காந்தி டாக்ஸ் -விமர்சனம் = பேசும் படமா? வெறும் மௌனப் படமா?

காந்தி டாக்ஸ் -விமர்சனம் = பேசும் படமா? வெறும் மௌனப் படமா?

1987-இல் சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ் – கமல் கூட்டணியில் வந்த ‘பேசும் படம்’ இன்றும் நம் நினைவுகளில் நிழலாடக் காரணம், அதன் மௌனத்தில் இருந்த ஆழமான மொழி. ஆனால், பல தசாப்தங்களுக்குப் பிறகு அதே மௌனப் பட முயற்சியில் களம் இறங்கியிருக்கும் ‘காந்தி டாக்ஸ்’ (Gandhi Talks), ரசிகர்களைக் கவர்ந்ததா அல்லது கவலையில் ஆழ்த்தியதா? பார்ப்போம்.

தலைப்பிலேயே ஒரு சறுக்கல்!

முதலில் படத்தின் தலைப்பு. ‘காந்தி டாக்ஸ்’ (Gandhi Talks) என்பதற்கு காந்தியின் பேச்சு என்று படக்குழு நினைத்திருக்கலாம். ஆனால், உச்சரிப்பில் அது ‘காந்தி நாய்கள்’ (Gandhi Dogs) என்று பொருள் தருவதை அவர்கள் கவனிக்கத் தவறிவிட்டனர். ஆரம்பத்திலேயே தலைப்பு ஒருவித முகம் சுளிப்பை ஏற்படுத்துகிறது.

கதைக்களம்

மும்பை தாராவியில் ஏழ்மையான சூழலில் வசிக்கும் இளைஞன் விஜய் சேதுபதி. படுத்த படுக்கையாக இருக்கும் அம்மா, லஞ்சம் கொடுக்கப் பணமில்லாததால் வேலை கிடைக்காமல் தவிக்கும் அப்பா எனப் போராட்டமான வாழ்க்கை. காதலி அதிதி ராவ் மீது தீராத காதல். ஒரு கட்டத்தில், இந்த நாட்டில் காந்தியின் கொள்கைகளை விட, காந்தி படம் அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுகளுக்குத்தான் மதிப்பு அதிகம் என்பதைப் புரிந்து கொள்கிறார்.

மறுபுறம், பெரும் செல்வந்தரான அரவிந்த் சாமி (மோகன் போஸ்மேன்), எதிரிகளின் சூழ்ச்சியால் தனது சொத்துக்களையும், கனவுத் திட்டத்தையும் இழந்து கடன் சுமையில் தவிக்கிறார். விதிவசத்தால் அரவிந்த் சாமி வீட்டில் திருடச் செல்கிறார் விசே. அங்கு இருவரும் சந்திக்கும்போது, தங்கள் நிலைக்குக் காரணம் லஞ்சம் தான் என்பதை உணர்கிறார்கள். இறுதியில் பணமா அல்லது மனிதமா? எது வென்றது என்பதே கதை.

நடிப்பு: மௌனத்தின் பலம்

  • விஜய் சேதுபதி: வசனம் இல்லையென்றால் என்ன? கண்களாலேயே கதை பேசுகிறார். வழக்கம்போல எதார்த்தமான நடிப்பால் அப்ளாஸ் வாங்குகிறார்.

  • அரவிந்த் சாமி: எமோஷனல் காட்சிகளில் தனது அனுபவ முத்திரையைப் பதித்திருக்கிறார்.

  • அதிதி ராவ்: ஒரு அழகான ஓவியம் போல வந்து ஆச்சரியப்படுத்துகிறார்.

தொழில்நுட்பம்: ரஹ்மானின் ‘இசை’யும்.. கரணின் ‘ஒளி’யும்!

வசனங்கள் இல்லாத குறையைத் தீர்க்க ஏ.ஆர். ரஹ்மான் தனது இசையால் படத்தை முட்டுக்கொடுத்துக் காப்பாற்றுகிறார். விஜய் சேதுபதி – அதிதி இடையேயான காதல் பாடல் காட்சியமைப்பிலும் இசையிலும் டாப் கிளாஸ். ஒளிப்பதிவாளர் கரண் பி. ராவத், தாராவியின் குறுகிய சந்துகளையும் இரவு நேர அழகையும் தனது கேமரா கோணங்களால் ஒரு கவிதையாக மாற்றியிருக்கிறார்.

குறைகள் என்ன?

‘பேசும் படம்’ படத்தில் காட்சிகள் கதையை நகர்த்தும். ஆனால் இங்கு, நடிகர்கள் ஏதோ பேசத் தெரியாதவர்கள் போலச் சைகை செய்வதும், வாட்ஸ்அப் உரையாடல்கள் மூலம் பேசிக்கொள்வதும் திரைக்கதையின் ஈர்ப்பைக் குறைத்துவிடுகிறது. மௌனப் படத்திற்கான அந்தத் தனித்துவமான ஆழம் பல இடங்களில் மிஸ்ஸிங். “மாற்றத்தை உன்னில் இருந்து தொடங்கு” என்ற காந்தியத் தத்துவத்தைச் சொல்ல இன்னும் கொஞ்சம் அழுத்தமான காட்சிகளை வைத்திருக்கலாம்.

ஆந்தை தீர்ப்பு

பணம் மட்டுமே வாழ்க்கை இல்லை என்ற மெசேஜைச் சொல்ல முயன்றிருக்கும் இந்தப் படம், சில இடங்களில் மட்டுமே பேசுகிறது, பல இடங்களில் மௌனமாகவே கடந்து விடுகிறது.

மார்க்: 2.5 / 5

Related Posts