தமிழ் சினிமாவில் எண்பதுகளுக்குப் பிறகு இஸ்லாமியர்களைத் தொடர்ந்து வன்முறையாளர்களாகவும், தீவிரவாதிகளாகவும் சித்தரித்து வந்த ஒரு பொதுப் புத்தியை உடைத்தெறிந்து, அவர்களின் அசல் வாழ்வியலையும் எதார்த்தமான உணர்வுகளையும் திரையில் கொண்டு வந்துள்ள திரைப்படம் ‘ஹபீபி’. நேசம் எண்டர்டெயின்மெண்ட், ஜிகேஎஸ் ப்ரோஸ் புரொடக்ஷன்ஸ் மற்றும் ரோமியோ பிக்சர்ஸ் கூட்டுத் தயாரிப்பில், மீரா கதிரவன் இயக்கத்தில் வெளியாகி, ரசிகர்களிடம் பேராதரவை பெற்றுள்ள இத்திரைப்படத்தின் நெகிழ்ச்சியான ‘நன்றி தெரிவிக்கும் விழா’ சென்னையில் நடைபெற்றது.
இவ்விழாவில் படக்குழுவினருடன் திரையுலகின் முன்னணி இயக்குநர்கள் மற்றும் ஆளுமைகள் பலர் கலந்துகொண்டு, ‘ஹபீபி’ திரைப்படம் தமிழ் சினிமாவில் ஏற்படுத்தியிருக்கும் நூறாண்டு காலப் புரட்சியைப் பாராட்டிப் பேசினர்.
80களுக்குப் பிறகு மாறிய சினிமா அரசியல்… மீரா கதிரவனின் 6 ஆண்டுக்கால கனவு!
விழாவில் உணர்வுப்பூர்வமாகப் பேசிய பாடலாசிரியர் யுகபாரதி, தமிழ் சினிமாவில் இஸ்லாமியர்களின் சித்தரிப்பு குறித்துப் பல உண்மைகளைப் பகிர்ந்துகொண்டார்.
“உதவி இயக்குநராக இருந்த காலத்திலிருந்தே மீரா கதிரவனை எனக்குத் தெரியும். தமிழ் சினிமாவில் 80களுக்குப் பிறகு ஏன் இஸ்லாமியர்களைத் தொடர்ந்து தீவிரவாதிகளாகக் காட்டுகிறார்கள் என்ற விவாதம் ஒருமுறை எழுந்தது. அப்போது, அவர்களின் வாழ்வியலை மிக நெருக்கமாக அறிந்த ஒருவரால் மட்டுமே உண்மையான பதிவை கொண்டு வர முடியும் என்று கூறி, மீரா கதிரவனைப் படம் எடுக்கச் சொன்னார்கள். அப்படி அவர் மனதில் தாங்கிய கதையே இந்த ‘ஹபீபி’. 6 ஆண்டுகள் போராட்டத்திற்குப் பிறகு இன்று இது சினிமாவாக வென்றுள்ளது.”
அவரைத் தொடர்ந்து பேசிய பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா, வன்முறையைக் கொண்டாடும் இன்றைய காலகட்டத்தில், நம் அனைவரையும் ஆற்றுப்படுத்தும் ஒரு மருந்தாக ‘ஹபீபி’ வந்திருக்கிறது என்றும், வசூலிலும் இது போன்ற படங்கள் வென்றால்தான் இன்னும் பல நல்ல கதைகள் பிறக்கும் என்றும் குறிப்பிட்டார்.
தமிழ் சினிமாவின் ‘மெட்ராஸ்’ போல இஸ்லாமிய சினிமாவின் தொடக்கம் ‘ஹபீபி’!
விழாவில் கலந்துகொண்ட முன்னணி இயக்குநர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இந்தப் படம் தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு மைல்கல் என்பதை அழுத்தமாகப் பதிவு செய்தனர்.
-
இயக்குநர் ராஜூமுருகன்: “தமிழ் இலக்கியத்திலும், அரசியல் வரலாற்றிலும் இஸ்லாமியர்களுக்குப் மிகப்பெரிய பங்கு உண்டு. ஆனால் தமிழ் சினிமாவில் மட்டும் அது இத்தனை காலம் பிரதிபலிக்கவில்லை. மனிதர்களாக அவர்களின் உணர்வை அப்படியே திரையில் காட்டுவதுதான் உண்மையான சமூக சினிமா. தமிழ் சினிமாவின் தலித் சினிமாத் தொடக்கமாக ‘மெட்ராஸ்’ படம் அமைந்தது போல, இஸ்லாமிய சினிமாவின் தொடக்கமாக இந்த ‘ஹபீபி’ அமைந்துள்ளது. 100 வருடங்களுக்குப் பிறகு இந்த படம் மிகப்பெரிய திறப்பை ஏற்படுத்தியிருக்கிறது.”
-
தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி: “இஸ்லாமியர்களைத் தீவிரவாதிகளாகச் சித்தரித்ததில் சினிமாவிற்குப் பெரும் பங்கு உண்டு. அந்த வரலாற்றுப் பிழையை, வருத்தத்தைப் போக்க இந்த படம் வெல்ல வேண்டும். இதை ஒரு குறிப்பிட்ட மதத்திற்கான படமாகப் பார்க்காமல், நம் தமிழ் சமூகத்தின் ஒரு அங்கமாகப் பார்க்க வேண்டும்.”
-
இயக்குநர் தமிழ்: “முழு நீள இஸ்லாமியர் படம் தமிழ் சினிமாவில் எதார்த்தமாக வருவதற்கு 100 ஆண்டுகள் ஆகியிருக்கிறது. எந்தவொரு புனைவும் இல்லாமல் கடையநல்லூர் மக்களின் அசல் வாழ்க்கை முறையைத் திரையில் காட்டிய இயக்குநரின் தைரியத்திற்குப் பாராட்டுகள்.”
-
சித்த மருத்துவர் சிவராமன்: “தற்போது வரும் திரைப்படங்களில் இஸ்லாமியர்களைக் காட்டும் விதத்தினால் ஏற்பட்ட வருத்தத்திற்கு இந்தப் படம் ஒரு விடுதலையாக அமைந்துள்ளது” என்று தனது கடையநல்லூர் நண்பர்களின் நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார்.
“தனுஷ் என் கையைப் பிடித்துப் பாராட்டினார்” – உருகிய கஸ்தூரி ராஜா!

இப்படத்தில் ‘யூசுப்’ என்ற முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துப் பார்ப்பவர்களைக் கண் கலங்க வைத்த இயக்குநரும் நடிகருமான கஸ்தூரி ராஜா மேடையில் மிகவும் நெகிழ்ச்சியாகப் பேசினார்.
“இந்தப் படத்தில் யூசுப் கதாபாத்திரத்தில் நடித்தது எனக்கு இன்னொரு பிறவி எடுத்தது போல இருக்கிறது. நிஜத்திலும் நான் இஸ்லாமியராகவே மாறிவிட்டேனோ என்று தோன்றும் அளவுக்கு அந்தப் பாத்திரம் என் மனதிற்கு நெருக்கமாகிவிட்டது. படம் வெளியானதும் என் ஒட்டுமொத்த குடும்பத்தோடும் பார்த்தேன். என் மகள் விமல கீதா அழுதுவிட்டார். என் மகன் தனுஷ் படம் பார்த்துவிட்டு, ‘அப்பா, மிகக் கௌரவமான ஒரு படத்தில் நடித்துள்ளீர்கள்’ என்று பாராட்டினார். இந்த நல்ல பெயரை எனக்குப் பெற்றுத் தந்த இயக்குநர் மீரா கதிரவனுக்கு என் நன்றி. இந்தப் படம் சர்வதேச அளவில் பல விருதுகளைக் குவிக்கும்.”
110 வருட தமிழ் சினிமாவில் இதுவே என் முதல் படம்: இயக்குநர் மீரா கதிரவன்
நிகழ்வின் நிறைவாகப் பேசிய இயக்குநர் மீரா கதிரவன், தனக்கு வெளிச்சம் தந்த நல்ல உள்ளங்களுக்குத் தனது நன்றியைத் தெரிவித்தார்.
“110 வருட தமிழ் சினிமாவில் இதுதான் என்னுடைய உண்மையான முதல் படமாக இருக்க வேண்டும் என விரும்புகிறேன். ஏனெனில், இது என் சினிமா வாழ்க்கையின் முதல் நன்றி தெரிவிக்கும் விழா. கஸ்தூரி ராஜா சார் போன்ற மூத்த கலைஞர்கள் என்னை குரு என்று சொல்வது கூச்சமாக இருக்கிறது. எங்களின் நெருக்கடியான சூழலில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பணம் தந்து உதவினார். இயக்குநர் ராம் இந்த படத்தை தனது தோளில் தூக்கிச் சுமந்த பிறகுதான் இதற்கு இவ்வளவு பெரிய வெளிச்சம் கிடைத்தது. இஸ்லாமியர்கள் குறித்த பொதுப் பார்வையை இந்த ‘ஹபீபி’ மாற்றியிருக்கிறது என்பதே நான் பெற்ற ஆகப்பெரும் வெற்றி!”
நடிகை மாளவிகா மனோஜ், நடிகர் ஈசா, நடிகைகள் மலர், ஜெயஸ்ரீ, சன் சாகுல், எடிட்டர் மதி உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் தங்களுக்குக் கிடைத்த பாராட்டுகளுக்காக ஊடகங்களுக்கும் ரசிகர்களுக்கும் தங்களது நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொண்டனர். இரைச்சல்களுக்கு மத்தியில் நிசப்தமாய் வென்றிருக்கும் ‘ஹபீபி’ தமிழ் சினிமாவின் ஆரோக்கியமான எதிர்காலத்திற்கான ஆகச்சிறந்த சான்று!

