ஊழல் வழக்கில் உள்ளே போன ஏர்மார்ஷல் தியாகிக்கு ஜாமின்!

ஊழல் வழக்கில் உள்ளே போன ஏர்மார்ஷல் தியாகிக்கு ஜாமின்!
பிரதமர் உள்ளிட்ட மிக மிக முக்கிய பிரமுகர்கள் பயணம் செய்வதற்கான 12 ஹெலிகாப்டர்களை ரூ.3 ஆயிரத்து 767 கோடி மதிப்பில் வாங்க இத்தாலியை சேர்ந்த அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. இதில் நடைபெற்ற முறைகேடுகளில் விமானப்படை முன்னாள் தளபதி எஸ்.பி.தியாகிக்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக அவர் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்தது. இந்நிலையில், இந்த வழக்கில், எஸ்.பி.தியாகி, அவருடைய உறவினர் சஞ்சய் தியாகி, டெல்லியை சேர்ந்த வக்கீல் கவுதம் கேதான் ஆகியோரை 9-ம் தேதி சி.பி.ஐ. கைது செய்தது.
thiyagi dec 26
இதற்கிடையே, கைது செய்யப்பட்ட 3 பேரையும் 10 நாள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்குமாறு டெல்லி கோர்ட்டில் சி.பி.ஐ. வக்கீல்  கேட்டுக்கொண்டார். அதற்கு எஸ்.பி.தியாகியின் வக்கீல் எதிர்ப்பு தெரிவித்தார். ஏற்கனவே பலதடவை விசாரித்து விட்டதால், காவலில் வைத்து விசாரிக்க தேவையில்லை என்று அவர் வாதிட்டார். இருப்பினும், தியாகி உள்ளிட்ட 3 பேரையும் 14-ந்தேதிவரை 4 நாட்கள் சி.பி.ஐ. காவலில் வைத்து விசாரிக்க மாஜிஸ்திரேட்டு சுஜித் சவுரவ் அனுமதி அளித்தார். இதனைத் தொடர்ந்து எஸ்.பி. தியாகி தரப்பில் ஜாமீன் கோரி கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
மனுவை விசாரணை செய்த சிபிஐ சிறப்பு நீதிபதி அரவிந்த் குமார் தியாகிக்கு ஜாமீன் வழங்கினார். 2 லட்சம் ரூபாய் பிணைத் தொகை கட்ட வேண்டும் மற்றும் அதற்கு சமமான உத்தவாதம் அளிக்கப்படவேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. இதே வழக்கில் கைது செய்யப்பட்ட  சஞ்சய் தியாகி, டெல்லியை சேர்ந்த வக்கீல் கவுதம் கேதான் ஆகியோரது ஜாமீன் மனுக்கள் மீது ஜனவரி 4-ம் தேதி விசாரணை நடைபெற உள்ளது.

Related Posts