கமலி From நடுக்காவேரி – விமர்சனம்!
தமிழ் சினிமா முழுமையாக வளர்ச்சி அடைந்த பின்னர் வெளியான படங்களில் மினிமம் 30 சதவீதம் கல்லூரி வாழ்க்கை மற்றும் டீன் ஏஜ் லவ் குறித்தான கதைகள் கொண்டே வந்து இருக்கின்றன. அப்படி ரிலீஸான படங்களின் இயக்குநர்கள் எல்லாம் பார்த்தால் வெட்கி தலைகுனியும்படியான கதைக் களத்துடன் தற்போது வந்திருப்பதுதான் ‘கமலி From நடுக் காவேரி’ படம். வழக்கம் போல் சில குறைபாடுகள் இருந்தாலும் இக்காலக் கட்டத்துக்கு மிகவும் தேவையான பெண் கல்வி, நுழைவுத் தேர்வு அரசியல் என்பதை எல்லாம் மையமாக கொண்டு கதை அமைத்த ராஜசேகர் துரைசாமிக்கும், தயாரித்த துரைசாமிக்கும் தனிப் பாராட்டுகளை தெரிவித்தே ஆக வேண்டும்.
நடுக்காவேரி -அப்படீங்கற வில்லேஜில் +2 படிக்கும் ஆனந்தி, ஸ்டேட் ஃபர்ஸ்ட் வந்த ரோகித் பேட்டியை டீவியில்.கண்டு ரோகித்தை காதலிக்க தொடங்கி அவரை அருகில் போய் லவ் செய்யலாம் என்பதற்காகவே சென்னை ஐஐடியில் படிக்க ஆசைப்படுகிறார். ஆனால் இன்றைய கிராமப் புற இளசுகளை புறந்தள்ளும் நோக்கில் வடிவமைக்கப்பட்ட ஐஐடி நுழைவுத்தேர்வுக்கு ஆனந்தி தயாராகி ஐஐடியில் சேர்ந்து தான் பிறந்த கிராமத்துக்கே புது வெளிச்சம் பாய்ச்சியது எப்படி? கூடவே ரோகித்தை மீட் பண்ணி தன் காதலை சொன்னாரா? என்பதுதான் கதை.
நேற்று வரை ‘கயல்’ ஆனந்தியாக இருந்தவரே இதில் கமலி-யாகி ஸ்கோர் செய்திருக்கிறார். கனவுப் பார்வையும், கள்ள விழிகளுமாக ஏகப்பட்ட பாவனைகளால் ரசிக்க வைக்கிறார்
ஐஐடி மாணவராக நடித்திருக்கும் ரோகித் செராப் நல்ல தேர்வு. பிரதாப் போத்தன் கேரக்டரை உணர்ந்து தன் பங்களிப்பை போதுமான அளவு வழங்கி சபாஷ் சொல்ல வைக்கிறார். இமான் அண்ணாச்சி, அழகம்பெருமாள் எல்லாம் பர்ஃபெக்ட்.
கேமராமேன் ஜெகதீஷன் லோகயன் தன் அனுபவத்தால் அழகான கிராமத்துக்கு பயணம் சென்ற அனுபவத்தோடு, ஐஐடி-க்குள் நுழைந்த ஃபீலிங்கையும் கொடுக்கிறார். தீனதயாளனின் பாடல்கள் சுமார். பின்னணி இசை படத்திற்கு ஏற்ப பயணிக்கிறது.
பக்காவான ஹீரோயின் மற்றும் கல்வி சார்ந்த கதை என்றாலும், அநாவசியமான உரையாடல் ஏதுமில்லாமல் படம் பார்ப்பவர்களுக்கு கொஞ்சம் கூட போர் அடிக்காத வகையில் படத்தை கொண்டு போயிருக்கும் டைரக்டர் ராஜசேகர் துரைசாமி எடுத்துக் கொண்ட கதையை இன்னும் நம்பகத்தன்மையுடன் சொல்லி இருக்கலாம்.
ஆனாலும் இந்த கமலி From நடுக்காவேரி கண்டிப்பாய் சகலரும் குடும்பத்தோடு பார்க்க வேண்டிய பட லிஸ்டில் இணைந்து விட்டதென்பதே நிஜம்
மார்க் 3.75/5