ஜி ஸ்கொயர் நிறுவனத்துக்கும் திமுகவின் முதல் குடும்ப உறுப்பினர்களுக்கும் சம்பந்தமே இல்லையாமில்லே!

ஜி ஸ்கொயர் நிறுவனத்துக்கும் திமுகவின் முதல் குடும்ப உறுப்பினர்களுக்கும் சம்பந்தமே இல்லையாமில்லே!

மிழ்நாட்டின் முன்னணி கட்டுமான மற்றும் நில விற்பனை நிறுவனமாக செயல்பட்டு வருகிறது ஜி ஸ்கொயர் நிறுவனம். கடந்த 2012ஆம் ஆண்டிலிருந்து செயல்பட்டு வரும் இந்நிறுவனமானது பெரிய அளவில் வருமானம் ஈட்டியிருப்பதாகவும், குறிப்பாக 2019, 2020 ஆண்டுகளில் 53 கோடியாக மட்டுமே இருந்த இந்நிறுவனத்தின் வருமானம் கடந்த இரண்டு ஆண்டுகளில் 33,000 கோடியாக வளர்ந்ததாகவும் கூறி, அது எப்படி வளர்ந்தது என்பது உள்ளிட்ட பல கேள்விகளை பாஜக தலைவர் அண்ணாமலை எழுப்பியிருந்தார். குறிப்பாக கடந்த 24ஆம் தேதி பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட சொத்து விவர அறிக்கையில், இந்நிறுவனம் தமிழகத்தில் மிகப்பெரிய ஊழலில் ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார். பாஜகவின் புகாருக்கு ஜி ஸ்கொயர் நிறுவனம் விளக்கமளித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறது..!

அதாவது ஜி ஸ்கொயர் நிறுவனம் திமுகவின் முதல் குடும்ப உறுப்பினர்களுக்கு சொந்தமானது கிடையாது என்றும், இந்நிறுவனம் குறித்து தமிழ்நாடு பாஜ தலைவர் அண்ணாமலை கூறிய தகவல்கள் அனைத்தும் உண்மைக்கு புறம்பானவை என்றும் ஜி ஸ்ெகாயர் நிறுவனம் கூறியுள்ளது. இதுகுறித்து, ஜி ஸ்கொயர் நிறுவனம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது இதோ:

தமிழ்நாடு பாஜ தலைவர் அண்ணாமலைக்கு, உங்களுடைய சமீபத்திய செய்தியாளர் சந்திப்பில் எண் 14, 3ஆவது மாடி, ஹாரிங்டன் அப்பார்ட்மெண்ட்ஸ், 98, ஹாரிங்டன் சாலை, சேத்துப்பட்டு, சென்னை -600031ல் இயங்கி வரும் எங்கள் நிறுவனமான ஜி ஸ்கொயர் ரியல்டர்ஸ் குறித்து நீங்கள் சில கருத்துக்களை முன் வைத்திருந்தீர்கள், அந்த சர்ச்சை கருத்துக்களுக்கான விளக்கமே இந்த கடிதம். எங்கள் நிறுவனத்தின் பின்னணி குறித்தும், தவறாக ஜோடிக்கப்பட்ட கருத்துகளால் எங்கள் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க விரும்புகிறோம். இந்த குற்றச்சாட்டுகள் வாடிக்கையாளர்கள், பங்குதாரர்கள், பணியாளர்கள் மற்றும் பொதுமக்களிடையே பல குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது எங்களின் வியாபாரத்தில் மறைமுக தாக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

பொதுமக்களுக்கும், உங்களுக்கும், செயல்பாடுகளின் வெளிப்படைத்தன்மை குறித்து புரிதலை ஏற்படுத்த பல முக்கிய சட்ட ஆவணங்கள் மற்றும் வியாபார ரீதியான ஆவணங்கள் அடங்கிய இந்த விரிவான விளக்கத்தை அளிக்கிறோம். ஜி ஸ்கொயர் ரியல்டர்ஸ் பிரைவேட் லிமிடெட், இந்திய நிறுவனங்கள் சட்டம், 1956ன் கீழ் 12 அக்டோபர் 2012 இல் பதிவு செய்யப்பட்ட நிறுவனமாகும். எங்கள் நிறுவனம் ‘ஜி ஸ்கொயர்’ என்ற பெயரில் கட்டுமானத்துறையில் இயங்கி வருகின்றது. எங்களுடைய மற்ற நிறுவனங்கள் கூட்டாக ‘ஜி ஸ்கொயர் குரூப்ஸ்’ என்று அழைக்கப்படுகின்றன. கடந்த 10 ஆண்டுகளாக, மக்கள் மத்தியில் கட்டுமானத் துறையில் மிகச்சிறந்த நிறுவனமாக எங்கள் நிறுவனம் அறியப்பட்டு வருகின்றது. தென்னிந்தியாவின் நிலங்களை வாங்கி விற்பனை செய்யும் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றாக எங்கள் நிறுவனம் அறியப்படுகின்றது. மிக உயரிய வாடிக்கையாளர்களை கொண்ட நிறுவனம்.

தொழில் முன்னோடிகளாக திகழும் பல்வேறு முன்னணி நிறுவனங்களுக்கு இதுவரை 1000 ஏக்கருக்கு மேற்பட்ட நிலங்களை சிறப்பான முறையில் விற்பனை செய்துள்ளோம். இதன் மூலமாக 25,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் பாலமாக இருந்து, பல்லாயிரக்கணக்கான குடும்பங்களின் வருமானத்திற்கு வழி செய்துள்ளோம். கட்டுமானத்துறையில் எங்களின் சிறப்பான செயல்பாடுகளுக்காக எங்களுக்கு “பெஸ்ட் லக்ஸூரியஸ் பிளாட்டட் டெவலப்பர்’ மற்றும் ‘பெஸ்ட் பிளாட்டட் டெவலப்மண்ட்’ ஆகிய விருதுகளை டைம்ஸ் பிசினஸ் விருதுகள் குழு வழங்கி சிறப்பித்துள்ளன. எங்கள் சாதனைகள் தொடர்பாக பல்வேறு பத்திரிகைகளும் செய்திகளை வெளியிட்டுள்ளன (2019க்கு முன்பே). எங்கள் நிறுவனமான, ஜி ஸ்கொயர் ரியல்டார்ஸ் பிரைவேட் லிமிடெட், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காகவும், சமூக நடவடிக்கைகள் மூலமாகவும் செய்துள்ள சில முக்கிய விஷயங்களை தங்களுக்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

சமூக அக்கறை உள்ள ஒரு பொறுப்பான நிறுவனமாக நாங்கள் செய்துள்ள சில முக்கிய சமூக செயல்பாடுகளை இங்கே குறிப்பிட்டுள்ளோம். கொரோனா தொற்று காலத்தில் எங்கள் நிறவனம் சார்பில் 4,800 படுக்கைகளை மருத்துவமனைகளுக்கு வழங்கியிருக்கிறோம். 1,000 க்கும் மேற்பட்ட பசுமாடுகளை இறைச்சிக்கூடங்களில் இருந்து மீட்டு பராமரித்து வருகின்றோம். வீதிகளில் விடப்பட்ட 4,000 க்கும் மேற்பட்ட தெரு நாய்களை காப்பாற்றி அவற்றை பாதுகாத்து வருகின்றோம். சுற்றுச்சூழல் சார்ந்த பல முக்கிய நிகழ்ச்சிகளை நடத்தி மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கின்றோம் என்பதையும் தங்களின் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறோம்.

எங்கள் நிறுவனத்தில் தற்போது நேரடியாக 1,300 பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர், மறைமுகமாக 2,000 வேலைவாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்துள்ளோம். இதன் மூலம் எங்கள் நிறுவனம் மூலம் 3,300 குடும்பங்கள் வாழ்வாதாரம் பெற்றுள்ளன. மேலும் நாட்டின் பொருளாதாரத்திற்கு வலு சேர்க்கும் விதமாக, முத்திரை வரி,பதிவு கட்டணம் மூலமாக ரூ.125 கோடியும், வரியாக ரூ.300 கோடியும் எங்கள் நிறுவனம் செலுத்தி இருக்கிறது. நாட்டின் பொருளாதாரத்திற்கு வலு சேர்க்கும் நிறுவனமாக, சட்டங்களுக்கு உட்பட்டு செயல்படுபவர்களாக நாங்கள் இயங்கி வருவதை பெருமிதத்தோடு இங்கு பதிவு செய்கின்றோம்.

எங்கள் நிறுவனத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கோடு சில தனிநபர்கள் வெறுப்பு பிரசாரத்தில் இறங்கியிருப்பதை உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகின்றோம். ஆனால், மே மாதம் 2021 ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்த பிறகே எங்கள் நிறுவனம் சிறப்பாக செயல்பட்டு லாபம் மீட்டுவதாகவும், ஊழல்களில் ஈடுபட்டுள்ளதாகவும் பல கட்டுக்கதைகளும், எந்த தரவுகளும் இல்லாத வதந்திகளும் திட்டமிட்டு பரப்பப்பட்டு வருகின்றன. நீங்கள் வெளியிட்டுள்ள சில புள்ளி விவரங்களும் இந்த வதந்திகளின் அடிப்படையாய் வைத்தே உருவாக்கப்பட்டுள்ளதாக அறிகிறோம். இந்த தவறான செய்திகள் எதிர்பாராத விதமாக தங்கள் மூலமாக தற்போது ஊடகங்களிலும், மக்கள் மத்தியிலும் வெளியிடப்பட்டுள்ளன.

தாங்கள் தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகள் முற்றிலும் தவறானவை. மேலும் இவற்றில் எந்த முகாந்திரமும் இல்லை. திமுக ஆட்சியமைப்பதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே எங்கள் நிறுவனம் வியாபாரத்தில் ஈடுபட்டுவருகிறது. நிலங்களை வாங்கி விற்கும் பல்வேறு திட்டங்களை வெற்றிகரமாகவும், சட்டத்திற்கு உட்பட்டும் நாங்கள் செய்து முடித்ததற்கு, எங்கள் நிறுவனத்தின் செயல்பாடுகள் பற்றி பல்வேறு ஊடகங்களில் வந்துள்ள செய்திகளே சாட்சி. இதுமட்டுமல்லாமல் இந்திய அளவில் பல்வேறு தினசரிகளில் விளம்பரங்களை வெளியிடுபவர்களாகவும் நாங்கள் இருந்துள்ளோம். கொரோனா பெருந்தொற்றுக்குப் பின், நகரங்களில் தனி வீடுகளுக்கான தேவை அதிகரித்தது. அதன்படி, எங்கள் நிறுவனத்திற்கு இருந்த முன் அனுபவத்தின் மூலமாக நகரங்களுக்குள் காலி இடங்களை கண்டறிந்து வீட்டு மனைகளாக மாற்றினோம்.

இதுவரை நாங்கள் கட்டிடங்கள் கட்டிய பகுதிகளில் மற்ற கட்டுமான நிறுவனங்கள் அடுக்குமாடி குடியிருப்புகளையே கட்டி வந்தன. நாங்கள் அந்த பகுதிகளில் தனி வீடுகளை உருவாக்கியது எங்கள் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. நீங்கள் வெளியிட்ட, எங்கள் நிறுவனமான ஜி ஸ்கொயர் குறித்து நீங்கள் குறிப்பிட்ட அனைத்து தகவல்களும் உண்மைக்குப் புறம்பானவை என்பதையும், அவதூறு பரப்பும் வகையில் கூறப்பட்டவை என்பதையும் தங்களுக்கு தெரிவித்து கொள்கிறோம்.

நீங்கள் வெளியிட்ட வீடியோவில் ‘ஜி ஸ்கொயர்’ரின் உரிமையாளர்கள் திமுகவின் முதல் குடும்பத்தினர் என்றும், நிறுவனத்தின் மொத்த வருமானம் ரூ.38,827.70 கோடி என்றும், இது ஊழல் பணம் என்றும் குறிப்பிட்டுள்ளீர்கள். இது பொய்யான தகவல். மேலும் இதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை. இந்த உண்மைக்கு புறம்பான தகவல் உங்கள் கட்சியின் தமிழ்நாடு பாஜ டிவிட்டரில் வெளியிடப்பட்டுள்ளது. நீங்கள் வெளியிட்டுள்ள இந்த வீடியோ அதிகமாக பகிரப்பட்டும் வருகின்றது.

எங்கள் நிறுவனம் ‘திமுகவின் முதல் குடும்ப உறுப்பினர்களுக்கு சொந்தமானதோ அல்லது அவர்களின் கட்டுப்பாட்டிலோ இல்லை’ என்பதை தங்களுக்கு தெளிவுப்படுத்துகின்றோம். மேலும் இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை, இவற்றுக்கு எந்த முகாந்திரமும் இல்லை. தேசிய கட்சியில் பொறுப்புமிக்க பதவியில் இருக்கும் உங்களை போன்ற ஒரு நபர் இது போன்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைப்பது மிகவும் வருத்தமளிக்கின்றது. வீடியோ வெளியிடும் முன் எங்களிடம் கேட்டிருந்தால் இந்த சர்ச்சைகளுக்கு முறையான விளக்கங்களை வழங்கியிருப்போம். மேலும் நீங்கள் குறிப்பிட்டுள்ள எங்கள் நிறுவனத்தின் சொத்து மதிப்பு தவறானதாகும். ஒரு நிறுவனத்தின் சொத்து மதிப்பென்பது நிறுவனங்களின் பதிவேட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும். அது மக்கள் பார்வைக்கும் கிடைக்கும்.

எங்கள் சொத்துமதிப்பு ரூ.38,827.70 கோடி என நீங்கள் குறிப்பிட்டிருப்பதை நாங்கள் மறுக்கிறோம். ஜி ஸ்கொயர் மற்றும் எங்கள் பங்குதாரர்களின் கட்டுமான திட்டங்களை தவறான மதிப்புகளோடு நீங்கள் சித்தரித்துள்ளீர்கள். எங்களுடைய பல கட்டுமான திட்டங்கள் பிற நிறுவனங்களின் கூட்டு முயற்சியோடு செயல்படுத்தப்படுகின்றன. சில இடங்களில் நாங்கள் வாங்கி விற்கும் நபராக செயல்படுகின்றோம். நிறுவனத்தின் வருமானமாக நீங்கள் குறிப்பிட்டுள்ள ரூ.38,827.70 கோடி மொத்த நிலத்தையும் நாங்களே வாங்கி வைத்திருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. இணையத்திலும், எங்களிடமும் உள்ள வில்லங்கச் சான்றிதழ்களின் மூலம் பல்வேறு கால கட்டங்களில் 6,000 க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு நாங்கள் மனைகளை விற்றதை அறியமுடியும்.

பல வாடிக்கையாளர்கள் வங்கி கடன்களின் மூலமாகவே எங்களிடம் நிலங்களை வாங்கியுள்ளனர். நீங்கள் வைத்துள்ள ஆதராமற்ற குற்றச்சாட்டுகள், கடினமாக உழைத்து ஈட்டிய பணம் மூலமும், வங்கிகளில் கடன் பெற்று நிலம் வாங்கிய வாடிக்கையாளர்களை இழிவுப்படுத்துவதாக அமைந்துள்ளது. முறையான பண பரிவர்த்தனைகளின் மூலம் பெறப்பட்ட பணமானது மற்ற திட்டங்களுக்காக செலவழிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே விற்கப்பட்ட மனைகளின் மதிப்போடு, பழைய மதிப்புகளையும் கூட்டி தவறான வருவாயை காட்டியுள்ளீர்கள். நிறுவனத்தின் வருமானமாக நீங்கள் குறிப்பிட்டுள்ள தொகை முற்றிலும் தவறானதாகும். நாங்கள் வாங்கி விற்ற நிலங்களுக்கு எங்களிடம் முறையான ஆதாரங்கள் இருக்கின்றன. தற்போது எங்கள் இணையப் பக்கத்தில் நாங்கள் குறிப்பிட்டுள்ள திட்டங்களில், 22 திட்டங்கள் ஏற்கனவே வாடிக்கையாளர்களுக்கு முழுமையாக விற்பனை செய்யப்பட்டு விட்டன.

இந்த மனைகளை வாங்கிய வாடிக்கையாளர்கள் பட்டா மாற்றம் செய்து கட்டுமானத்தையே தொடங்கிவிட்டனர். சில திட்டங்களில் பூர்வாங்க ஒப்பந்தங்கள் மட்டுமே போடப்பட்டுள்ளன, ஆனால் நீங்களோ அனைத்துமே ஜி ஸ்கொயர் நிறுவனத்தின் சொத்து என குறிப்பிட்டுள்ளீர்கள். முறையான ஆய்வு செய்தால், நீங்கள் முன் வைத்த குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்பது தங்களுக்கு தெரியவரும். இதனை நிரூபிக்க தேவையான சில பின்ணிணைப்புகளையும் இங்கே இணைத்துள்ளோம். ஜி ஸ்கொயர் மற்றும் குழு நிறுவனங்களின் சொத்துமதிப்பு என நீங்கள் குறிப்பிட்டுள்ள தொகை முற்றிலும் தவறானது. இது தவறான முறையில் நாங்கள் சொத்து சேர்த்திருப்பதாக மக்களை நம்பவைக்கும்படி ஜோடிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதற்கிடையில் ஜி ஸ்ெகாயர் நிறுவனத்துக்குச் சொந்தமான 50 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

Related Posts

error: Content is protected !!