நம்ம இண்டியன் ரயில்வே வழங்கற உணவு வகைகள் ’உவ்வ்வே’! – சி ஏ ஜி அறிக்கை
பிரபல எழுத்தாளர் எஸ் . ராமகிருஷ்ணன் முன்பு ஒரு முறை, “இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய ரயில்களில் தொடர்ந்து பயணம் செய்து கொண்டிருப்பவன் என்ற முறையிலும் இந்தியாவின் 16 ரயில்வே மண்டலங்களிலும் பயணம் செய்திருப்பவன் என்ற முறையிலும் நெடுநாட்களாக எனக்குள்ளே இருக்கும் தீராக்குறை, ரயிலில் தரப்படும் உணவு. ரயில் பயணிகளுக்கு என்றே மோசமான உணவுகளைத் தயாரிக்கிறார்கள் போலும். இட்லி வாங்கினால் ஒன்றைவிட்டு ஒன்றைப் பிரிக்க முடியாது. சட்னி, ஒரே உப்பாக இருக்கும். நாற்றம் அடிக்கும். தோசை என்றால் அது வளைந்து நெளிந்து உருண்டை போலாகியிருக்கும். காகிதம் போல சுவையே இல்லாமலிருக்கும். பூரியைப் பிய்த்துத் தின்பதை உடற்பயிற்சியாக மேற்கொள்ள வேண்டும். சாப்பாடு என்றால் அதற்கு தரப்படும் சோறு, சாம்பார், கூட்டு- பொறியல் வகைகள் வாயில் வைக்க முடியாது.

இவ்வளவு ஏன் ஒரு தேநீர் கூட சர்க்கரை பாகு போன்ற ஒன்றைத்தான் தருவார்கள். இத்தனை லட்சம் மக்கள் பயணம் செய்யும் ரயிலில் இவ்வளவு மோசமான உணவு தரப்படுவது ஏன்? ஒவ்வொரு முறையும் யாரோ சிலர் புகார் செய்யத்தான் செய்கிறார்கள், நடவடிக்கை எடுக்கப்படுவதாக ரயில்வே சொல்கிறது. ஆனால், ரயில்வே உணவின் தரம் ஆண்டுக்கு ஆண்டு மோசமாகிக் கொண்டுதான் போகிறது. ரயிலில் தரப்படும் உணவு வகைகளைக் கண்காணிப்பதற்கு என சுகாதார அதிகாரிகள் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் என்ன நடவடிக்கை எடுத்தார்கள் என்று இதுவரை யாருக்கும் தெரியாது” என்றெல்லாம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் நம் இந்தியன் ரயில்வே தன் பயணிகளுக்கு வழக்கும் உணவு மனிதர்கள் உண்பதற்கு தகுதியானதே கிடையாது என தலைமை தணிக்கைக் குழு (சிஏஜி) தன்னுடைய அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளது பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது. மேலும் இந்தியன் ரயில்வேயின் கேட்ரிங் சர்வீஸ் நிர்வாகத்தில் பல ஓட்டைகள் இருப்பதையும் சிஏஜி அறிக்கை குறிப்பிட்டு காட்டிஉள்ளது. குறிப்பாகச் கேட்ரிங் சர்வீஸில் இந்தியன் ரயில்வேயின் மோசமான நிர்வாகத்தை சுட்டிக்காட்டியுள்ள சிஏஜி, தரமற்ற உணவு மற்றும் ஏகபோகமயமாதல் ஆகியவை தரத்தில் சமரசத்திற்கு வழிவகை செய்து உள்ளதாக குற்றம் சாட்டி உள்ளது.
சிஏஜி அறிக்கையில் வெளியான தகவல்களின் சாராம்சம்:
* தணிக்கை குழு இணைந்து நடத்திய ஆய்வில் சுகாதாரம் தொடர்பானவற்றில் திறமையின்மை மற்றும் மோசடிகள் வெளிப்பட்டு உள்ளது. ரயில்வேயின் 75 சதவித பயணிகள் உணவுகள் சுகாதாரம் மற்றும் சுத்தம் என்பது சராசரி மற்றும் மோசமானது என்ற் நிலை என்பதையே உணர்கிறார்கள்.
* ரயில்வே நிலையங்கள் மற்றும் ரயில்களில் வழங்கப்படும் உணவுப் பண்டங்களானது மனிதர்கள் உண்பதற்கு தகுதியற்றது என்ற அதிர்ச்சிகரமான தகவலை சிஏஜி தன்னுடைய அறிக்கையில் தெரிவித்து உள்ளது.
* சிஏஜி குழு ஆய்வு செய்ததில் ரயில் நிலையங்களில் வழங்கப்படும் பழ ஜூஸ், பிஸ்கட்ஸ் மற்றும் பல்வேறு பால் குளிர்பானங் கள் எதுவும் மனிதர்கள் சாப்பிடுவதற்கு தகுதியற்றது என தெரியவந்து உள்ளது.
* அசுத்தமான உணவு பொருட்கள், மறுசுழற்சி உணவுப் பொருட்கள், காலாவதியான பேக்கேஜ் உணவுப்பொருட்கள் மற்றும் பாட்டில்கள், அங்கீகாரம்பெறாத குடிநீர் பாட்டில்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு உள்ளது மற்றும் இவைகளை ரயில் நிலையங்கள் மற்றும் ரெயில்களில் விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது என சிஏஜி தெரிவித்து உள்ளது.
* நாட்டில் உள்ள 11 ரயில்வே மண்டலங்களில் 21 ரயில் நிலையங்களில் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் கிடையாது. காப்பி, டீ மற்றும் சூப் போன்றவை தயாரிப்புக்கு மோசமான தண்ணீர் 22 ரயில்களில் பயன்படுத்தப்படுகிறது.
* உணவுப்பொருட்கள் தயாரிப்புக்கு பயன்படுத்தப்படும் தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டது கிடையாது. பொதுவான ரயில்வே தண்ணீரே சில ரயில்களில் உணவுப்பொருட்கள் தயாரிப்புக்கு பயன்படுத்தப்படுகிறது. 32 ரயில் நிலையங்களில் சமையல் அறையில் கை உறை மற்றும் தலை கவசம் அணிவது கிடையாது.
* ஆய்வின் போது உணவுப்பொருட்கள் மோசமாக உள்ளது, பூச்சிக்கள் பறந்ததும் காணப்பட்டு உள்ளது. மூன்று ரயில் நிலையங்களில் இதுபோன்ற பூச்சிகளிடம் இருந்து உணவை பாதுகாக்க மூடி வைக்கப்படுவது கிடையாது, தூசி காணப்படுகிறது. துரந்தோ எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்களில் சரக்குகள் வைக்கப்படும் அறைகளில் எலிக்கள், கரப்பாண்பூச்சிகள் உள்ளது.
* லக்னோ – ஆனந்த் விகார் டுபுள் டக்கர் ரயிலில் பயணி ஒருவர் கட்லெட்டிற்கு ஆர்டர் கொடுத்து உள்ளார், அவருக்கு இரும்பு ஆணியுடன் கொடுக்கப்பட்டு உள்ளது.
* கான்பூர்-டெல்லி எக்ஸ்பிரஸ் உட்பட ரயில்களில் சமையல் அறையில் விற்பனை ஆகாத புரோட்டாக்கள் மறுசுழச்சி செய்யப்படுகிறது. புரோட்டக்கள் மோசமான உணவுகள் மறுசுழச்சி செய்யப்படவில்லை என்பதை ஆய்வு செய்ய இயந்திர பரிசோதனை கிடையாது.
* புகார்களை சரிசெய்யும் அமைப்பானது செயல் இழந்து காணப்படுகிறது. புகார்களின் எண்ணிக்கையும் குறையவில்லை, நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதிகமான புகார்கள் கேட்ரிங் சர்வீஸ் குறித்தே வருகிறது. ரயில்களில் உணவுப்பொருட்கள் அதிக விலைக்கு விற்பனை மற்றும் தரமற்ற உணவுகள் குறித்தே வந்து உள்ளது என சிஏஜி தன்னுடைய அறிக்கையில் தெரிவித்து உள்ளது.


