அமெரிக்க டெக் நிறுவனங்களுக்கு டிரம்ப் எச்சரிக்கை: இந்தியப் பணியாளர்கள் வேண்டாமாம்!
கூகுள், மைக்ரோசாஃப்ட் போன்ற உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் இந்தியர்கள் அதிக எண்ணிக்கையில் பணிபுரியும் நிலையில், அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் அந்த நிறுவனங்களுக்குக் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். வாஷிங்டனில் நடைபெற்ற AI உச்சி மாநாட்டில் பேசிய டிரம்ப், அமெரிக்காவின் தொழில்நுட்பத் துறையில் நிலவி வரும் “உலகமயமாக்கல்” நடைமுறைகளை கடுமையாகச் சாடினார்.

டிரம்ப் பேசியதாவது:
“நீண்ட காலமாக அமெரிக்காவின் தொழில்நுட்பத் துறை கடுமையான உலகமயமாக்கலைப் பின்பற்றியது. மற்ற நாடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் இந்த நடைமுறை, லட்சக்கணக்கான அமெரிக்கர்களின் வேலைவாய்ப்புகளைப் பாதித்தது. அமெரிக்காவின் மிகப்பெரிய டெக் நிறுவனங்கள், சீனாவில் தொழிற்சாலைகளை நிறுவி, அவற்றில் இந்தியாவிலிருந்து பணியாளர்களை வேலைக்கு அமர்த்தி, அமெரிக்காவின் சுதந்திரத்தைச் சீர்குலைத்துள்ளன.”
“அதே நேரத்தில், அமெரிக்கர்களைப் பணிநீக்கம் செய்ததும் நடந்தது. கூகுள், மைக்ரோசாஃப்ட், ஆப்பிள் போன்ற நிறுவனங்கள், அமெரிக்கா வழங்கும் சுதந்திரத்தைப் பயன்படுத்தி அதிக லாபத்தைச் சம்பாதிக்கின்றன. இனி அது நடக்காது.”
“அமெரிக்க நிறுவனங்கள் சீனாவில் தொழிற்சாலைகளைக் கட்டுவதையும், இந்தியர்களை வேலைக்கு எடுப்பதையும் நிறுத்திவிட்டு, உள்நாட்டிலேயே வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் அதிக கவனம் செலுத்த வேண்டும்” என்று டிரம்ப் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
டிரம்பின் இந்த கருத்துகள், அமெரிக்காவின் தொழில்நுட்பத் துறையில் பணியமர்த்தல் கொள்கைகள் மற்றும் உற்பத்தி முறைகளில் எதிர்காலத்தில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது, குறிப்பாக அமெரிக்க டெக் நிறுவனங்களில் பணிபுரியும் இந்தியர்கள் மற்றும் சீனாவில் செயல்படும் நிறுவனங்களுக்குக் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கருதப்படுகிறது.


