June 7, 2023

நாசாவின் பெர்சவரன்ஸ் விண்கலம் செவ்வாய் கிரகத்தில் தரை இறங்கியது!

நாசாவின் பெர்சவரன்ஸ் என்ற விண்கலம் வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தில் தரை இறங்கியது என நாசா தெரிவித்துள்ளது.

மர்ம கிரகமாக உள்ள செவ்வாய் கிரகத்தில் கடந்த காலங்களில் உயிரினங்கள் வாழ்ந்ததா என்பதை கண்டறிய, அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா, நீண்ட காலமாக முயற்சி செய்து வருகிறது. இந்த ஆய்வுக்காக ‘பெர்சவரன்ஸ்‘ என்ற ரோவர் விண்கலத்தை கடந்தாண்டு ஜூலை 30-ந்தேதி நாசா அனுப்பியது.

செவ்வாயின் மேற்பரப்பை ஆய்வு செய்து, அங்கிருந்து மண், கற்களின் மாதிரிகளை இந்த விண்கலம் சேகரித்து ஆய்விற்காக அமெரிக்கா கொண்டு வரப்படும். இதன் மூலம் செவ்வாய் கிரகத்தில் முன்னாளில் உயிரினங்கள் வாழ்ந்துள்ளனவா என்று தகவல் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், செவ்வாய் கிரகத்தின் வெளிப்பரப்பை, விண்கலம் நேற்று நெருங்கியதால், நாசா விஞ்ஞானிகள் மட்டுமல்லாது இந்த நிகழ்வை இந்தியா, உள்பட பல உலக நாடுகள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தனர். இதையடுத்து 7 மாத பயணத்திற்கு பிறகு ‘பெர்சவரன்ஸ்’ விண்கலம் அனுப்பிய தகவலின்படி, அது தற்போது வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கி விட்டது என்று தெரியவந்தது. மேலும் செவ்வாய் கிரகத்தில் ‘பெர்சவரன்ஸ்’ விண்கலம் எடுத்த புகைப்படத்தையும் நாசா ட்விட்டரில் வெளியிட்டுள்ளது.

இந்த மாபெரும் சாதனை குறித்து நாசாவின் தலைமை நிர்வாகி ஸ்டீவ் ‘அற்புதமான அதே நேரம் நம்பமுடியாத ஒரு நாள். சவாலான சூழ்நிலைகளில் விஞ்ஞானிகள் செய்திருக்கும் சாதனை பெருமைப்பட அமைந்திருக்கிறது. விண்கலம் தரை இறங்கிய ஒரு மணி நேரத்திற்குப் பிறகு தொலைபேசியின் மூலம் தொடர்பு கொண்ட அமெரிக்க அதிபர் ஜோ பைடன் விஞ்ஞானி களுக்கு வாழ்த்து தெரிவித்தார். எங்களால் முதலில் நம்பவே முடியவில்லை. அதிபரின் வாழ்த்து எங்கள் அனைவருக்கும் கூடுதல் உற்சாகம் அளித்திருக்கிறது.,’என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்..