு சரக்குந்து கொள்ளளவு கொண்ட கயிற்றால் முழுச் சாரமும் கட்டப்பட்டது.
🌈மேலும் திருவள்ளுவர் சிலை பல கற்களைக் கொண்டு கட்டப்பட்ட பல மாடிக் கட்டிடம் போன்ற அமைப்பு கொண்டதாகும். உலகில் இதுபோன்ற கருங்கற்களால் ஆன சிலை கிடையாது.
🌈சிலையினுள் 130 அடி உயரம் வரை வெற்றிடம் உள்ளது. இந்த வெற்றிடம் சிலையின் ஸ்திரத் தன்மையை உறுதிப்படுத்தும் நுட்பமுடையது . கல்லால் ஆன உத்திரங்களும், கட்டாயங்களும் பரவப்பட்டு சிலை எப்பக்கத்திலும் சாய்ந்து விடாது நேரே நிற்குமாறு உறுதி செய்யப்பட்டுள்ளது.
🌈பீடத்தின் 38 அடி உயரமானது திருக்குறளின் அறத்துப்பாலின் 38 அதிகாரங்களையும், பீடத்தின் மேல் நிற்கும் 95 அடி உயரச் சிலையானது திருக்குறளின் பொருள் மற்றும் இன்பத்துப்பாலின் 95 அதிகாரங்களையும் குறிப்பதாகத் திகழ்கின்றது.
🌈மண்டபத்தின் உட்புறச் சுவற்றில் ஒவ்வொரு அதிகாரத்திலிருந்து ஒரு குறள் வீதம் 1330 குறட்பாக்கள் தமிழிலும் அவற்றுக்கு நிகராக ஆங்கில மொழி பெயர்ப்பிலும் பொறிக்கப்பட்டுள்ளன.

சிலை குறித்த மேலும் சில குறிப்புகள்
1. மொத்த சிலையின் உயரம் – 133 அடி
2. சிலையின் உயரம் – 95 அடி
3. பீடத்தின் உயரம் – 38 அடி
4. சிலையின் உருவாக்கம் – 3 டன் முதல் 8 டன் வரை எடையுள்ள 3681 கருங்கற்களைக் கொண்டு நிறுவப்பட்டுள்ளது.
5. சிலையின் மொத்த எடை – 7,000 டன்
6. சிலையின் எடை – 2,500 டன்
7. பீடத்தின் எடை – 1,500 டன்
8. பீடத்தைச் சுற்றி அமைந்துள்ள மண்டபத்தின் எடை – 3,000 டன்
சிலை அளவுகள்
1. முக உயரம் – 10 அடி
2. கொண்டை – 3 அடி
3. முகத்தின் நீளம் – 3 அடி
4. தோள்பட்டை அகலம் -30 அடி
5. கைத்தலம் – 10 அடி
6. உடம்பு (மார்பும் வயிறும்) – 30 அடி
7. இடுப்புக்குக் கீழ் தொடை மற்றும் கால் – 45 அடி
8. கையில் ஏந்திய திருக்குறள் ஏட்டின் நீளம் – 10 அடி
* உப்புக் காற்றிலிருந்து சிலையைப் பாதுகாக்க எப்போசைட் என்ற ரசாயனக் கலவை நான்காண்டுகளுக்கு ஒருமுறை பூச வேண்டும் என்று ஸ்தபதி கணபதி பரிந்துரைத்தார். மேலும், சிலை முழுவதும் படிந்துள்ள உப்பை உறிஞ்ச காகிதக்கூழ் பூசப்பட்டு உப்பு நீக்கப்பட்டு இச்சிலை பராமரிக்கப்படுகிறது.
* 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் நாளில் ஏற்பட்ட சுனாமியின் போதும், நிலநடுக்கத்தின் போதும், எவ்விதப் பாதிப்புமின்றி இச்சிலை உறுதியாக இருந்து வருகிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
நிலவளம் ரெங்கராஜன்


