’ஹரி ஹர வீரமல்லு’ – விமர்சனம்!

’ஹரி ஹர வீரமல்லு’ – விமர்சனம்!

வன் கல்யாண் நடிப்பில், முகலாயர் காலப் பின்னணியில் உருவாகியுள்ள ‘ஹரிஹர வீரமல்லு’ திரைப்படம், வரலாற்று சாகசங்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு பீரியட் ஆக்‌ஷன் படமாக வெளியாகியுள்ளது. 1650-களில் நடக்கும் கதையில், இந்தியாவில் இருந்து திருடப்பட்ட கோஹினூர் வைரத்தை மீட்டு வர, வீர மல்லு (பவன் கல்யாண்) எனும் வரலாற்று நாயகன் மேற்கொள்ளும் பயணமும், அதில் அவன் எதிர்கொள்ளும் சாகசங்களும், தர்மத்திற்காகப் போராடுவதும் சொல்லப்பட்டிருக்கிறது.

கதை மற்றும் திரைக்கதை:

படம் ஒரு சுவாரஸ்யமான கருத்தோடு தொடங்குகிறது. அதாவது 1600 ஆம் ஆண்டு காலப் பின்னணியில் விரியும் ஒரு கதை. அடிமைப்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒரு குழந்தை ஆற்றில் அடித்துச் செல்லப்படுகிறது. அக்குழந்தையை சத்யராஜ் காப்பாற்றி, தன் சொந்த மகன் போல் வளர்க்கிறார். சத்யராஜ், இந்து மதத்தின் பெருமையையும் வரலாற்றையும் போதிக்கும் ஒரு குருகுலத்தை நடத்தி வருகிறார். காலப்போக்கில், அந்தக் குழந்தை வளர்ந்து வீர மல்லுவாக, அதாவது பவன் கல்யாணாக மாறுகிறது. வீர மல்லுவுக்கு வைரங்களைத் திருடுவதே தொழில். ஆனால், இந்தத் திருட்டின் மூலம் வரும் பணத்தைக் கொண்டு ஏழை மக்களின் பசியைப் போக்குகிறான். அவனது இந்தச் செயல் நிலச்சுவான்தாரர்கள் மற்றும் குறுநில மன்னர்கள் என அனைவரின் கவனத்தையும் ஈர்க்கிறது.

இது முஸ்லிம்களின் ஆதிக்கம் ஓங்கியிருந்த காலம். வடக்கில் செங்கோட்டையில் தனியரசு நடத்திவந்த ஔரங்கசீப், தனது மதத்தைப் பரப்பும் நோக்குடன் செயல்பட்டுவந்தான். இந்து மதத்தைச் சேர்ந்தவர்களைக் கண்டாலே தாக்குவதையே தனது குறிக்கோளாகக் கொண்டிருந்தான். அவரை நோக்கி பயணமாகிறான்  வீரமல்லு? அது ஏன்? என்னாச்சு? என்பதே இப்படக் கதை.

இந்த முதல் பாகம் பெரும்பாலும் வீர மல்லுவின் சாகசங்களை மட்டுமே மையமாகக் கொண்டிருக்கிறது. படத்தின் முக்கியமான போர் காட்சிகள், உச்சக்கட்ட சண்டைகள் என அனைத்துக்கும் ரசிகர்கள் அடுத்த பாகம் வரும் வரை காத்திருக்க வேண்டும் என்பது ஒரு பெரிய ஏமாற்றம்.

அதேசமய்ம் முதல் பாதி மெதுவாக நகர்கிறது. எம்.எம். கீரவாணியின் இசை சில இடங்களில் படத்தைக் காப்பாற்றுகிறது. கதை ஆங்காங்கே துண்டு துண்டாகத் தெரிந்தாலும், சில ஆக்‌ஷன் காட்சிகள் வீர மல்லுவின் வைரங்களைத் திருடும் திறமையையும், ஒடுக்கப்பட்டவர்களுக்காக அவன் போராடுவதையும் சிறப்பாகக் காட்டுகின்றன.

ஆனால், இரண்டாம் பாதியில் திரைக்கதை தள்ளாடுகிறது. முகச்சுளிப்பை ஏற்படுத்தும் வி.எஃப்.எக்ஸ் காட்சிகள், டப்பிங் பிரச்சினைகள் என பல குறைகள் வெளிப்படையாகத் தெரிகின்றன. படம் அவசரத்தில் முடிக்கப்பட்டு வெளியிடப்பட்ட உணர்வை ஏற்படுத்துகிறது.

பவன் கல்யாண் மற்றும் நடிப்பு:

பவன் கல்யாணின் நடிப்பு மற்றும் ஆக்‌ஷன் காட்சிகள் இந்தப் படத்தின் மிகப்பெரிய பலம். ஒரு மல்யுத்தக் காட்சி, பவன் கல்யாணின் தற்காப்புக் கலைப் பின்னணியை வெளிப்படுத்துகிறது. ஒரு சண்டைக் கலை நிபுணராக அவர் முன்னர் செயல்பட்ட அனுபவம், படத்தின் 18 நிமிட கிளைமாக்ஸுக்கு முந்தைய சண்டைக் காட்சிக்கு கூடுதல் வலு சேர்க்கிறது. ஆனால், இவற்றுக்கு இடையில் வரும் காட்சிகள் அனைத்தும் சுவாரஸ்யமற்று இருக்கின்றன.

வீர மல்லு ஒரு உள்ளூர் சூப்பர் ஹீரோவாக சித்தரிக்கப்பட்டுள்ளான் – காட்டு விலங்குகளை நேருக்கு நேர் சந்திப்பது, பின்னர் மனித-விலங்கு மோதல் குறித்து ஆலோசனை வழங்குவது என காட்சிகள் இருந்தாலும், கூர்மையான எழுத்து அல்லது நம்பகமான விஷுவல் எஃபெக்ட்ஸ் இல்லாததால் அது சரியாக ஒட்டவில்லை.

தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் சில சிக்கல்கள்:

பக்காவான எழுத்தோ, நம்பகமான வி.எஃப்.எக்ஸ் காட்சிகளோ இல்லாதது படத்தின் மிகப்பெரிய குறை. இரண்டாம் பாதியில் வரும் வி.எஃப்.எக்ஸ் மிகவும் சராசரியாக இருக்கிறது. டப்பிங் பிரச்சினைகள், அவசர கதியில் படத்தை முடித்து வெளியிட்டதன் குறைகளை வெளிப்படையாகக் காட்டுகின்றன.

கீரவாணியின் இசையில், பாடல்கள் பரவாயில்லை. ஆனால் பின்னணி இசையில் பெரும் இரைச்சல் என்று தெரியவில்லை.  முழு படத்திலும் இசை என்ற பெயரில்  சகல கருவியையும் உபயோகித்து காதை கிழிக்க வைத்துவிட்டார் கீரவாணி.

ஒளிப்பதிவு மிகப்பெரும் வேலை செய்திருக்கிறது. படத்தினை ஓரளவு தாங்கி பிடித்திருக்கும் தூணாக ஒளிப்பதிவு இருந்திருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை.

கடைசி ஒரு மணிநேரம் ‘தர்மத்திற்கான போர்’ என்பதை மையமாகக் கொண்டுள்ளது. இந்த பகுதி, தள்ளாடும் கதையைச் சமாளிக்க, மத உணர்வுகளை அதிகமாக நம்பியுள்ளது. இறுதிக் காட்சிகள் எஸ்.எஸ். ராஜமௌலியின் ‘ஆர்ஆர்ஆர்’ படத்தை நினைவுபடுத்துகின்றன. இருப்பினும், இந்தக் காட்சிகள் நம்பகத்தன்மையையோ அல்லது உணர்வுபூர்வமான தாக்கத்தையோ ஏற்படுத்தத் தவறிவிடுகின்றன.

ஒட்டுமொத்தப் பார்வை:

பவன் கல்யாண் ரசிகர்கள் இந்தப் படத்தைப் ஒருமுறை பார்க்கலாம். ஆனால், மற்ற ரசிகர்களுக்குப் படத்தில் பல குறைகள் தெரியும். கதை ஆரம்பத்தில் சுவாரஸ்யமாக இருந்தாலும், அதை முழுமையாகச் செயல்படுத்தத் தவறிவிட்டனர். ஒருவேளை இரண்டாவது பாகம் வந்தால், அதற்கு மிகக் கூர்மையான எழுத்தும், வலுவான இயக்கமும் தேவைப்படும். ஒட்டுமொத்தமாக, ‘ஹரிஹர வீரமல்லு’ ஒரு கலவையான விமர்சனங்களைப் பெறும் படமாகவே தெரிகிறது.

மார்க் 2.75.5

Related Posts

error: Content is protected !!